
இலக்கியச் சோலையிலே ஆயிரம் ஆயிரம் பூக்கள் மலர்வது உண்டு. அவை எல்லாம் சிறந்தனவாக இருப்பதில்லை. அப்படியே இருந்தாலும் தலை சிறந்தவை என்றும், மதிப்பிட முடியாத பொன் மலர் என்றும் பெயர் ஏற்பதில்லை. அப்படிப் பொன் மலர் என்று பெயர் பெற்ற சில இலக்கியங்கள் அந்த இலக்கியச்
சோலையில் என்றும் அழியாது நிலைபெற்று நிற்கும். இந்த வகையைச் சேர்ந்தது பாலபாரதி ச.து.சு.யோகியாரின் கவிதை இலக்கியம். எந்த ஒரு கவி, தாம் எழுதும் காவியத்தில் நவரசங்களையும் குறைவின்றி அளிக்கிறாரோ, அவரே மகாகவி என நாம் அறிந்த பழங்கவிஞர்கள் கூறியிருக்கிறார்கள்.
இப்படிப் பார்க்கும்போது ச.து.சு. யோகியாரை மகாகவி என்பதில் தவறில்லை. அவரது கவிதையில் நவரசங்களும் நாட்டியமாடுகின்றன. தமிழ்க் குமரியை நம் கண்முன் காட்டுகிறார் யோகியர். பலபேர் நம் தமிழ்த்தாயை வணங்கிப் பாடியிருக்கலாம். ஆயினும் அண்டை நாடாக இருந்தாலும் அங்கே தமிழ் பேசும் மக்கள் இருந்தால் அவர்களும் நம் உறவினர்கள் என்பதை வலியுறுத்தும் முகமாக அவர் தமிழ் அணங்கைப் பாராட்டியிருக்கிறார்;
பங்கயத்துக் குமரிமுனைப்
பாதம் சேர்த்தாள்;
பசும்பொன்முடி வேங்கடத்தைப்
புனைந்தங் கார்த்தாள்;
பொங்கிவரும் காவிரியை
இடையில் கோத்தாள்;
புரமூன்றும் கடற்கன்னி
பணியப் பார்த்தாள்;
மங்கலம்சேர் மேலைமலைச்
செங்கோ லுற்றாள்;
மலர்மொட்டி லங்கையெனும்
மகளைப் பெற்றாள்;
எங்கள்குலத் தெய்வம்தாய்
எமக்கு வீடு
இளமைகுன்றாக் கன்னிஎங்கள்
தமிழர் நாடு.
என இலங்கையையும் தமிழன்னையின் மகளாகக் குறித்து அன்பொழுகப் பாடுகிறார். அதே தமிழ்த்தாயின் வாழ்த்தில் பிறிதொரு பக்கத்தில் இலக்கியத்திலேயே யாரும் சொல்லாத புது வார்த்தையைக் கூறியிருக்கிறார்.
'பளிங்கனைய கவிக்கரசன் கம்பனெனும் தேவன்' என்ற புதுமைத் தொடர்தான் அது.
பாடுநீ என்பார்;
எங்ஙனம் பாடுவேன்?
உண்மை அறிந்திலர்
உலகத்து மக்கள்
பாடும் குரல் நான்;
பாடுவாள் காளி.
ஆம்; இவர் ஒரு சக்தி உபாசகர்; அதனால்தான் இப்படித் தம்மைக் காளியின் குரலாகப் பணிவுடன் தெரிவிக்கிறார்.
சொல்லினாலே கவி
சொல்ல வந்தேன்;
சொல்லிலே அமுதினை
மெல்ல வைத்தாள்;
சொல்லும் அமிழ்தினில்
கூற வந்தேன்;
கோடிக் கவிதைகள்
ஊற வைத்தாள்
என்று மேலும் சக்தியைப் பரவுகிறார்; அந்தச் சக்தியை இவர் வர்ணிக்கும் முறையே வேறு:
வெள்ளிவான் பாற்கடலில்,
வேதத்(து) அனந்தன்மேல்
அள்ளும்மது விழியாள்
அம்பிகைஎன் ஆணழகி
கொள்ளைத் திருமகளாய்க்
கோமளங்கள் காட்டிடவே
துள்ளுஞ் சுடர்களெலாம்
மோகனமாய்ச் சூழ்ந்தனவாம்.
