New Register   -  Login     
Tamil Mozhi - Dataware House
 - தமிழ்மொழி முகப்பு » தமிழ் களஞ்சியம் » தமிழ் அறிஞர்கள் »
சேனல்கள்
இணைப்புகள்
இலக்கிய நூல்கள்
கவிதைகள்
கதைகள்
புதினங்கள்
தமிழக அம்சங்கள்
ஆன்மீக செய்திகள்
மந்திரங்கள்
வேத ஜோதிடம்
நியூமராலஜி
ஆரூடங்கள்
மாயப் படங்கள்
3D படங்கள்
விளையாட்டு
லொல்லு சபா
சமையல் குறிப்புகள்
கோலங்கள்
மகளிர் கட்டுரைகள்
மருதாணி
கடி ஜோக்ஸ்
சர்தார்ஜி ஜோக்ஸ்
முட்டாள் ஜோக்ஸ்
இயற்கை மருத்துவம்
சித்த மருத்துவம்
விளம்பரங்கள்
தமிழ் அறிஞர்கள்
பேராசிரியர் சேதுப்பிள்ளை 
 
பிரதி எடுக்க  நண்பருக்கு அனுப்ப
 
 
முன்னுரை :

dr.Seduppillai'செந்தமிழுக்குச் சேதுப்பிள்ளை (1) என்று போற்றினார் சுத்தானந்த பாரதியார்.

இப்புகழுரை பல்லாற்றானும் பொருள் செறிந்த பொன்னுரையே என்பதைப் பேராசிரியர் சேதுப்பிள்ளையின் தமிழுருவான தொண்டு வாழ்க்கையை எண்ணிப் பார்ப்பவர் எவரும் எளிதில் உணர்ந்து இன்புறுவர் செந்தமிழ்ப் பேச்சுக்கும் செந்தமிழ் எழுத்துக்கும் மட்டுமன்றி, செந்தமிழ் வாழ்வுக்குமே பேராசிரியர் அவர்கள் ஏறத்தாழ அரை நுற்றாண்டுக்காலம் ஆற்றியுள்ள அருந்தமிழ்த் தொண்டு தமிழக வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கத்தகும்.

பேராசிரியர் ஆற்றிய தொண்டின் பயனையும் பெருமையையும் பேராசிரியர் டாக்டர் மு.வரதராசனார் அவர்கள் உண்மையும் உணர்ச்சியும் கலந்த உரைகளால் ஏழு ஆண்டுகட்கு முன்பே கோவை மாநகரில் பூ.சா.கோ. கலைக் கல்லுரியில் நிகழ்த்திய கலைவிழாப் பேச்சொன்றில் எடுத்து விளக்கியுள்ளமை ஈண்டு நினைந்து மகிழ்தற்குரியது.

டாக்டர் மு.வ.அவர்கள் வாசகம் வருமாறு :- 'தமிழ் இலக்கிய அரங்கிலே மாறுதல் செய்தார் சேதுப்பிள்ளை. சென்னையிலே இலக்கியக் கூட்டங்களானால் 50 பேர் வந்துகொண்டிருந்தனர். தம்முடைய சொற்பொழிவுகளின் மூலம் 50-ஐ 50,000 ஆக்கித் தந்தவர் அவர். தமிழுக்கு ஒரு நல்லது என்றால், அவர் உடலிலே தெம்பு; முகத்திலே உவகை. தமிழுக்கு ஓர் இடையூறு என்றால், அவர் உடலிலே தளர்ச்சி; முகத்திலே கவலை. இப்படியாக அவர் தமிழைத் தம் வாழ்வோடு வாழ்வாக இணைத்து வாழ்கிறார்.

