1899-ஆம் ஆண்டு, நவம்பர் மாதம், 11-ஆம் நாள் திருச்சிராப்பள்ளியில் பிறந்தார். பெற்றோர்: பெரியண்ணப் பிள்ளை, சுப்பம்மாள்.
1904-ஆம்ஆண்டு முத்துசாமிக் கோனாரிடம்மணலில்தமிழ் எழுத்துக்களை எழுதும் பயிற்சி பெற்றார். முறையாக எந்தப் பள்ளியிலும் சேர்ந்து படிக்கவில்லை. தாமாகவே தமிழ் இலக்கியங்களை பயின்றார். ஐயங்களை அக்காலத்தில் சிறந்து விளங்கிய தமிழறிஞர்களிடம் கேட்டு தெளிந்தார். எந்தப் பள்ளியிலும் கற்காத கி.ஆ.பெ.வி. அவர்களுக்கு, இரண்டு பல்கலைக் கழகங்கள் ஆட்சிக் குழு உறுப்பினராக ஏற்றுக் கொண்டதோடு 'டாக்டர்' பட்டமும் வழங்கிச் சிறப்பித்தன.
முத்தமிழ்க் காவலர் தம் தமக்கையின் மகள் சுப்புலட்சுமி அம்மையாரை 1929-ஆம் ஆண்டில் மணந்தார். இவர்களுக்கு 6 பெண்களும், 4 ஆண்களும் பிறந்து சிறப்போடு வாழ்ந்து வருகின்றனர்.
புகையிலைத் தொழிலில் ஈடுபட்டு வளமாக வாழ்க்கையைத் தொடங்கியவர் கி.ஆ.பெ.வி. அத்தொழில் தம் அரசியல் வாழ்வுக்கு முட்டுக் கட்டையாக இருப்பதை உணர்ந்து விட்டுவிட்டார்.
15-ஆம் வயதிலேயே திருச்சிராப்பள்ளி சைவ சித்தாந்த சபையில் சேர்ந்து, துணைச் செயலாளராகவும் இருந்து சமயப் பணியாற்றி, மறைமலையடிகள், திரு.வி.க., சோமசுந்தர பாரதியார் போன்றோரின் நன்மதிப்பைப் பெற்றார்.
19-ம் வயதில் (1918) நீதிக் கட்சியில் சேர்ந்து படிப்படியாக உயர்ந்து அக்கட்சியின் பொதுக் செயலாளராக இரண்டுமுறை தேர்ந்தெடுக்கப்பட்டார். பெரியார் காங்கிஸ் இயக்கத்திலிருந்து வெளியேறிய பொழுது, ஜஸ்டீஸ் கட்சியில் சேர்ந்து பெரியார் பணியாற்ற காரணமாக இருந்தவர் கி.ஆ.பெ.வி. ஆவார். அறிஞர் அண்ணாவை ஜஸ்டீஸ் கட்சி மாநாட்டில் மொழி பெயர்ப்பாளராக அறிமுகப்படுத்திய பெருமையும் இவருக்கு உண்டு. அக்காலத்தில் பிற்படுத்தப்பட்ட மக்களுக்காக பெருந்தொண்டாற்றினார். சாதி, மத வேற்றுமைகளையும், மூட நம்பிக்கைகளையும் சாடிப் பல நுாறு கூட்டங்களையும் மாநாடுகளையும் நடத்தினார். தாழ்த்தப்பட்ட மக்களை 1927-28 திருவானைக்கா, மலைக்கோட்டை கோயிலுக்குள் அழைத்துச் சென்று போராடினார். மூட நம்பிக்கைகள் அற்ற முறையில் தமிழ்த் திருமணங்களை ஐந்தாயிரத்துக்கும்மேல் நடத்தி வைத்தார். சுருட்டுத் தொழிலாளர்களுக்குச் சங்கம் தொடங்கினார்.
பெரியார் தோற்றுவித்த சுயமரியாதை இயக்கத்தின் முதல் செயலாளராக இருந்தார். சேலத்தில் மாநாடு நிகழும்வரை அதில் இருந்தவர். 'திராவிடர் நாடு' பகற்கனவு என்ற கருத்தில் உறுதியாக இருந்தார். சுயமரியாதை இயக்கம் தமிழர் கழகமாக மாறாமல் திராவிடர் கழகமாக மாறியதில்கருத்து முரண்பட்டு வெளியேறினார். அதுமுதல் தமிழ் மக்களிடத்தில் தமிழ் உணர்ச்சியையும், தமிழையும் காப்பதுதான் கடமை என இறுதி வரை வாழ்ந்தவர்.
