
சாதனைகள் நிறைந்த ராஜாஜியின் நீண்ட வாழ்க்கை பல பரிமாணங்களை உடையது. வாழ்வின் எல்லாத் துறைகளையும் அவர் தொட்டிருக்கிறார். ஒவ்வொரு துறைக்கும் அவர் ஆற்றிய பணி பல திறப்பட்டதாயினும் அவற்றிடையே அடிப்படையான ஓர் இணைப்புச் சுருதி இழையோடுகிறது.
சத்தியம், பக்தி, தொண்டு, அன்பு, துய வாழ்வு, சீர்திருத்தம், அனைவரின் நலன் இவையே அச்சுருதியின் உறுப்புக்களாகும். ராஜாஜியின் தமிழ் இலக்கியச் சாதனைகளிலும் இவற்றைக் காணலாம்.
சமுதாயத்தின் கடைசி மனிதனைக் கருத்தில் கொண்டே திட்டமிட வேண்டும் எனக் காந்தியடிகள் மீண்டும் மீண்டும் கூறிவந்தார். அவர் செயல்களெல்லாம் அவ்வாறே அமைந்தன. ராஜாஜியின் இலக்கியப் படைப்புக்களெல்லாம் கோடானுகோடி மக்களுக்காக எழுதப்பட்டவையே. எனவே தான் ஆங்கிலத்தில் ஆங்கிலேயரும் வியக்கும் புலமை பெற்றிருந்தாலும் இறுதிவரை தமிழில் நிறைய எழுதினார்; எளிய தமிழில் எழுதினார், கதைகளாகவும் உரையாடல் முறையிலும் எழுதினார். கீதையையும் மொழிபெயர்த்தார் ; திண்ணை ரசாயனம் பற்றியும் எழுதினார். மேலே நாட்டவரின் அறிவுச் செல்வங்களையும் தமிழாக்கினார்.
உயரிய இலட்சியங்களைக் கோடானுகோடி மக்களுக்கு உணர்த்தும் சாதனமாக ராஜாஜி இலக்கியத்தைக் கைக்கொண்டார். ஹரிஜன முன்னேற்றம் உள்ளிட்ட பல சீர்திருத்தக் கருத்துக்களைத் தாங்கிய அவருடைய இலக்கியங்களில் ஒழுக்கமும் பண்பாடும் மிகுந்த லட்சிய மனிதர்களை அவர் படைத்துள்ளார். அறிவு வளர்ச்சியின்றி அல்லலுறும் மக்களுக்கு எளிய தமிழில் அறிவு புகட்டுகிறார். மனித மனத்தில் உயரிய உணர்வுகளைத் தட்டியெழுப்புவன அவருடைய படைப்புக்கள். பக்தி நெறியையும் தத்துவக் கருத்துக்களையும் எளிய தமிழில் அள்ளித் தருகிறார். உரை நடைத் திருவாசகம் என்றும், தமிழ் உபநிடதம் என்றும் அவருடைய சமய எழுத்துக்களைச் சொல்லிவிடலாம். இதோடு அவரது இலக்கியப் படைப்பு கலைத் தன்மையும் இனிமையும் இசைமையும் கற்பனை வளமும் நயமும் பெற்றுத் திகழ்கிறது. காலத்தை வென்று நிற்கும் தன்மையும் பெற்று இலங்குகிறது.
ராஜாஜி ஈராயிரம் ஆண்டு வரலாறுடைய தமிழ் இலக்கியங்கள் அனைத்தையும் கற்றுத் துறைபோகியவர்: வடமொழி இலக்கியங்களையும் சமய சாஸ்திரங்களையும் ஆழ்ந்து கற்றவர். ஆங்கில இலக்கியங்களையும் தத்துவங்களையும் நன்கு அறிந்தவர். பண்டைய கிரேக்க ரோம அறிவுச் செல்வங்களையும் கலைக் கோயில்களையும் உணர்ந்தவர்; உலகின் பிற அரிய படைப்புகளையும் அறிந்தவர். அறிவியலின் புதிய புதிய கண்டு பிடிப்புக்களைப்பற்றியும் தொடர்ந்து படித்து வந்தவர். இவற்றையெல்லாம் நன்கு ஜஂரணித்து எளிமையாக்கிக் கலையழகு கனியப் பைந்தமிழில் தந்த சான்றோர் ராஜாஜி. இதற்கும் அப்பால் சென்று புத்தம் புதியவற்றையும் ஆக்கித் தந்துள்ளார். பல்வேறு துறைகளில் அவர் பெற்ற நீண்ட அநுபவச் சாயலையும் அவருடைய படைப்புகள் பெற்றுள்ளன.