இராசவல்லிபுரம் :

இத்தகு பெருமை வாய்ந்த பேராசிரியரின் வாழ்க்கை இற்றைக்கு அறுபத்தைந்து ஆண்டுகட்கு முன்னே 'திக்கெல்லாம் புகழும் திருநெல்வேலி'க்கு அண்மையில் அமைந்துள்ள அழகிய சிற்றுராகிய இராசவல்லிபுரத்தில் அரும்பியது. பொருநை ஆற்றங்கரையில் பொலிவுடன் விளங்கும் இராசவல்லிபுரம் இயற்கை அமைதியும், இறையருளும், வரலாற்றுச் சிறப்பும் நிரம்பப் படைத்த பெருமை உடையது. இவ்வுண்மையைப் பிறந்த மண்ணின் பெருமை பேசும் நன்றி சான்ற நல்லுள்ளத்தோடு பேராசிரியர் அவர்களே தமது அழகிய கட்டுரை ஒன்றிலே ஆர்வத்தோடு குறிப்பிடுதலைக் காணலாம். அச்சொல்லோவியம் வருமாறு : (3)

"பொருநையாற்றின் கரையிலே செப்பறை என்றொரு தலம் உண்டு; தனியே அதற்கொரு நலம் உண்டு. சோலையும் வயலும் சூழ்ந்த அத்திருப்பதியில் தனக்குவமையில்லாத் தலைவன் தன்னந்தனியனாய்த் தாண்டவம் புரிகின்றான்.

"இத்தகைய செப்பறையைச் சேர்ந்தசிற்றுர் இராசவல்லிபுரம் எனப்படும். பயிர்த்தொழில் செய்யும் கார் காத்த வேளாளர் பண்புற்று வாழும் அவ்வூரில் அகிலாண்ட நாயகி கோயில் கொண்டுள்ளாள். அவ்வம்மையை மதுரத் தமிழாற்பாடினார் மாதவச் சிவஞான முனிவர்.

அருள்ஞான வாரியே!
ராசைமே வியசெல்வ
அகிலாண்டம் என்னும் அரசே!
என்பது அவர் திருவாக்கு".

பெருமாள் பிள்ளை சொர்ணம்மாள் :

சிறப்பு வாய்ந்த இச்சிற்றுரில் கார்காத்த வேளாளர் குடியில் தோன்றிச் சீர் பெற வாழ்ந்த செம்மல் பெருமாள் பிள்ளை என்பவராவர். குடிப்பண்புக்கு ஏற்ப வேளாண் வாழ்க்கையில் விருப்பும் சிவ வழிபாட்டில் தணியா வேட்கையும் கொண்டு விளங்கிய சான்றோர் அவர். அவர்தம் இனிய வாழ்க்கைத் துணைவியாரே நம் பேராசிரியரைப் பெற்றெடுத்துப் பெரும்புகழ் கொண்ட சொர்ணம்மாள். பெயருக்கேற்ற பண்பு படைத்த இப்பெற்றோர்கள் வரமிருந்து பெற்ற பிள்ளையே நம் பேராசிரியர். ஆம். 'வரமிருந்து' என்று சொல்வது வெற்று உபசாரம் அன்று. உண்மையாகவே அப்பெற்றோர் வரம் கிடந்தனர். காரணம், பேராசிரியருக்கு முன்பிறந்த பதினொரு பிள்ளைகளையும் காலனுக்குப் பறி கொடுத்துக் கலங்கியிருந்தனர் அச்சான்றோர்.

அந்நிலையில் பெற்றோர் துயர் தீர்க்கும் ஒரு மருந்தாய்-பிறந்த நாட்டின் பிணி தீர்க்கும் பெருமருந்தாய், 1896-ஆம் ஆண்டில் (4) பிறந்தவரே நம் பேராசிரியர். ஒரு குலத்துக்கு ஒரு மைந்ததராய்த் தோன்றிய பிள்ளையை உயிரெனப் போற்றி வளர்த்தார் இன்று மைந்தர் புகழை எல்லாம் தம் புகழாய்க் கொண்டு விளங்கும் அன்னையார் சொர்ணம்மாள் அம்மையார். அந்த 'முன்னறி தெய்வம்' காட்டிய பேரன்பில் ஊறி வளர்ந்த பேராசிரியர் உள்ளத்தில் பிள்ளைப் பிராயம் முதலே தமிழன்பும் தாயன்பும் போட்டியிட்டு வளர்ந்தன.