இதில் 'அம்பிகை என் ஆண் அழகி' என்ற சொல் இதுவரை யாரும் எடுத்தாளாத புதுச் சொல்.
காவியங்களிலேயே தலை சிறந்தது ராமாயணம். அதில் வரும் 'அகல்யை சாபம் நீங்கு படலம்' முக்கியமானது. அவளை முதலில் வால்மீகியும் பிறகு கம்பனும் சமீப காலத்தில் திரு.வே.ப.சுப்பிரமணிய முதலியாரும் நம் யோகியாரும் பாடியிருக்கிறார்கள். வால்மீகியின் அகல்யை வழுக்கி விழந்த ஒரு சகோதரி. திரு. முதலியாரின் அகல்யை ஒரு பாவமும் அறியாத பேதை. ஆனால் யோகியாரின் அகல்யை உடற்குற்றம், உளக்குற்றம் ஆகிய இரண்டும் இல்லாதவள். அவள் நடனம் ஆடுகிறாள். ஒரு மகாகவி அந்த நடனத்தை நமக்கு வர்ணிப்பதென்றால், அந்த நடனத்தில் இருக்கும் ஒவ்வொரு சிறு அங்கமும் நம் கண்முன் வந்து நிற்பது இயல்பு தானே?
மேகமலர் காவனத்தே
வானவில்லின் வீதியிலே
வேகம்மின்னல் போல்அலைந்து
விளையாடும் சாலையிலே
சிலம்பு குலுங்குவதும்
சதங்கை சிலும்புவதும்
அலம்புமணி மேகலைகள்
அலம்புவதும் கேட்டானோ?
கடைசி இரண்டு அடிகளில் சிவலம்பின் ஓசை நம் காதில் தொனிக்கும். அவருடைய அகல்யை யார்?
பூவாத பூங்கமலம்
புரையாத மணிவிளக்கம்
மோவாத முத்தாரம்
முளையாத செங்கரும்பு
காம்பின்றித் தன்னிலேதான்
கவின்விரியும் கற்பகக்கா
கூம்புமிருள் மொட்டினிலே
குமையாத மின்னல்வெள்ளம்.
கல்லான தன்மை மாறி அகல்யை எழுந்தவுடன் முனிவரிடம் அவளை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று கூறும் ராமன் வாயிலாக பல அரிய கருத்துக்களை நமக்கு அளிக்கிறார். அந்தச் சமயத்தில் முனிவர், வந்தது இந்திரன்தான் என்று அறியாமல் எப்படி இருக்க முடியும்? அப்படி இருந்திருந்தால் அவள் ஏன் பிழை செய்ய வேண்டும் என்று கேட்கிறார்? அதற்கு மகாகவி யோகியார் ராமன் வாயிலாகச் சொல்லுவதுபோல், "காலையில் விழித்த போது கூவினது அசல் கோழியா போலியா என்றுகூடத் தெரியாமல் நீ வெளியேறினாய்! அவளோ ஒரு காலமும் உணராதவள். முக்காலமும் உணர்ந்த நீயே ஏமாந்த போது ஒரு காலமும் உணராத பேதை ஏமாந்ததில் ஏது பிழை?" என்ற கருத்துப்பட,
முக்காலம் தானுணரும்
முனிவன்நீ ஏமாந்தால்
அக்கால்உன் அன்பால்
ஏமாந்ததும் ஓர் அற்புதமோ
நீவஞ்சத்து ஆட்பட்டாய்
நினைவஞ்சித்தான் தேவன்
எனப் பாடியிருக்கிறார் கவி. இந்த வாதம் பழைய நுல்களில் இல்லை. அகல்யைக்காகவே இங்கே கவி வாதாடுகிறார்.
