திரைக்கதை - சேது
காட்சி 20
சிக்காத சிட்டு ஒண்ணு...
... பாடல் காட்சி தொடர்கிறது.
காட்சி 21 - பகல் - EXT./ கோயில்
மிட் ஷாட் - அண்ணி கோயிலுக்கு வருகிறாள். யாரையோ தேடுகிறாள். கிணற்றடியில் தண்ணீர் இறைத்துக் கொண்டிருக்கும் அபிதாவைப் பார்க்கிறாள்.
குளோஸ் ஷாட் - அபிதா அண்ணியை நிமிர்ந்து பார்க்கிறாள்.
குளோஸ் ஷாட் - அண்ணி : தலைக்கு குளிச்சியா...?
குளோஸ் ஷாட் - அபிதா பதில் சொல்லாமல் அண்ணியைப் பார்க்க...
குளோஸ் ஷாட் - அபிதாவின் தலையைத் தொட்டுக் கேட்கிறாள் அண்ணி.
அண்ணி : சரியா துவட்டக் கூடாது...?
குளோஸ் ஷாட் - அபிதா மெளனமாக குழப்பத்துடன் அண்ணியைப் பார்க்கிறாள்.
குளோஸ் ஷாட் - அண்ணி : அன்னைக்கு நீ வீட்டுக்கு வந்தப்போ, யாரோன்னு நினைச்சு நான் சரியாக்கூடப் பேசல்ல...
குளோஸ் ஷாட் - அபிதா.
குளோஸ் ஷாட் - அண்ணி : தப்பா எடுத்துக்காதே... அவன் கொஞ்சம் சிடுமூஞ்சி... ஆனா ரொம்ப நல்லவன். இந்தச் சேர்க்கைதான் சரியில்லே... எதுவாயிருந்தாலும் நீதான் கொஞ்சம் பொறுத்துப் போகணும்...
குளோஸ் ஷாட் - அபிதா : நான் எதுக்குப் பொறுத்துப் போகணும்...?
குளோஸ் ஷாட் - அண்ணி : என்னம்மா, நீயும் அவனும் ஏதோ...
குளோஸ் ஷாட் - அபிதா : இதப்பாருங்கோ... ஆத்துல சின்னவா தப்பு பண்ணுனா பெரியவா கண்டிக்கணும். இப்ப நீங்களே தப்பாப் பேசுறேளே....? நேக்கு அது மாதிரி எல்லாம் ஒண்ணுமில்லே...
என்று சொல்லிவிட்டு அந்த இடத்தை விட்டுப் போகிறாள் அபிதா.
குளோஸ் ஷாட் - அண்ணி அதிர்ச்சியாக அவைளைப் பார்க்கிறாள்.
காட்சி 22 - பகல் - EXT. டீக்கடை
மிட் ஷாட் - டீக்கடை வாசலில் நண்பர்களுடன் அமர்ந்திருக்கும் சேது தனக்குள் சிரித்துக் கொள்கிறான்.
நண்பன் : என்ன உனக்குள்ளேயே சிரிச்சுக்கிறே...?
குளோஸ் ஷாட் - சேது 'ஒன்றுமில்லை' என்பது போல் தலையாட்டுகிறான்.
நண்பன் : ஏய்... முசப் பிடிக்கிற நாயை மூஞ்சப் பார்த்தா தெரியாது... என்ன... என்ன...? சொல்லு.
குளோஸ் ஷாட் - பாக்கெட்டிலிருந்து கொலுசை எடுத்துக் காட்டும் சேது வெட்கமாக சிரிக்கிறான்.
குளோஸ் ஷாட் - நண்பன் : சிய்யான்,யாருடா உனக்கு இதெல்லாம் சொல்லிக் கொடுத்தா....?
குளோஸ் ஷாட் - சேது கையில் கொலுசை வைத்துக் கொண்டு வெட்கமாக சிரிக்கிறான்.
நண்பன் : பாருடா.. வெட்கம் வேறயா...?
மிட் ஷாட் - அபிதாவின் முறைப்பையன் அம்பி, அபிதாவை டூ வீலரில் கூட்டிக் கொண்டு போவதை சேது பார்க்கிறான்.
சேது : யாருடா அது...? அவ அண்ணனா...?
குளோஸ் ஷாட் - நண்பன் : அது அம்பின்னு... அபிதாவோட முறைப்பையன்...
சேது : ம்...
அதிர்ந்து அம்பி போன திசையைப் பார்க்கிறான் சேது.