கல்விப் பயிற்சி :

பேராசிரியர் அவர்களது எழுத்துப் பயிற்சி இராசவல்லிபுரத்துத் திண்ணைப்பள்ளிக்கூடத்திலேயே தொடங்கியது. அப்பயிற்சியில் தேர்ச்சியுற்ற பின்னர், நம் பேராசிரியர் ஐந்தாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை பாளையங்கோட்டை அர்ச். சேவியர் உயர்நிலைப் பள்ளியிலும் (5), இடைக்கலை வகுப்பின் (6) இரண்டாண்டுகளையும் திருநெல்வேலி இந்துக் கல்லுரியிலும் (7), இளங்கலை வகுப்பின் (8) இரண்டாண்டுகளையும் சென்னைப் பச்சையப்பர் கல்லுரியிலும் பயின்று வெற்றி பெற்றார். அக்காலத்தில் பேராசிரியர் அவர்களுக்குத் தமிழ் கற்பித்த ஆசிரியர்களுள் தலை சிறந்தவர் இருவராவர்: ஒருவர், உயர்நிலைப் பள்ளியில் தமிழாசிரியராய் விளங்கிய திரு. சுப்பிரமணியப் பிள்ளை; மற்றொருவர், இந்துக் கல்லுரித் தமிழாசிரியராய் விளங்கிய தொல்காப்பிய வல்லுநர் திரு. சிவராமப் பிள்ளை. ஆங்கிலமும் தமிழும் வல்ல அவரே பிள்ளை அவர்கள் பின்னாட்களில் சிறந்த தமிழ்ப்புலமை பெற வித்திட்டு வாழ்த்தியவர்.

பேராசிரியர் அவர்கள் மாணவ வாழ்க்கையிலேயே பெரும்புகழுடன் திகழ்ந்தார். சிறப்பாகத் தமிழ்த் தேர்வுகளில் தமிழ்ப் பேச்சுப் போட்டிகளிலும் தலை சிறந்து விளங்கினார். சென்னைப் பச்சையப்பர் கல்லுரியில் இளங்கலை வகுப்பில் பயின்றுகொண்டிருந்தபோது நடைபெற்ற பேச்சுப் போட்டி ஒன்றில் சிறப்பாகப் பேசிப் புகழ்பெற்றமையே பிள்ளை அவர்களின் பிற்கால நல்வாழ்விற்கு வித்திட்டது எனல் மிகையாகாது.

அப்பேச்சுப் போட்டியில் பிள்ளை அவர்களின் சொல் திறம் கண்ட அந்நாள் பச்சைப்பர் கல்லுரி ஆங்கிலப் பேராசிரியர் உயர் திரு. கே.பி. இராமநாதன் அவர்கள், கூடுதலான சம்பளம் கொடுத்துப் பிள்ளை அவர்களைப் பச்சையப்பர் கல்லுரித் தமிழ்த்துறையில் சிற்றாசிரியராய்ப் (9) பணி புரியும்படி ஏற்பாடு செய்தார். அப்போது பச்சையப்பர் கல்லுரியில் தமிழ்த்துறைத் தலைவராய் விளங்கிய பெருந்தகையார் திருமணம்- செல்வக்கேசவராயர். 'தமிழுக்குக் கதியாவார் கம்பரும் திருவள்ளுவருமே' என்ற அழகிய கருத்தை வெளியிட்டும், அருந்தமிழ்க் கட்டுரைகள் பல வரைந்தும் பன்னுறு மாணவர்களைத் தமிழமுதுட்டி வளர்த்த பெருமானாகிய செல்வக்கேசவராயரின் சீரிய தலைமையில் தொண்டாற்றும் பேற்றினைப் பெற்ற சேதுப்பிள்ளை அவர்களின் ஆசிரிய வாழ்க்கை, சென்னைப் பச்சையப்பர் கல்லுரித் தமிழ்த்துறையில் தொடங்கியது எண்ணி எண்ணி மகிழ்தற்குரியது. தலை சிறந்த கொடையாளராகிய பச்சையப்பர் புகழ் பரப்பும் அறநிலையத்தில் தொடங்கிய பேராசிரியர் பணி, நாளும் பொலிவு பெற்று, இன்று தமிழகம் தலைவணங்கும் நிலை எய்தியுள்ளது. சிற்றாசிரியராய்ப் பணி புரிந்த காலத்திலேயே கலைபயில் தெளிவும் கட்டுரை வன்மையும் கடமை உணர்வும் மிகுதியாகப் படைத்திருந்த பிள்ளை அவர்களிடம் அந்நாளில் தமிழ் கற்ற மாணவர்களுள் ஒருவரே புகழ் பெற்ற உயர்மன்ற நடுவராய் ஒளிர்ந்து அண்மையில் ஓய்வு பெற்ற நீதிபதி என்.சோமசுந்தரம் அவர்கள்.

