
இருபதாம் நுற்றாண்டின் தமிழக வரலாற்றிலும் தமிழ் இலக்கிய வரலாற்றிலும் தமிழ்ப் பேராசிரியர் டாக்டர் மு.வரதராசனார் அவர்களின் சீரிய தமிழ்த் தொண்டு முதன்மையான இடம் பெறுவதாகும்.
அவர் ஈடு இணையற்ற பெரும் எழுத்தாளராக விளங்கினார். உலகத் தமிழர்களின் உள்ளங்களைக் கவர்ந்த முதல் தமிழராக அவர் திகழ்ந்தார். "மு.வ." என்ற செல்லப் பெயர் ஒலிக்காத தமிழ் இல்லங்களும் நல் உள்ளங்களும் இல்லை எனலாம்.
குடும்ப வாழ்வு :
அவர், அருமை அன்னை அம்மாக்கண்ணம்மாளுக்கும் அறிவில் சிறந்த தந்தை முனுசாமி அவர்களுக்கும் செல்லப் பிள்ளையாக 25.4.1912 ஆம் ஆண்டு வட ஆர்க்காடு மாவட்டத்திலுள்ள திருப்பத்துரிலே பிறந்தார். அவரது தாய்வழிப் பாட்டி அவரை அன்புடன் வளர்த்தார். முதலில் அவருக்கு வழங்கிய பெயர் திரு.வேங்கடமாகும். தாத்தாவின் பெயரை இடுதல் என்னும் குடும்ப மரபுப்படி வழங்கிய பெயரே "வரதராசன்" என்பதாகும்.
அவர் 1935ஆம் ஆண்டு தம் மாமன் மகளான ராதா அம்மையாரை மணந்தார். அவருக்கு ஆண்மக்கள் மூவர் உள்ளனர். அவர்கள் முறையே திருநாவுக்கரசு, நம்பி, பாரி ஆகியோர் ஆவர். அம்மூவரும் மருத்துவத் துறையில் மணிகளாகத் திகழ்கின்றனர்.
அவர் வேலத்திலும் வாலாசாவிலும் தொடக்கக் கல்வியைக் கற்றார். உயர்நிலைப் பள்ளிப் படிப்பை அவர் திருப்பத்துரில் பயின்றார். அவர் முருகைய முதலியாரிடம் தமிழ்க் கற்றுப் புலவர் முதல் நிலைத் தேர்வில் தேர்ச்சி பெற்றார். பின்னர் அவர் 1935 ஆம் ஆண்டு தமிழ்ப் புலவர் தேர்வு எழுதி சென்னை மாநிலத்திலேயே முதல்வராகத் தேர்ந்து ரூ.1000 திருப்பனந்தாள் பரிசு பெற்றார். அவர் 1939இல் பி.ஓ.எல் பட்டமும் பெற்றார்.
1958 இல் சென்னைப் பல்கலைக் கழகத்திலேயே முதன் முதலாகத் தமிழில் டாக்டர் பட்டம் பெற்றார் அவரே, 1972ஆம் ஆண்டில் அமெரிக்காவிலுள்ள ஊஸ்டர் கல்லுரி அவருக்கு இலக்கியப் பேரறிஞர் (டி.லிட்) என்ற சிறப்புப் பட்டத்தை நல்கிப் பெருமைப்படுத்தியது. அமெரிக்கப், பல்கலைக் கழகம் ஒன்றில் "டி.லிட்" என்னும் சிறப்புப் பட்டம் பெற்ற முதல் தமிழறிஞர் மு.வ. அவர்களே ஆவார்.