1937-ஆம் ஆண்டு தமிழகத்தில் இந்தி பள்ளிகளில் மூக்கை நுழைத்தபோது அதை எதிர்த்துத் தமிழகம் போராடியது. மொழிப் போரின் பொதுச் செயலாளராக பல நுாறு கூட்டங்களில் உரையாற்றி மக்களிடையே விழிப்புணர்ச்சியைத் துாண்டினார். 1965-ஆம் ஆண்டு நடந்த மொழிப் போரில் உயிர் நீத்த 27 பேரின் தியாகத்தை போற்றும் முகமாக, ஒவ்வொரு மாதமும் 26-ந் தேதி உண்ணாமலும், பேசாமலும் நோன்பு இருந்து வந்தார். இந்தி எதிர்ப்புப் போரில் இணையில்லாத தளபதியாக விளங்கினார். 26.12.1937 இல் திருச்சியில் கூடிய சென்னை மாநிலத் தமிழர் மாநாட்டின் அமைப்பாளராக இருந்து நடத்தினார்.
"தமிழ் நாட்டில் பெரும்பாலும் தமிழ்ப் பாடல்களே பாடப்பட வேண்டும்" என்ற தீர்மானம் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் 1941ஆகஸ்டு இறுதியில் நிறைவேறியது. அடுத்த நாள் 1-9-1941. அந்தத் தீர்மானத்தைக் கண்டித்து ஆங்கில நாளிதழ் ஒன்று தலையங்கள் எழுதியது. அதைக் கண்டு மறுநாள் 2.9.41 அன்று கி.ஆ.பெ.வி. அவர்கள் "தமிழ்ப் பாட்டுக்கும் முட்டுக்கட்டையா?" என்னும் தலைப்பிட்டுக் கட்டுரை எழுதிய வெளியிட்டார்.
அக்கட்டுரை அன்று எல்லாத் தமிழ் நாளேடுகளிலும் வெளியாயிற்று. திருச்சியில் மட்டும் 5000 இதழ்கள் தனியே அச்சிட்டு வழங்கப்பட்டன. இதனைக் கண்ட ராஜா சர். அண்ணாமலைச் செட்டியார் அக்கட்டுரையை ஓர் இலட்சம் பிரதிகள் அச்சடித்துத் தமிழ் நாட்டின் எல்லா புகைவண்டி நிலையங்களிலும் ஆட்களை நிறுத்தி இலவசமாக வழங்கச் செய்தார் என்றால், எந்தளவுக்கு அந்தக் கட்டுரை உணர்ச்சியோடு இருந்திருக்கும் எனப் புரிந்து கொள்ளலாம். தமிழிசை நிகழ்ச்சிகளில் பங்கு கொண்டும், அதனைத் தாமே திருச்சியிலும் நடத்தியவர் கி.ஆ.பெ. அவர்கள்.
1921-ஆம் ஆண்டு பிப்ரவரித் திங்கள் 5-ஆம் தேதி திருநெல்வேலியில் உள்ள ஒட்டப்பிடாரம் சித்தி விநாயகர் சபை ஆண்டு விழாவில், வெள்ளக்கால் திரு. வெ. ப.சுப்பிரமணிய முதலியார் தலைமையில் 'அன்பு' என்னும் பொருள் பற்றித் தம் கன்னிப் பேச்சை தொடங்கியவர் கி.ஆ.பெ.வி. தம் வாழ்வில் இறுதிக்கட்டம் வரை தொடர்ந்து தமிழ் நாடெங்கும் சங்கத் தமிழை முழங்கியவர்.
சிறந்த பேச்சாளரான பட்டுக்கோட்டை அழகிரியே "பேச்சுக்கு கி.ஆ.பெ. விஸ்வநாதம்" என்று சொல்லக் கூடிய அளவுக்கு தம் பேச்சாற்றலை வளர்த்துக் கொண்டார். வானொலி என்ற பெயரை 'ஆகஸ்வாணி' என்று மத்திய அரசு மாற்றிய 1959-இல், அதை எதிர்த்து போராட்டம் நடத்தினார். பல்கலைக் கழகப் பேரகராதி திருத்தப்பட வேண்டும் என்று போராட்டம் நடத்தியவர் கி.ஆ.பெ. அவர்கள். வில், புலி, கயல் அடங்கிய மூவேந்தர் கொடியை ஏற்றி நாடெங்கும் நாட்டுணர்ச்சியை உண்டாக்கியவர்; திருக்குறள் தமிழர் மறை என்று வாழ்ந்து காட்டியவர்.
தமிழுக்கென்று, சங்க காலத்தைப் போல 49 பேர் கொண்ட 'புலவர் குழு' ஒன்றை 1958 இல் தோற்றுவித்தார்.அதன் முதல்தலைவர்: சோமசுந்தர பாரதியார், செயலாளர்: கி.ஆ.பெ.வி. அவர்கள்.
அண்ணா முதல்வராக இருந்து நடத்திய இரண்டாம் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டு ஏற்பாட்டுக் குழுவின் துணைத் தலைவராகப் பொறுப்பேற்று, மாநாடு வெற்றி பெறத் துணை நின்றவர்.
தமிழர் வாழும் மலேசியா, சிங்கப்பூர், பர்மா, பிரான்சு, ஜெர்மனி, இலண்டன் மற்றும் அரபு நாடுகள் வரை இலக்கியப் பயணம் மேற்கொண்டு,அங்கெல்லாம் தமிழ் மணம் பரப்பியவர்.