வழக்கறிஞர் நகராட்சித் துணைத்தலைவர் :

பேராசிரியர் அவர்கள் சென்னைப் பச்சையப்பர் கல்லுரியில் சிற்றாசிரியராய்ப் பணி புரிந்த போதே சட்டக் கல்லுரியிலும் மாணவராய்ச் சேர்ந்து சட்டக்கலை பயின்றார்கள். அந்நாளில் சென்னைப் பச்சையப்பர் கல்லுரிக்கு அண்மையிலேயே சட்டக்கல்லுரி அமைந்திருந்தது இங்கு நினைவு கூர்தற்குரியது. இன்று பச்சையப்பர் உயர்நிலைப்பள்ளி மட்டும் இருக்கும் இடமே அன்று பச்சையப்பர் கல்லுரியும் இருந்த இடம். 1940-ஆம் ஆண்டிலேதான் சென்னைப் பச்சையப்பர் கல்லுரி நமது அருமைத் துணை வேந்தர் பெருந்தகையார் சர்.ஏ.எல். முதலியார் அவர்கள் தலைமை சான்ற பெருமுயற்சியால் நகரத்தின்நெருக்கடி நிறைந்த சூழ்நிலையிலிருந்து நீங்கிச் சேத்துப்பட்டில் சிறப்பிடம் பெற்றது (10).

சட்டக் கல்லுரியில் இரண்டாண்டுப் பயிற்சியை வெற்றியுடன் முடித்தபின்னர், பிள்ளை அவர்கள் காலஞ்சென்ற வழக்கறிஞர் பெருந்தகையும் முன்னாள் சென்னை மாநில அமைச்சருமாகிய உயர் திரு. எஸ். முத்தையா முதலியார் அவர்களிடம் தொழிற்பயிற்சி பெற்றார்கள்; அதன் பின்னர் வழக்கறிஞர் தொழிலை வளம் பெற நடத்தத் தமது சொந்த ஊராகிய திருநெல்வேலிக்குச் சென்றார்கள். அங்கே சில ஆண்டுகள் அத்தொழிலைச் சிறப்புடன் நடத்திய பிள்ளை அவர்கட்கு அத்தொழிலிலும் பெரும்புகழ் கிட்டியது.

மேலும், அந்தச் சில ஆண்டுகளிலேயே அவர்கள் கூர்த்த மதியையும் ஒழுக்க உயர்வையும் நன்குணர்ந்த நெல்லை நகர மக்கள் அவரை அந்நகரின் நகராட்சிமன்றத்திற்குத் தேர்ந்தெடுத்தது மட்டுமன்றி, அப்போது அந்நகராட்சியின் முதல் துணைத்தலைவராகவும் தேர்ந்தெடுத்தார்கள். இருபத்து மூன்று ஆண்டு இளைஞராயினும் பிள்ளையவர்கள் நகராட்சியில் பொறுப்பேற்ற ஒருசில ஆண்டுகளிலேயே பொதுநலப் பணியில் ஈட்டிய புகழ் பெரிது.