தொழில்
அவர் 1928இல் முதன்முதல் தாலுக்கா அலுவலகத்தில் எழுத்தராகப் பணிபுரிந்தார். 1935ஆம் ஆண்டு முதல் நகராட்சி உயர்நிலைப் பள்ளியில் தமிழ்ஆசிரியராகப் பணியாற்றினார். 1939 முதல் 1944 ஆண்டு வரை டாக்டர் ஆ.லட்சுமணசாமி முதலியார், அவர்களின் நல்லுதவியுடன் தமிழ் விரிவுரையாளராகப் பச்சையப்பன் கல்லுரியில் பணியாற்றினார். 1955ஆம் ஆண்டு அக் கல்லுரியிலேயே தமிழ்த் துறைத் தலைவர் ஆனார். இடையே ஓராண்டு சென்னைப் பல்கலைக் கழகத்தில் துணைப் பேராசிரியராகப் பணி புரிந்தார். அறிஞர் ரா.பி. சேதுப்பிள்ளை அவர்களின் மறைவுக்குப் பிறகு 1961 முதல் 1971 வரை சென்னைப் பல்கலைக் கழகத்தில் தமிழ்த்துறைத் தலைவராகப் பணியாற்றினார். 1971 முதல் 1974 ஆம் ஆண்டு வரை மதுரைப் பல்கலைக் கழகத்தின் புகழ் மிக்க இணையற்ற துணைவேந்தராகப் பணி புரிந்தார்.
அவர் பங்கேற்ற துறைகள் :
அவர் பல்வேறு துறைகளில் ஈடுபாடு கொண்டிருந்தார். அவர் சென்னை, திருவேங்கடவன், அண்ணாமலை ஆகிய பல்கலைக் கழகங்களின் பேரவை (செனட்) அங்கத்தினராக இருந்தார். மேலும் அவர் கேரளம், மைசூர், உஸ்மானியா, பெங்களூர், ஆந்திரா, டில்லி, கேம்பிரிஜ், மதுரை முதலிய பல்கலைக் கழகங்களின் பாடத்திட்டக் குழுவில் இருந்தார். அவர் இலங்கை, மலாயா, காசி, உத்கல் முதலிய பல்கலைக் கழகங்களோடு தொடர்பு கொண்டிருந்தார்.
அவர் புதுடில்லியில் உள்ள சாகித்திய அகாடெமி, பாரதிய ஞானபீடம், தேசியப் புத்தகக் குழு, இந்திய மொழிக்குழு, சென்னைப் பல்கலைக் கழகம் தயாரித்த ஆங்கிலம் தமிழ் அகராதிக் குழு, நாட்டுப் புறப்பாடல்களும் நடனங்களும் பற்றிய குழு முதலியவற்றில் அங்கம் வகித்தார்.
அவர் தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வு ஆணைக்குழுவிலும், ஆந்திரப் பிரதேச அரசுப் பணியாளர் தேர்வு ஆணைக் குழுவிலும் மகாராட்டிர சமிதி மண்டலத்திலும் பங்கு கொண்டிருந்தார்.
தமிழ்நாடு புத்தக வெளியீட்டுக்கழகம், ஆட்சி மொழிக்குழு, ஆட்சி மொழிச் சட்டக்குழு, தமிழ் வளர்ச்சிக் கழகம், தமிழ்க் கலைமன்றம், தமிழிசைச் சங்கம், மாநில வரலாற்றுக் கழகம், தமிழ்க் கலைக் களஞ்சியம், தமிழகப் புலவர் குழு, உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனம் முதலியவற்றில் பங்கு கொண்டு சிறந்த தொண்டாற்றினார்.
பன்மொழிப் புலமை
அவர் தமிழ், ஆங்கிலம், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி முதலிய மொழிகளைக் கற்றுப் பன்மொழிப் புலவராகத் திகழ்ந்தார்.
உலகம் சுற்றிய முதல் பேராசிரியர் :
அவர், ரஷ்யா, மலேசியா சிங்கப்பூர், பாரீஸ், இலங்கை, இங்கிலாந்து, பிரான்சு, ஜப்பான், ஜெர்மனி, இத்தாலி, கிரேக்கம், எகிப்து, ஆப்ரிக்கா, அமெரிக்கா முதலிய உலக நாடுகளை எல்லாம் சுற்றிப் பார்த்த முதல் தமிழ்ப் பேராசிரியராக விளங்கினார்.
