
இன்றைய குமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் பகுதியில் கோட்டாறு என்ற பேரூர் வரலாற்றுச் சிறப்புப் பெற்றது; பல மகான்கள் தோன்றிய இடம் அது. அவர்களில் மிகச் சிறப்புடையவர்கள் 17-ஆம் நுற்றாண்டில் வாழ்ந்த ஞானியார் சாகிபு ஒலியுல்லாஹ்வும், அவூல் காசீமும். நெசவுத்தொழில் செய்து வந்த பக்கீர் மீரான்
சாகிபு என்பவருக்கும், ஞானியார் சாகிபு ஒலியின் வழிவந்த ஆமினா என்ற பெண்மணிக்கும் மகனாகக் கி.பி. 1874-இல் தென்னகத்து மாணிக்கமாக விளங்கும் அவதானக் கலைஞர் ஷெய்குத்தம்பிப் பாவலர் பிறந்தார்.
ஐந்து வயதில் குர்ஆன் ஓதவும் எட்டு வயதில் மலையாளமும் பின் தமிழ் மொழியும் கற்று, கற்றதை நல்ல நினைவாற்றலுடன் மனனம் செய்தும், இலக்கண இலக்கியங்களைக் கற்றும் தேறினார். பின்பு சென்னை வந்து ஓர் அச்சகத்தில் வேலைக்கு அமர்ந்தார். அங்கே அவரது திறமையையும், தமிழ்ப் பற்றையும் கண்ட பதிப்பகத்தின் உரிமையாளர் இட்டா பார்த்த சாரதி நாயுடு ஷெய்குத்தம்பியை அச்சகத்தின் முக்கியப் பொறுப்பை வகித்துவர வேண்டினார். அப்போது நெல்லை மாவட்டம் மேலப்பாளையம் வள்ளல் ஷம்சுதாசீன் என்பவரது பண உதவியால் கோட்டாறு ஞானியார் சாகிபுவின் பாடல்களை அச்சிட வேண்டியிருந்தது.
ஷெய்குத்தம்பி அந்தப் பாடலை அச்சிட எல்லா வகைத் துணையும் புரிந்தார். உமறுப்புலவர் எழுதிய சீறாப் புராணத்துக்கும் உரை எழுதினார். நாளடைவில் எல்லா வகையிலும் தேர்ச்சியடைந்து அவதானக் கலையையும் கற்றுணர்ந்தார். சுமார் 20 ஆண்டுகள் சென்னை அச்சுக்கூடத்தில் பணியாற்றியபோது திருக்குறள், நாலடியார் ஆகிய நீதி நுல்களையும், தொல்காப்பியம் என்னும் இலக்கண நுலையும், பெரிய புராணம், மகாபாரதம் போன்ற புராண நுல்களையும் கற்றுணர்ந்து மனசில் பதியவைத்திருந்தார்.
இறைவன் பாவலருக்கு அருளிய தனிச்சிறப்பும், பெரும் பாக்கியமும் நினைவாற்றலேயாகும். எந்தப் பாடலும் இவர் ஒருமுறை கேட்டதும் இவரது மனசில் பதிந்து விடும்; அது திரும்ப வரும்பொழுது அறிவுச் செல்வங்களை உடன் கொண்டு விரிவுரையோடு வெளியே வரும். இப்படி எல்லா வகையிலும் கற்றுத் தேறியபின் பாவலர் என்ற பட்டமும் பெற்றார்.
இவர் 1905-இல் கோட்டாறு போய் அங்கே உற்றார் உறவினர்களையும் ஆசிரியரையும் கண்டு தம் கல்விப் பயிற்சியையும், அவதானக் கலையைக் கற்றுணர்ந்ததையும் ஆசிரியரிடம் கூறினார். இது கேட்ட ஆசிரியர் மகிழ்ச்சி அடைந்து அவதானக் கலையைச் செய்து காட்டும்படி கோரினார். அங்கே அப்போது நபிகளின் வழித்தோன்றல் ஆற்றங்கோயா தங்களின் வழிவந்த ஐதுரூஸ் தங்களும் வந்திருந்தார்.
ஷெய்குத் தம்பிப் பாவலர் அவதானம் செய்யும் விவரம் தெரிந்து பாவலரை ஐதுரூஸ் தங்கள் அழைத்துக் குசலம் விசாரித்தார்; பாவலரை அவதானக் கலையை செய்து காட்டும்படி ஆசிரியர் சொன்னார். கோட்டாற்றில் ஒரு பள்ளியில் ஊர்மக்கள் கூடினார்கள். ஆசிரியரும் தங்களும் வந்திருந்தனர். அப்போது பாவலர் சோடசாவாதானம் என்னும் பதினாறு அவதானம் செய்து காட்டினார். இதைக் கண்ட ஊர்மக்களும், ஆசிரியரும், தங்களும் வியந்து ஆசீர்வதித்தனர்.
