திருநெல்வேலி மாவட்டத்தில் கோவில்பட்டிக்கு அருகில் உள்ள இடைச்சேவல் என்னும் ஊரில் குருசாமி-தாயம்மாள் தம்பதிகளுக்குத் தலைமகனாக 23-9-1923-ல் அழகிரிசாமி பிறந்தார்.
இடைச்சேவல் கிராமத்திலேயே முதன்முதலராக எஸ்.எஸ்.எல்.சி. வரை படித்தவர் அழகிரிசாமிதான். 14 வயதினிலேயே கம்பராமாயணத்தில் மூன்று காண்டங்களைப் பொருள் விளங்கிப் படித்தவர். அத்துடன் பாரதியார் பாடல்கள் மனப்பாடம்.
நண்பர்கள் கொடுத்த உற்சாகத்தின் காரணமாக சிறுகதை எழுத ஆரம்பித்தார். 1943-ல் 'ஆனந்த போதினி' இதழில் பிரசுரமான 'உறக்கம் கொள்ளுமா ?' என்ற தலைப்பில் கு.அ. எழுதிய இரண்டாவது கதையே அச்சில் வந்த அவரது முதல் கதை.
பள்ளிப் படிப்பை முடித்த உடனேயே சர்வீஸ் கமிஷன் தேர்வில் தேறி, சில மாதங்கள் காளாப்பட்டி என்ற கிராமத்தில் பள்ளி ஒன்றில் ஆசிரியராகப் பணியாற்றிய கு.அ.வுக்கு எதிர்பாராத வகையில் சார் பதிவாளர் அலுவலகத்தில் எழுத்தராக வேலை பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. தினமும் பத்திரங்களைப் பதிவு செய்வதே அவர் பணி. தென்காசியில் வேலைபார்க்கும் சமயத்தில் டி.கே.சி.யின் நட்புக் கிடைத்து தமிழ் இலக்கிய அருவில் குளித்தார். ரசிகமணி டி.கே.சி.யின் நண்பர் குழாம் முழுவதுடன் பழகும் வாய்ப்பைப் பெற்றார்.
நாரண. துரைக்கண்ணனின் கடிதம் மூலம் சென்னைக்கு வந்தார். 1944-ஜூலையில் 'பிரசண்ட விகடன்' பத்திரிகையில் நாற்பதைந்து ரூபாய் சம்பளத்தில் உதவியாசிரியராகச் சேர்ந்தார். 1944-முதல் 1947 ஏப்ரல் வரை வேலை பார்த்துவிட்டு, அங்கிருந்து விலகினார். 'தமிழ் மணி' என்ற அரசியல் வார இதழில் ஆசிரியர் பொறுப்பேற்றார். பின்னர் 'சக்தி' இதழில் சேர்ந்து 1952 வரை பணியாற்றினார். இக்காலக்கட்டத்தில்தான் புகையிலையும் இலக்கியமும்' போன்ற கட்டுரைகளை எழுதினார்.
இக்காலக் கட்டத்தில் புதுமைப்பித்தன், வல்லிக்கண்ணன், தொ.மு.சி. ரகுநாதன் போன்ற இலக்கியவாதிகளின் நட்பைப் பெற்றார். கு. அழகிரிசாமியின் முதல் சிறுகதை தொகுப்பு 'கு. அழகிரிசாமி கதைகள்' என்ற பெயரிலேயே 1952-ல் வெளிவந்தது. அதற்கு கல்கி முன்னுரை வழங்கியிருந்தார்.
1952-ல் மலேசியாவுக்குச் சென்றார். அங்கு 'தமிழ் நேசன்' என்ற பத்திரிக்கையில் 5 ஆண்டுகள் பணியாற்றினார். கு. அழகிரிசாமி அங்கிருந்த நாட்களில் பல இளம் படைப்பாளிகளை உருவாக்கினார். 'சிறுகதை பட்டறை' மாதந்தோறும் நடைபெற்றது. மலேஷிய வாழ்வு வறுமையை விரட்டி அவருக்கு ஒரு புது உலகத்தைக் காட்டியது. சென்னை வானொலியில் நிகழ்ச்சி தயாரிப்பு வேலையில் இருந்தபோது சீத்தாலட்சுமியுடன் காதல் கொண்டு கலப்புத் திருமணம் செய்தார். அவருடனே மலேஷியாவில் 5 ஆண்டுகளைக் கழித்துவிட்டு 1957-ஆம் ஆண்டு சென்னை வந்தார். 1957-60 வரை காந்தி நுால் வெளியீட்டுக் கழகத்தில் மொழிப் பெயர்ப்பாளராக இருந்தார்.