ராஜாஜியின் மகாபாரதம் (வியாசர் விருந்து) அவரை இருபதாம் நுற்றாண்டு வியாசராகவும் வில்லிபுத்துராகவும் ஆக்கிவிட்டது. அவரது இராமாயணம் (சக்கரவர்த்தித் திருமகன்) அவரை இருபதாம் நுற்றாண்டு வால்மீகியாகவும் கம்பராகவும் துளசிதாசராகவும் ஆக்கிவிட்டது. கீதை மொழிபெயர்ப்பு, பிளேட்டோவின் ஸோக்ரதரின் இறுதிக் காலம் பற்றிய நுல்களின் மொழிபெயர்ப்புகள், மார்க்கஸ் அவுரேலியருடைய 'ஆத்ம சிந்தனை' மொழி பெயர்ப்பு முதலியன மொழி பெயர்ப்புத் துறைக்குச் சீரிய முன்மாதிரிகளாகும். கம்பராமாயண அயோத்தியா காண்டப் பாடல்கள், திருக்குறள், இராமாயணம், பாரதம் பற்றிய அவருடைய ஆங்கில மொழி பெயர்ப்புகளும் எழுத்துக்களும் குறிப்பிடத்தக்கன. இந்திய ஞானச் செல்வத்தை உலகுக்கு உணர்த்தும் முயற்சியே இது. உலக மக்கள் அனைவரும் ஒரே குடும்பமாக வாழும் நிலையைத் தோற்றுவிக்கும் முயற்சியில் ஒரு குறிப்பிடத்தக்க பணியே இது எனலாம்.
ராஜாஜி ஒரு சிறந்த இலக்கியத் திறனாய்வாளரும் ஆவார். வள்ளுவர், திருமூலர், நம்மாழ்வார் முதல் மூவர் உட்படப் பலருடைய அரிய பாடல்களுக்கு அவர் தந்துள்ள விளக்கங்கள் சீரிய இலக்கியத் திறனாய்வாகும். சிறுகதையைப் பற்றி ஆராய்ந்து அரியதொரு கட்டுரையை எழுதியுள்ளார். தமிழ்ச் சிறுகதை ஆசிரியர்களில் அந்தத் துறையைப்பற்றியும் ஆராய்ந்து எழுதிய முதல்வர் இவரே. இசையைப்பற்றியும் வசன நடையைப்பற்றியும் பிற மொழிக் கலப்புப்பற்றியும் தமிழ் எழுத்துக்கள்பற்றியும் கட்டுரைகள் எழுதியுள்ளார். தம் நுல்களுக்குத் தாமே எழுதிய சுருக்கமான முன்னுரைகளில் அந்த நுல்களின் திரண்ட கருத்தையே சில வரிகளில் அற்புதமாகத் தரும் நயத்தைக் கண்டு வியக்கலாம். மிகச் சிறந்த திறனாய்வாளரே அவ்வாறு செய்யக்கூடியவர். படைப்பிலக்கியத் திறமையும் திறனாய்வு ஆற்றலும் மாறுபட்ட போக்குகள் என்றாலும் இரண்டும் ஒரு சேர ராஜாஜியிடம் களிநடம் புரிகின்றன.