கால் நடக்க, நா பேச, கண் சபையினரைப் பார்க்க, கை ஒன்று செய்ய, காது ஒன்று கேட்க, இதற்கிடையில் செவிமடுத்த பல்வேறு கேள்விகளையும் சிந்தனையில் நிறுத்தி, கேள்விகளுக்குத் தகுந்த விடையைக் கேள்வி கேட்டவரிடம் முறையே கூறுவதுதான் அவதானக் கலை நிகழ்ச்சி. இதற்குச் சரியான நினைவாற்றல் பெற்றிருப்பதுடன் சிந்தையையே அடக்கி அவதானம் செய்பவர் எல்லா வகையிலும் புலமை பெற்றிருக்க வேண்டும்; அவதானக் கலையில் பலவகை உண்டு. அவை: அட்டாவதானம் (8), தசாவதானம் (10), சோடசாவதானம் (16), த்வாத்ரிம் சத் அவதானம் (32), சதாவதானம் (100) என்றெல்லாம் குறிப்பிடப்படும்.
பாவலர் கோட்டாற்றிலிருந்து சென்னை வந்து சேர்ந்தவுடன் சென்னை மக்கள் அவரை மகிழ்ச்சியுடன் வரவேற்று, சென்னையிலும் அவதானம் செய்து காட்டும்படி வேண்டினர். இட்டா பார்த்தசாரதி நாயுடு அவர்களது முயற்சியால் சென்டிரல் ரெயில் நிலையத்தின் அருகில் இருக்கும் விக்டோரியா பப்ளிக் ஹாலில் 10-3-1907-இல் பார்த்தசாரதி நாயுடுவின் தலைமையில் பல பேராசிரியர்களும், மகாவித்வான்களும், நகரப் பிரமுகர்களும் பொதுமக்களும் கூடினார்கள். அப்போது, பாவலர் சபையின் முன் வந்து, "வாயொன்று சொல்லவும், கையொன்று செய்யவும் வாய்த் தமிழ், ஆயென்றபோதனரே விடைகூறவும் ஆசினிக்(கு), ஏயென்ற ஆறும் அவதானம் செய்பவருக்(கு) இயைந்தனவே" என்று அவதானம் செய்தபடி பாவலர் தம் இரு கைகளிலும் லாடச் சங்கலியைக் கழற்றவும் மாட்டவும் செய்துகொண்டே, "மெய்ஞ்ஞான நாதா - மெய்ஞ்ஞான நாதா" என்று இறைத்துதி பாடிக்கொண்டே சபையினருக்கு வணக்கம் தெரிவித்ததோடு, சபையின் நடுவில் வந்தார்.
அங்கே கேள்வி கேட்க ஏற்பாடு செய்திருந்தபடி பாவலர் சபையைச் சுற்றி வந்துகொண்டிருக்கும் போது அவரது முதுகில் ஒருவர் நெல் எறிவதும், ஒருவர் சிறு கல் எறிவதும், ஒருவர் மலரின் இதழ்களை எறிவதுமாக இருந்தனர். கடைசியில் நெல் எத்தனை, கல் எத்தனை, மலர் எத்தனை என்று அவர் கூறினார். தலைவருடன் உரையாடிக் கொண்டே, கேட்கும் கேள்விகளுக்கும் பதில் கூறினார். ஆயிரம் ஆண்டுகளுக்குள் உள்ள ஆண்டின் மாதம் தேதிக்கு உரிய கிழமையைக் கூறினார். ஒலி வேறுபாடுகளை உணர்த்தல் அடுத்தது. அதாவது, செம்பு, பித்தளைப் பாத்திரங்களை ஷெய்குத்தம்பிப் பாவலரின் முன் வைத்தனர். அதை அவர் தம் விரல்களால் சுண்டி ஓசையை அறிந்து முதல் பாத்திரத்தின் எடை 2 சேர் 1/2 பலம் என்றும், இரண்டாவது பாத்திர எடை 2 சேர் 1 பலம் என்றும், மூன்றாவது பாத்திர எடை 2 சேர் 3 பலம் என்றும், நான்காவது பாத்திர எடை 2 1/2 சேர் என்றும் அதனதன் உண்மையான எடையைக் கூறி விட்டார். இதுகண்ட சபையினர் வியந்தனர். பின் ஒருவர் திருக்குறளில் 'ற' கர ஒற்றுக்கள் கொண்ட குறள் ஒன்று கூற வேண்டினர். உடனே பாவலர், "கற்க கசடறக் கற்பவை கற்ற பின் நிற்க அதற்குத் தக" என்று கூறினார். ஒருவர், "கண்கெட்ட பின் என்றும் காணாத காட்சியைக் கண்டனரே. இது ஈற்றடி ; மற்ற அடிகளைப் பூர்த்தி செய்யுங்கள்" என்றார்.