1960 முதல் 1965 வரை 'நவசக்தி' பத்திரிக்கையில் துணையாசிரியராக இருந்தார். இக்கட்டத்தில்தான் 'கவிச்சக்கரவர்த்தி' என்ற நாடகத்தை எழுதினார். இந்நாடகத்தை எஸ்.வி. சகஸ்ரநாமம் குழுவினர் பம்பாய் தமிழ்ச் சங்கத்தில் 1963-ல் அரங்கேற்றினார்கள். இதில் கம்பராக நடித்த ஜெயராமன் இன்றுவரை அதன் புகழில் கம்பர் ஜெயராமனாக நம்மிடையே வாழ்ந்து வருகிறார். 1967-ல் 'தமிழ் வளர்ச்சித் துறை', கு, அழகிரி சாமியின் 'கவிச்சக்கரவர்த்தி' நாடக நுாலுக்குப் பரிசு அளித்துப் பாராட்டியது.
1965 முதல் 1970 வரை இலக்கியப் பணி செய்து வந்தார். 1970-ஆம் ஆண்டு சில மாதங்கள் 'சோவித் நாடு' ஆசிரியர் குழுவில் பணிபுரிந்து கொண்டிருந்தபோது நோய்வாய்ப்பட்டு ஜூலை 5-ஆம் தேதி இயற்கை எய்தினார்.
அழகிரிசாமியின் இலக்கியப் பணிகள்
கு. அழகிரிசாமி சிறந்த எழுத்தாளராக மட்டும் இல்லாமல் சுவை மிகுந்த பட்டிமன்ற பேச்சாளராகவும், கவியரங்கக் கவிஞராகவும், இதழாளராகவும், பதிப்பாளராகவும், இசை அறிந்த எழுத்தாளராகவும், நாடக ஆசிரியராகவும் இருந்தவர் என்பது சிறப்பான செய்தி.
சிறுவயது முதற்கொண்டே சி. இராஜநாராயணன் இவரின் தோழர். இவர்கள் இருவரும் இணைந்து தயாரித்த 'ஊஞ்சல்' கடித இதழ் தமிழுக்குப் புதியது.
பழம்பெரும் பத்திரிக்கையாளர்களான திரு.வி.க. டி.எஸ். சொக்கலிங்கம், நாரண.துரைக்கண்ணன் போன்றவர்களை மிகவும் மதித்தவர் கு. அழகிரிசாமி.
புதுமைப் பித்தன், தொ.மு.சி. இரகுநாதன், வல்லிக்கண்ணன், தி.க.சி. சுந்தரராமசாமி, தீப. நடராஜன், கிருஷ்ணன் நம்பி, நா. பார்த்தசாரதி, போன்ற இலக்கியவாதிகளுடன் எப்போதும் தொடர்பு வைத்திருந்தார். டி.என். ராஜரத்தினம் பிள்ளை, காருக்குறிச்சி, விளாத்திக்குளம் சுவாமிகள் போன்றோருடன் இசைப்பற்றின் காரணமாக தொடர்பு வைத்திருந்தார்.
நவீன இலக்கியத்தில் எந்த அளவுக்கு ஆர்வம் இருந்ததோ அதே அளவில் பழந்தமிழ் இலக்கியத்திலும் அழகிரிசாமிக்கு ஈடுபாடு இருந்தது. அதனால்தான் காவடிச் சிந்தையும், கம்பராமாயணத்தையும் பதிப்பித்திருக்கிறார்.
சிறந்த மொழிப் பெயர்ப்பாளராகவும் இருந்திருக்கிறார் என்பதை கார்க்கியின் படைப்புகளை மொழிப் பெயர்த்ததிலிருந்து தெரிகிறது.
தமிழ்ச் சிறுகதை வரலாற்றில் என்றும் நிலைத்திருக்கக் கூடிய சிறுகதைகளான, ராசா வந்திருக்கிறார், குமாரபுரம் ஸ்டேஷன், திரிவேணி, அழகம்மா போன்ற கதைகளை யார் படித்தாலும் கு. அழகிரிசாமியை மறக்க முடியாது!