மீண்டும் தமிழாசிரியர் தொழில் -அ.ப. கழகத்தில்:

இந்நிலையில் வழக்கறிஞர் தொழிலில் நம் பேராசிரியர் வாழ்க்கை வளங்காண்பதினும் தமிழாசிரியர் தொழிலில் புண்ணியம் திரட்டுவதே சாலச் சிறப்புடையது என்று கருதினான் தில்லை அம்பலவன். அவன் திருவருளால் நெல்லை நீங்கித் தில்லையின் எல்லையில் அமைந்த அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் தமிழ் விரிவுரையாளராய் அமர்ந்தார் சேதுப் பிள்ளை. பேராசிரியர் கா. சுப்பிரமணியப் பிள்ளை, விபுலானந்த அடிகளார், நாவலர் சோமசுந்தர பாரதியார் ஆகிய மூவர் தலைமையிலும் பிள்ளை அவர்கள் ஆறு ஆண்டுகள் அருந்தமிழ்ப் பணி ஆற்றினார்கள்.

திருநெல்வேலியில் வழக்கறிஞராய் இருந்த போதும் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் விரிவுரையாளராய் இருந்த நாட்களிலும் பேராசிரியர் எழுதிய மிகச் சிறந்த நுல்களே 'தமிழ் நாட்டு நவமணிகள்', 'திருவள்ளுவர் நுல் நயம்', 'சிலப்பதிகார விளக்கம்', 'கால்டுவெல் ஐயர் சரிதம்' என்பவை; இந்நுல்களின் சிறப்பும் நுலாசிரியர் புகழும் பேராசிரியர் கா.சு.பிள்ளை அவர்களால் 'இலக்கிய வரலாற்'றிலேயே (12) பொறிக்கப் பெற்றுள்ளன என்றால் வேறு புகழுரையும் வேண்டுமோ?

சென்னைப் பல்கலைக் கழகத்தில் :

அண்ணாமலையில் ஆறு ஆண்டுகள் (13) பணியாற்றிப் பெரும் புகழுடன் விளங்கிய பேராசிரியர் அவர்கள், 1936-ஆம் ஆண்டு ஆகஸ்டு திங்கள் முதல் தலைமைத் தமிழ் விரிவுரையாளராய்ச் (14) சென்னைப் பல்கலைக் கழகத்தில் நியமனம் பெற்றார்கள். அப்போது தமிழ்த் துறைத் துணைப் பேராசிரியராகவும் தமிழ்த் துறைத் தலைவராகவும்15 விளங்கிய திரு.எஸ்.வையாபுரிப் பிள்ளை அவர்களுடன் ஒத்துழைத்துச் சென்னைப் பல்கலைக் கழகத்தின் சார்பில் வெளியிடப் பெற்ற தமிழ்ப் பேரகராதியின் இணைப்புத் தொகுதியை இனிது முடிக்கத் துணை புரிந்தார்கள்.16

பல வகைப் பணி :

சென்னைப் பல்கலைக் கழகத் தமிழ்த் துறையில் சேர்ந்தபின் பிள்ளை அவர்கள் பெருந்தமிழ்த் தொண்டால் சென்னைப் பல்கலைக் கழகம் மட்டுமே அன்றி, சென்னை மாநகரும் செந்தமிழ் நாடும் புத்தொளி பெற்றன. சேதுப் பிள்ளையவர்களின் பேச்சைக் கேட்கச் சென்னை மாநகர மக்களும் செந்தமிழ் நாட்டு மக்களும் கூட்டம் கூட்டமாய்க் கூடினார்கள்.

