சூரியன்: லக்னத்திற்கு 3, 6, 10, 11 ஆகிய இடங்களில் பரிதி எனப்படும் சூரியன் நின்றால் அந்த ஜாதகனின் வீடு தெய்வத்தால் காக்கப்படும். அத்தகையோனுக்கு நல்ல வாகன யோகமும் சத் விஷயங்களில் ஞானமும் அறிவு கூர்மையும் உண்டாகும். அரசாங்கத்தால் ஆதரவும் புதல்வர்களுக்கு யோகமும் ஏற்படும். அஞ்சா நெஞ்சனாக பகைவர்களை ஒழித்து வீரனாக விளங்குவான். அதே சமயத்தில் 2, 3, 4, 5, 7 ஆகிய இடங்களில் சூரியன் நின்றால் அந்த ஜாதகன் சொற்ப அளவே பலன் பெறுவான். மேலும் வியாதி, கண்ணோய் முதலியன உண்டாகும். ஈனத் தொழில் செய்பவர்களின் விரோதமும் ஏற்படும்.
சந்திரன்: நன்மை தரும் சந்திரன் 1, 4, 7, 10 ஆகிய கேந்திர ஸ்தானங்களிலும் 5, 9 எனும் திரிகோண ஸ்தானங்களிலும் தன ஸ்தானமான 2ம் இடத்திலும் லாப ஸ்தானமான 11ம் இடத்திலும் நிற்பாரேயாகில் நிறைந்த வருமானமும் நல்ல வீடும் விளை நிலமும் பசு மாடுகளும் சேர்ந்து வளமான வாழ்க்கை அமையும். இந்த ஜாதகனுக்கு மிகவும் சுகமும் சொந்த நாட்டிலும் பிற நாட்டிலும் அரசாங்க ஆதாயம் அதிகம் உண்டாகும். அதே சமயத்தில் பாவக் கிரகங்களின் பார்வை சந்திரனுக்கு இல்லாமல் இருப்பது முக்கியம்.
வெற்றி கொள்ளும் சந்திரன் 3, 5, 7, 11 ஆகிய இடங்களில் தனித்து நிற்க அத்தகைய ஜாதகன் பெரும் செல்வம் படைத்தவன். மந்திரங்கள் அறிந்து முறைப்படி பிரயோகித்து வெற்றி காண்பான். வாக்குவாதம் செய்வதில் வல்லவன். மருத்துவம் படித்து அத்துறையில் சிறந்து விளங்குவான். நல்ல வருமானம் பெற்று அவன் குடும்பம் விருத்தி அடையும். பகைவர்கள் அழிவார்கள். ஏனைய மற்ற இடங்களில் சந்திரனால் பலன் இல்லை. எனினும் மற்ற கிரகங்களின் சேர்க்கை மற்றும் பார்வைக்கேற்றவாறு பலன்கள் அமையும்.
குரு: வியாழன் எனப்படும் குரு பகவான் 4, 7, 10, 1, 5, 9 மற்றும் 2, 11 ஆகிய இடங்களில் இருந்தால் அந்த ஜாதகனுக்கு பிரபலமான யோகங்கள் உண்டாகும். லட்சுமி கடாட்சம் பரிபூரணமாக இருக்கும். பொன், பொருள் அதிகம் சேரும். மேலும் 2ம் இடத்தின் அதிபதி குருவைப் பார்க்க இவன் கீழ் பலர் வேலை செய்ய பல குடும்பங்களை ஆதரிப்பான். குரு 8ம் இடத்தில் நின்றால் மனைவியிடம் பகை கொண்டவனாகவும் விரோதிகளால் கண்டம் அடைபவனாகவும் இருப்பான். பொருள் விரயம் ஆகும். பல வகைகளில் அவமானம் வந்து சேரும். 6ம் இடத்தில் குரு இருந்தால் அரசாங்க வகைகளில் பகை உண்டாகும். வியாதியால் துன்பம் ஏற்படும். 12ல் குரு நின்றால் பண விரயங்கள் உண்டாகும். இருப்பினும் அந்த வீடு குருவின் அட்சி வீடாக இருந்தால் எந்த துன்பமும் அண்டாது என்பதாம்.