நண்பன் : இல்லையில்லை... சும்மா பேசி வச்சிருக்கா அவ்வளவுதான்.
மிட் ஷாட் - அம்பியின் டூ வீலரிலிருந்து அபிதா இறங்கிப் போகிறாள். அம்பி பாட்டை 'ஹம்' பண்ணியபடி திரும்புகிறான். நண்பன் சொல்கிறான்.
குளோஸ் ஷாட் - நண்பன் : சிய்யான், உன் லவ் மேட்டர் லீக் அவுட் ஆக்டுச்சுன்னு நினைக்கிறேன். அதுதான் கைபாம் கூடவே வர ஆரம்பிச்சுட்டான்.
குளோஸ் ஷாட் - சேது டென்ஷனாகிறான்.
மிட் ஷாட் - பாலத்தில் அம்பி டூவீலரில் திரும்பி வருகிறான்.
குளோஸ் ஷாட் - சேது : அவனைப் பிடிச்சு அமுக்குடா...
மிட் ஷாட் - அம்பி. அருகில் வந்ததும் சேதுவின் நண்பன் பாய்ந்து வண்டியை மறித்து நிறுத்துகிறான்.
குளோஸ் ஷாட் - டீக்கடைக்காரர் பார்க்கிறார்.
மிட் ஷாட் - அம்பியின் வண்டியை ஸ்டாண்டு போட்டு நிறுத்திவிட்டு அம்பியை அழைத்து வருகிறான் நண்பன்.
அம்பி : யாருப்பா நீ? என்ன வேணும் நோக்கு?
நண்பன் : நீங்கதான் வேணும்... வாங்க.. மாஸ்டர் ஒரு டீ....
இன்னொருவன் : டீ இல்ல... நர்சுஸ் காபி... வட்ட கப்புல்ல...
அம்பி : அதெல்லாம் ஒண்ணும் வேணாம். நேக்கு பூஜைக்கு நாழியாகுறது. சொல்லுங்கோ...
நண்பன் : சார் யாருன்னு தொரியுதா?
சேதுவை அம்பிக்குக் காட்டிக் கேட்கிறான் சேதுவின் நண்பன்.
சேது இறுக்கமாக உட்கார்ந்திருக்கிறான். மிட் ஷாட் - அம்பி சேதுவைப் பார்க்கிறான்.
அம்பி : தெரியலையே...
நண்பன் : சொந்த பந்தத்தைக்கூடி தெரிஞ்சுக்காமா அப்படி என்ன சாமி பூஜை வேண்டிக் கிடக்கு...?
அம்பியின் கன்னத்தில் செல்லமாக இடிக்கிறான்.
அம்பி : சொந்தமா..? எப்படி சொந்தம்...? தோப்பனார் பேரென்ன...?
நண்பன் : என்னடா இவன்? என்னென்னவோ சொல்கிறான்...?
குளோஸ் ஷாட் - ஊமைப்பெண் சிரிக்கிறாள்.
குளோஸ் ஷாட் - அம்பியின் தோளில் கை வைத்தபடி சொல்கிறான் நண்பன்.
நண்பன் : இது வேறே.. நம்ம அபிதா இல்ல...? அந்த ரூட்ல சொந்தம்.
குளோஸ் ஷாட் - சேது சொடுக்குப் போட்டு அம்பியை அழைக்கிறான். குளோஸ் ஷாட் - அம்பி பயத்துடன் சேது அருகில் வருகிறான்.
குளோஸ் ஷாட் - நண்பன் : போங்க...
குளோஸ் ஷாட் - அம்பியை உட்காரச் சொல்லி சைகை காட்டுகிறான் சேது. அவன் பக்கத்தில் அம்பி உட்காருகிறான்.
சேது : பெரிய எஸ்காடா நீ...? இந்தப் பார் நேத்துத்தான் நான் எல்லாம் பேசி கரெக்ட் பண்ணி வச்சிருக்கேன்... இடையிலே புகுந்து ஆட்டையைக் கலைக்கணுமுன்னு நினைச்சே... இனிமே இந்த வண்டியிலே கூட்டிப் போற ஜோலி எல்லாம் விட்டுடு... அவளோட சேர்த்துவச்சு எங்கேயாவது உன்னை நான் பார்த்தேன்...
அம்பியை மிரட்டும் சேது அவனை சைகையாலே போகும்படி சொல்ல, பயந்தபடி அம்பி போகிறான்.
|