'தமிழில் பேசுவது தாழ்வு' என்று அந்நாளில் இருந்த சூழ்நிலையைப் பேராசிரியர் அவர்கள் தமது எடுப்பான தோற்றத்தாலும் மிடுக்கான பேச்சாலும் அறவே மாற்றியருளினார்கள். ஆங்கில உடை அணிந்து அருந்தமிழில் சொற்பொழிவு செய்த பேராசிரியர் அவர்களின் பேச்சைக் கேட்கக் கல்லுரி இளைஞர்களும் அலுவலக ஆணையாளர்களும் போட்டியிட்டுக்கொண்டு மன்றங்களில் குழுமினார்கள். அக்காட்சியைக் கண்ட பிள்ளை அவர்கள் அடைந்த மகிழ்ச்சிக்கு ஓர் அளவில்லை. வான் கண்ட வண்ண மயில்போலத் தமிழர் கூட்டம் மகிழப் பிள்ளையவர்கள் களி கொண்டு தமிழ் மழை பொழிவார்கள். அவ்வாறு அவர்கள் அந்நாட்களில் பொழிந்த சொற்பொழிவால் விளைந்த வெள்ளப் பெருக்கின் விளைவு இந்நாளில் விளைந்துள்ள தமிழ் வளத்திற்குத் தலையாய காரணங்களுள் ஒன்று என்றால், அது ஒரு சிறிதும் மிகையாகாது. இந்த வகையில் பேராசிரியர் அவர்கள் சென்னை மாநகரில் ஒய்.எம்.சி. ஏ.வில் நடத்திய கம்பராமாயணச் சொற்பொழிவுகளையும், ஒய்.எம்.ஐ.ஏ.வில் நடத்திய சிலப்பதிகாரச் சொற்பொழிவுகளையும், கந்த கோட்டத்தில் நடத்திய கந்த புராணச் சொற்பொழிவுகளையும், தங்கச் சாலையில் நடத்திய திருக்குறட் சொற்பொழிவுகளையும் சிறப்பாகக் குறிப்பிட வேண்டும்.

ஆராய்ச்சிக் கட்டுரைகள் :

மேடைப் பேச்சால் தமிழுணர்ச்சியையும் தமிழறிவையும் பெருக்கியதைப்போன்றே பிள்ளை அவர்கள் தமது ஆராய்ச்சித் திறனாலும் எழுத்தாற்றலாலும் 'கட்டுரைக் கலை' யையும் தமிழாராய்ச்சித் துறையையும் வளர்த்து வாழ்வித்தார்கள். பேராசிரியர் அவர்கள் சென்னைப் பல்கலைக் கழகத்தில் தொண்டாற்றிய கடந்த 25 ஆண்டு எல்லையில் பல்கலைக் கழக வெளியீடாகவும், பல்கலைக் கழக அநுமதியோடும் வெளியிட்ட தமிழ் நுல்கள் இருபத்தொன்று17 ஆகும்.

இவையன்றி, சென்னைப் பல்கலைக் கழகக் கீழைக்கலை ஆய்வு மலரில்18 ஆங்கிலத்தில் வரைந்த ஆராய்ச்சிக் கட்டுரைகள் ஒன்பது;19 தமிழில் வரைந்த ஆராய்ச்சிக் கட்டுரைகள் இரண்டு.20 பேராசிரியர் அவர்கள் 1955-ஆம் ஆண்டு அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் கூடிய அனைத்திந்தியக் கீழைக்கலை ஆராய்ச்சி மாநாட்டுக்குத் தலைமை தாங்கி நிகழ்த்தியபேருரை சென்னைப் பல்கலைக் கழக 1954-1955-ஆம் ஆண்டுகட்குரிய கீழைக்கலை ஆய்வு மலரில் வெளியிடப் பெற்றுள்ளது.21 இவையே அன்றி, இந்த நுற்றாண்டின் சிறந்த வெளியீடாகிய தமிழ்க்கலைக்களஞ்சியத்தில் பேராசிரியர் அவர்கள் வரைந்துள்ள கட்டுரைகள் ஐந்து.22 அவ்வப்போது வெளியிடப் பெற்ற புகழ் பெற்ற இதழ்களின் ஆண்டு மலர்களிலும், சிறப்பு மலர்களிலும், பெருமக்கள் பாராட்டு மலர்களிலும் பேராசிரியர் அவர்கள் வரைந்த கட்டுரைகளுள் முக்கியமானவை பதின்மூன்று.23 இவற்றுள் ஆறு தமிழ்; ஏழு ஆங்கிலம். பெருமை சான்ற இப்பணியே அன்றிப் பேராசிரியர் அவர்கள் தமது பல்கலைக் கழக வாழ்க்கையில் மகிழ்வுடன் ஈடுபட்டது அனைத்திந்தியக் கீழைக்கலை ஆராய்ச்சி மாநாட்டுப் பணியே ஆகும். பிள்ளை அவர்கள் 1937-ஆம் ஆண்டு தொடங்கி, 1955-ஆம் ஆண்டு வரை இரண்டாண்டுகட்கு ஒரு முறை நடைபெறும் அம்மாநாட்டில் ஏழு முறை கலந்துகொண்டு பயனுடைய ஆராய்ச்சி உரைகளை நிகழ்த்தினார்கள்.24 1955-ஆம் ஆண்டில் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் கூடிய மாநாட்டில் திரவிடப் பகுதிக்குத் தலைமை தாங்கியும் சிறப்பித்தார்கள்.