'கண்மணிராஜம்' என்ற கவிதை, நாம் எங்கே கேட்டாலும் நம் கண்ணில் நீரைத் தருவிக்கும்; கவிஞர் தம் குழந்தை இறந்தபோது பாடியது. எந்தக் கவிஞருக்கும் இப்படிப்பட்ட சூழ்நிலை உருவாக வேண்டாம்! அப்படி உருவானலும் இப்படிப்பட்ட தலைசிறந்த கவிதை பிறக்கும் என்றும் கண்டிப்பாகக் கூறமுடியாது!
மாம்பழத்து மேனி
மதிஉறிஞ்சும் வட்டமுகம்
பூம்பருத்தி ஆடை
புனையாத தோகைமயில்
ஆசைஎல்லாம் ஓர்உருவாய்
ஆர்வம்எல்லாம் ஓர்கனியாய்
பேசரிய காதல்
பிழம்போர் மதுக்கடலாய்
வானத்(து) ஒரு சுடர்தான்
வையத்தைப் பார்ப்பதற்கு
மீனத்திரள் வடித்த
மின்னரசி போல்வந்தாள்;
தெள்ளத் தெளிக்கும்
திரைமுத்தம் அல்லஎங்கள்
உள்ளக் கடலுறும்
உவகைத்தேன் முத்தாரம்
மண்ணிட்டு மூடியதால்
மட்கிட்டுப் போகாமல்
எண்ணிட்ட நெஞ்சத்(து)
எழிலிட்ட வைரமணி
தேடக் கிடைக்காத
திரட்டுப்பால் தேவர்க்கும்
கூடக் கிடைக்காத
கூத்திட்ட பூச்செண்டு
என்று வர்ணித்துவிட்டுக் குழந்தை பிரிந்து போவதை,
தேசமெலாம் சுற்றும்
சிறுபறவை சின்னேரம்
வீசும் கிளைஒன்றில்
வீற்றிருந்து போவதுபோல்
காலையிலே கண்விழித்துக்
கடும்புயலில் அகப்பட்டு
மாலையிலே வாடி
வதங்கியதோர் மலரைப் போல்
கண்கொடுத்துக் கண்பிடுங்கக்
கடவுளுக்குக் கண்ணிலையோ?
பெண்கொடுத்துப் பெண்பிடுங்கப்
பிழைஎன்ன செய்தேனோ?
அப்பன் இவன்ஏழை
அவரைக்காசுக் கஞ்சியில்லை,
இப்பரிசு வேண்டாம்
எனத்துறந்து போயினையோ
என்று கூறி நம்மைக் கண்கலங்கச் செய்துவிடுகிறார். பாரசீகக் கவி உமர் கய்யாம் எழுதிய ூரபா இயாத்தைப் பல பேர்கள் மொழி பெயர்த்திருக்கிறார்கள். இதில் ஒவ்வேர் இடத்திலும் தம் கை வண்ணத்தைக் காட்டிவிடுகிறார், நம் யோகியார் :
மாதவிப்பூங் கொடிநிழலில்
மணிக்கவிதை நுலொன்றும்
தீதறுசெந் தேன்மதுவும்
தீங்கனியும் பக்கத்தில்
காதலிநீ பாட்டிசைத்துக்
கனிவொடு கூடுவையேல்
ஏதும் இனிக் கவலையில்லை;
இதுவன்றோ பரமபதம்?
காசில்லாக் கனகரத்தினத்தின் கதையைச் சொல்லும்போது இவருக்கே சமூகத்தின்மேல் அளவு கடந்த வெறுப்பு வந்துவிடுகிறது :
நெஞ்சம் கொதிப்ெபேற
நினைவெல்லாம் தற்கொலையின்
மீதேறச் சென்னைநகர்
வீதியெல்லாம் சுற்றுகிறான்;
காசினிக்குக் கருணையில்லை;
கடவுளுக்குக் கண்ணில்லை.
சீசீ! சமூகத்தின்
சிறுமைகளுக்கு எல்லையில்லை.
ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பது போல் இப்போது யோகியாரின் கவிதைகளிலிருந்து எடுத்துக்காட்டிய இந்தச் சில பாடல்களே அவருடைய புலமைக்குச் சான்று பகரும்.