1925-ஆம் ஆண்டு தந்தை பெரியார் தொடங்கிய 'குடி அரசு' வார ஏட்டில் துணையாசிரியராகவும், பிறகு பெரியாரின் 'விடுதலை' நாளேட்டில் 1938-இல் ஆசிரியராகவும் இருந்திருக்கிறார். பிறகு 1947-ஆம் ஆண்டு 'தமிழர் நாடு' ஏட்டைத் தொடங்கி அதன் ஆசிரியராகவும் இருந்திருக்கிறார். 1942-ஆம் ஆண்டு 'தந்தி' யை ஆதித்தனார் தொடங்கியபோது முதல் பிரதியை பெற்று வாழ்த்தியவர் கி.ஆ.பெ.வி. அவர்கள்.
கி.ஆ.பெ.வி. அவர்கள் பேச்சாளராக மட்டும் இல்லாமல் சிறந்த எழுத்தாளராகவும் இருந்தவர். 26 நுாற்கள் வெளி வந்துள்ளன. இவற்றில் சில 20 பதிப்புகள் வந்தவை 'திருக்குறள் கட்டுரைகள்', 'திருக்குறள் புதை பொருள்', 'வள்ளுவரும் குறளும்', எண்ணக் குவியல்','தமிழ் மருந்துகள்', 'தமிழர் செல்வம்' என்ற நாடக நுால்மற்றம் 'தமிழின் சிறப்புக்கள்' முதலிய நுல்கள் குறிப்பிடத்தக்கனவாகும்.
திருச்சிராப்பள்ளி மாவட்ட பொது நலப் பணிக்குழுவின் பொருளாளராக 30-ஆண்டுகளாக இருந்தவர் கி.ஆ.பெ.வி. அவர்கள். 1962-ஆம் ஆண்டு திருச்சிராப்பள்ளி கால்நடைச் சங்க விழாவினை நடத்தி,அதில்மீதப்பட்ட ரூ.642-ஐ அடிப்படை மூலதனமாகக் கொண்டு இந்த நிதி நிறுவனத்தைத் தொடங்கினார். இன்று அந்த நிதி பெருகி 14 இலட்சம் ரூபாய் வரை நன்கொடையகளாக வழங்கியும் கூட வைப்பு நிதியாக 1,84,06,918.32 வளர்ந்திருக்கிறதென்றால் இது ஐயா அவர்களின் நிர்வாகத் திறமையையும், பொதுச் சொத்தைப் பராமரிக்கும் தன்னலமற்ற தன்மையையும் எடுத்துக் காட்டுகிறது.
தமிழ்ஆட்சி மொழியாக வேண்டும் என்று கூறி தமிழ் ஆட்சி மொழி இயக்கத்துக்குத் தலைமை தாங்கி, தடையை மீறி ஊர்வலம் சென்று சிறைப்பட்டார். அப்போது அவருக்கு வயது 94.
முத்தமிழ்க் காவலரின் 95-ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா 12-11-1993 அன்று சென்னை ஏவி.எம். இராஜேஸ்வரி திருமண மண்டபத்தில் முன்னாள் குடியரசு தலைவர் ஆர். வெங்கட்ராமன் தலைமையில் நடைபெற்றது. எம்.ஏ.எம். இராமசாமி அவர்கள் அய்யாவுக்குப் பொன்னடை போர்த்தி ரூ.95 ஆயிரம் நிதி வழங்கினார். அத்தொகையை அய்யா தம் பெயரிலுள்ள அறக்கட்டளைக்கு வழங்கிவிட்டார். 96-ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா முடிந்தவுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு 19-12-1994 அன்று விடியற்காலை ஆறுமணிக்கு இயற்கை எய்தினார்.
தமிழ் மருத்துவமனை சித்த மருத்துவத்திற்கு வாரியம் வேண்டும்; திருவள்ளுவர் ஆண்டை, அரசு ஏற்க வேண்டும்; திருவள்ளுவருக்குச் சிலை எடுக்க வேண்டும்; தமிழ் ஆட்சி மொழி; பள்ளி மொழியாக வேண்டும் என்ற பல கோரிக்கைகளை வைத்து போராடி கடைசியாக உள்ள இரு கொள்கைகள் நிறைவேறுவதைக் காணாமலே மறைந்து விட்டார்!.
தமிழகத்தைப் பார்த்து முத்ததமிழ்க் காவலர் கேட்ட கேள்விகைள தமிழகம் கேட்டுக் கொண்டால் திருந்த வாய்ப்புண்டு:
-
ஏ! தமிழா! உனக்கென்று ஒரு நாடு உளதா ?
-
உன் தமிழ் நாடு சிறக்க நீ என்ன செய்கிறாய் ?
-
உனக்கென்று ஒருமொழி உளதா ?
-
உளதாயின் அதன் வளத்திற்கு நீ என்ன செய்கிறாய் ?
-
உனக்கென்று ஒரு தலைவன் உளனா ?
-
உனக்கென்று ஒரு தெய்வத்தை வரையறுத்துக் கொண்டாயா?
-
அதனை முறையாய் வழிபடுகிறாயா?
- என்னும் கேள்விகள் ஆழ்ந்து சிந்திக்கத்தக்கவை.