அகராதி ஆராய்ச்சிப் பணி :

அடுத்துப் பேராசிரியர் அவர்கள் பல்கலைக் கழக வாழ்க்கையில் செய்த சிறப்பு வாய்ந்த பணிகள் நான்கு. முதலாவது, 1954-ஆம் ஆண்டில் வெளியிடப் பெற்ற 'தமிழ்ச் சுருக்க அகராதி'க்குத் துணை புரிந்தமை.25 இரண்டாவது, மொழி இலக்கிய நலம் கருதி நிபுணர் குழுக்கள் ஏழில் இருந்து தொண்டாற்றியமை.26 மூன்றாவது, முதலில் சென்னைப் பச்சையப்பர் கல்லுரியிலும் பின்னர்ச் சென்னைப் பச்சையப்பர் கல்லுரி-சென்னை மாநிலக் கல்லுரி ஆகிய இரு கல்லுரிகளிலும் பயிற்சி பெறும் தமிழ் ஆனர்ஸ்.எம்.ஏ. மாணவர்கட்குச் சிறப்பு வகுப்புக்கள் நடத்தியமை. நான்காவது, பல்கலைக் கழகத் துறையில் உள்நாட்டு-அயல் நாட்டு ஆராய்ச்சி மாணவர்கட்கு வழி காட்டித் துணை புரிந்தமை. பேராசிரியர் அவர்களிடம் ஆராய்ச்சித் துறையில் பயிற்சி பெற்ற மாணவர்களுள் இதுவரை ஒருவர் டாக்டர் (பிஎச்.டி.) பட்டமும், மூவர் எம்.லிட்.பட்டமும் பெற்றுள்ளனர்.

பேராசிரியர் அவர்களது பல்கலைக் கழக வாழ்க்கையைக் கருதும் போது தோன்றும் மிகப் பெரிய சிறப்பு, அவர்கள் தமது கால் நுற்றாண்டுக் காலத் தொண்டில் தமிழ்த் துறைக்கு மட்டுமன்றிச் சென்னைப் பல்கலைக் கழக இந்திய மொழித் துறைகள் அனைத்திற்கும் வழி காட்டியாயும் துணைவராயும் விளங்கிய திறமும், தென்னாட்டுப் பல்கலைக் கழகங்கள் பலவற்றின் தமிழ்த் துறையும் செழிக்கப் பல்லாற்றானும் துணை புரிந்த சீர்மையுமே ஆகும். சென்னைப் பல்கலைக் கழகத்தைப் பொறுத்த வரையில் சிறப்பாகக் குறிக்கத் தக்கன, அவர்கள் முயற்சியாலும் துணையாலும் வெளி வந்த 'திரவிடப் பொதுச் சொற்கள்', 'திரவிடப் பொதுப் பழமொழிகள்' ஆகிய இரண்டுமாகும்

 
Tag : Tamil Aringargal, Tamil Writers, Tamil Poets
 
தங்களுடைய படைப்புக்கள் தமிழ்மொழி.காம் இல் வெளியிட, படைப்புக்களை யுனிகோடில் டைப் செய்து admin@tamilmozhi.com என்ற முகவரிக்கு அணுப்பிவைக்கவும். படைப்புகள் 7 நாட்களுக்குள் வெளியிடப்படும்.
DownloadWings.com
முகப்பு | எங்களைப் பற்றி | உங்கள் கருத்து | விளம்பரத்திற்கு | தள வரைபடம்
Homepage | About Us | Write to Us | Advertise with us | Site Map
Copyright © 2006-2009 TamilMozhi.com. All rights reserved
Best viewed with Internet Explorer 3.x or Later