முன்னைப் பழமையில் மூழ்கியவராயினும் பின்னைப் புதுமையின் உச்சியில் நின்ற பெருமை ராஜாஜிக்கு உரியதாகும். புத்திலக்கியத் துறையான சிறுகதைத் துறையில் அவருடைய சாதனைகள் குறிக்கத் தக்கன. மாபெரும் அரசியல்வாதியான ராஜாஜி, ஆன்மிகச் செல்வரான ராஜாஜி - சிறுகதைகள் எழுதியதும் அந்த இலக்கியத் துறைக்குத் தமிழ் நாட்டில் உரிய மரியாதை கிடைக்கத் தொடங்கியது. ராஜாஜியின் குட்டிக் கதைகளும் மிகவும் புகழ் பெற்றன. வியாபாரத்துக்கோ பிற மலிவான லாபநோக்கங்களுக்கோ எழுதப்பட்டவையல்ல அந்தச் சிறு கதைகள்.
பிரசார நோக்கமும் அதன், குறிக்கோளன்று. உன்னதப் பண்புகளைத் தோற்றுவிக்கும் எல்லையற்ற சக்திகளாகவே அவருடைய சிறுகதைகள் உயிர்பெற்றுத் திகழ்கின்றன. இலக்கியத்தை ஆசிரியன் படைக்கும் முறையிலேயே இது அமைந்து விடுகிறது. ராஜாஜியின் சிறுகதைகளைப் படிக்கும்பொழுது அன்புள்ள தாயிடம் கதை கேட்பது போன்ற உணர்வு தோன்றுகிறது. புதிய சிறுகதை வடிவத்துக்குள் பழைய கதை மரபை உருவாக்கி விடுவதன் விளைவே இந்நிலை எனலாம். தமிழ்ச் சிறுகதை உலகில் ராஜாஜி பாணி என்று ஒன்றை வரையறுத்து விடலாம்.
கட்டுரைத்துறை தமிழில் மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ளது. பேகன் போன்ற கட்டுரையாசிரியர் இங்கு இல்லை எனக் கூறப்படுகிறது. ராஜாஜியின் கட்டுரைகள் இந்தக் குறையை அகற்றுகின்றன. பல்வேறு தலைப்புக்களில் நிலைபேறுடைய கட்டுரைகளை ஆக்கியுள்ளார். உதாரணமாக, ஒரு கட்டுரையை இங்கே சுட்டிக் காட்டலாம்: 'தேனீ' என்ற பத்துப் பக்கக் கட்டுரையில் தேனீ-உலகத்தையே நம் கண்முன் கொண்டு வந்துவிடுகிறார். தேனீக்களின் வாழ்வையும் தேனீ வளர்க்கும் முறையையும், தாம் தேனீ வளர்த்த வரலாற்றையும் கூறி உயிரின ஒருமைப்பாட்டையும் உணர்த்தி விடுகிறார். கிராம மக்களின் வருவாயைப் பெருக்கவும் உடல் வலுவைக் கூட்வும் ஆலோசனை கூறி ஆன்மிகச் செல்வத்தையும் பொழிந்து விடுகிறார். இதுதான் ராஜாஜி கட்டுரைகளின் - எழுத்துக்களின் சிறப்பு - தனிச் சிறப்பு. அறிவு புகட்டுவது, கடை மனிதனுக்கும் உதவுவது; இவற்றைச் செய்யும்போதே நிரந்தர ஆன்மிக உண்மைகளை உணர்த்தி விடுவது. ராஜாஜி ஒரு இரசவாதிதான்.
வாழ்க்கை வரலாறு என்பது உண்மையில் சிந்தனை, உணர்வு, ஆன்ம வரலாறே. இந்த ஆழ்ந்த அடிப்படையில் ஆராய்ந்தால் ராஜாஜியின் 'துறவி லாரன்ஸ்', பக்தி நெறி (நம்மாழ்வார்) முதல் மூவர், திருமூலர், தவமொழி ஆகிய நான்கு நுல்களும் நான்கு வாழ்க்கை வரலாற்று நுல்களே என்பது புலனாகும். "மனிதன் இறந்தவுடன் அவனது உடல் எரிக்கப்படும் நிலையில் அவனுடைய குறைகளெல்லாம் மறைந்து குணங்கள் மட்டும் நிலைபெறுகின்றன" எனப் புனிதர் விநோபா அடிகள் கூறுகிறார். இந்தப் புது நெறியில் வந்த வாழ்க்கை வரலாற்று நுல்கள் இவை எனலாம்.