தோற்றப் பொலிவு :
எழில் மிக்க எடுப்பான தோற்றம், புன்னகை பூத்து பொலிவோடு விளங்கிய முகம், அறிவு முதிர்ச்சிக்கு அடையாளமான அகன்ற நெற்றி, அன்பும் அறிவும் சுழல் விளக்கு போல் சுடர்விட்டுப் பொங்கும் கண்கள், எடுப்பான கூரிய மூக்கு, உடல் நலம் காட்டும் அழகான பற்கள், நீண்ட மெல்லிய கைகள், பெண்மையின் மென்மை ஓடும் உடல், எண்ணங்களை எல்லாம் எழுத்தாக்கிய பரந்த நெஞ்சம் உடையவராக அவர் விளங்கினார்.
தனிப் பண்புகள் :
அவர் மனத்தால் கூடப் பிறருக்கு தீங்கு எண்ணாமல் சான்றோராக வாழ்ந்தார்.
ஒன்றனை இழந்தாலோ அல்லது தொலைத்து விட்டாலோ அதற்காக அவர் கவலைப்பட்டதில்லை. காரணம், அதனால் பயன் இல்லை என்பது அவரது கருத்து. வீணாக வருந்தும் நேரத்தை வேறு ஆக்க வேலைக்குப் பயன்படுத்த வேண்டும் என்பதே அவரது கொள்கை. அவர் கடமையை ஒரு போதும் மறந்ததில்லை, செய்வன திருந்தச் செய்தார். காலத்தைப் பொன்போல் போற்றினார்.
உலகக் குடிமகளின் பெருவாழ்வு
அவர் எண்ணத்தால், எழுத்தால், செயலால், சொல்லால், பலருக்கு "நல்வாழ்வு" தந்து உலகக் குடிமகனாக உயர்ந்தார். சுருங்கக் கூறின், அவர்
அன்பில் நெகிழ்வு
அறிவில் தெளிவு
ஆக்கத்தில் ஊக்கம்
வாழ்வில் எளிமை
உண்மையில் உயிர்ப்பு
உழைப்பில் ஓய்வின்மை
கொள்கையில் உறுதி
இயற்கையில் ஈடுபாடு
துன்பத்தில் துணைநிலை
புலமையில் ஆழம்
ஆராய்ச்சியில் நடுநிலைமை
இல்லத்தில் துறவு
பதவியில் பகட்டு இன்மை
புரட்சியில் முதன்மை
பண்பில் சால்பு
அறத்தில் நம்பிக்கை
புகழில் மயங்காநிலை
செல்வத்தில் செருக்கின்மை
விளம்பரத்தில் விருப்பின்மை
தமிழில் தமிழ் நெஞ்சம்
கொண்டவர் ஆவார். நம் நெஞ்சம் மறவாத தமிழ் நெஞ்சத்தின் பெருவாழ்வு இதுவே.
பெருமகன் போற்றிய பெருமக்கள் :
காந்தியடிகள், திரு.வி.க., தாயுமானவர், இராம தீர்த்தர், இராமலிங்க சுவாமிகள், இராமகிருஷ்ணர், விவேகானந்தர், திருநாவுக்கரசர், மாணிக்கவாசகர், நம்மாழ்வார், கவிஞர் தாகூர், காண்டேகர், பெர்னாட்ஷா, சோமர்செட்மாம் முதலியோர் அவர் விரும்பிப் போற்றிய பெருமக்கள் ஆவார்.
உயிருள்ள படைப்புகள் :
தமிழ்த்தாயின் தலைமகனாக விளங்கிய அவர் 62 வயதில் 55 நுல்கள் எழுதி இணையிலாப் புகழ் பெற்றார். பல்வகையான முதல் தரமான நுல்களைத் தந்த தமிழ் சுரங்கமாக அவர் விளங்கினார்.
மறைவு :
உயிரோவியங்கள் பல படைத்துப் பிறர் உள்ளங்களைக் கவர்ந்த அவரது உடல் 10.10.1974 ஆம் ஆண்டு சென்னையில் மறைந்தது.
பிறர் உள்ளங்களைக் கவர்ந்த அவரது உடல் 10.10.1974 ஆம் ஆண்டு சென்னையில் மறைந்தது.