பாவலர், "விண்பட்டசையும் தருமலிகானின் மிகுதிண்ணனார், பண்பட்ட செந்தமிழ்ப் பாவாணர் போற்றும் பரமன்விழி, புண்பட்டதென்று தம் கண்ணைப் பெயர்த்துப் பொருத்தியிரு, கண்கெட்டபின் என்றும் காணாத காட்சியைக் கண்டனரே" என்று கூறினார்.
சபை பெருவியப்புற்றது. கை தட்டிப் பாவலர் வாழ்க என்றனர் மக்கள். ஒருவர் தாம் பிறந்த மாதமும் நாளும் கூறினார். உடனே பாவலர் அவருடைய முழுவயதையும் கூறிவிட்டார்; ஒருவர் மனத்தில் நினைத்த எண்ணையும் கூறினார். இவற்றுக்கிடையில் தலைவருடன் உரையாடிக்கொண்டே கேள்விகளுக்குப் பதில் கூறி வந்தார். பல நீர்நிலைகளிலிருந்து தண்ணீர் கொணர்ந்து பல பாத்திரங்களில் வைத்திருந்தார்கள். அவற்றை ருசி பார்த்து, "இது கிணற்றுத் தண்ணீர்; இது ஆற்றுத் தண்ணீர்; இது மழைத் தண்ணீர்" என்று கூறிவிட்டார்.
திருக்குறள், தொல்காப்பியம், பெரிய புராணம், மகாபாரதம் போன்றவற்றில் எந்தச் செய்யுளைக் கேட்டாலும் உடனே கூறிவிட்டார்; ஒரு வெண்பாவை ஒருவர் இயற்றிப் பாதி பாடியதும் விட்ட மீதியைப் பாவலர் பாடிப் பூர்த்தி செய்தார். ஒருவர் பாவலரிடம் ஏதேனும் ஒரு புராணத்தில் இரண்டாம் வேற்றுமை (ஐ) உருபுடன் ஏழுமுறை 'நோக்கி' என்ற சொல்லும் வந்த பாடல் ஒன்றைக் கூறும்படி வேண்டினார். உடனே பாவலர் உமறுப்புலவர் பாடிய சீறாப் புராணத்தில் உள்ள விலாயத்துக் காண்டத்தில் வரும்
"காரத்தை நோக்குவர் வானினை
நோக்குவர் கடுப்பின்
எருத்தை நோக்குவர் வீரத்தை
நோக்குவர் எதிராத்
தரத்தை நோக்குவர்
அவையின் அபூஜஹஂலுடன்
உரைத்த வார்த்தையை நோக்குவர்
நோக்குவர் உள்ளத்தை"
என்று பாடி முடித்தார். இது கேட்ட சபையினர் பாவலருக்குச் சீறாப் புராணத்தில் எவ்வளவு பாண்டித்தியம் இருக்கிறது என்று வியந்து பாராட்டினர்.
இப்படியாக அன்று பாவலர் நுறு அவதானங்களைச் செய்து முடித்தார். அப்போது சபையின் தலைவர் பொதுமக்களை நோக்கி, "மகாஜனங்களே! நாம் எதிர் பார்த்ததைவிட மேலாகவே ஷெய்குத்தம்பிப் பாவலர் நுறு அவதானங்களையும் செய்து முடித்து விட்டார். ஆகவே, சபையின் சார்பில் சதாவதானி என்னும் பட்டம் வழங்கிப் பாவலரைப் பெருமைப்படுத்துகிறோம்" என்று கூறி இரண்டு பொற்காப்புகளைப் பாவலரின் இரு புஜங்களுக்கும் அணிவித்துப் பெருமைப்படுத்தினார். சபையினரின் பாராட்டு ஆரவாரத்துக்குக் கேட்க வேண்டுமா?
கூட்டம் முடிந்தபின் ஓர் அதிசயம் காத்திருந்தது. ஷெய்குத்தம்பிப் பாவலரை அழைத்துக் கொண்டு இட்டா பார்த்தசாரதி நாயுடு குதிரை வண்டியில் ஏற்றி வீடு திரும்பிக்கொண்டிருக்கும் போது வழியில் பாவலர் குதிரை வண்டியை நிறுத்தும்படி கூறினார். "வண்டியில் நல்ல பாம்பு இருக்கிறது; அதன் வாடை வருகிறது எனக்கு நன்றாகத் தெரிகிறது" என்றார்.
வண்டியில் தேடினார்கள். கடைசியாக வண்டிக்குக் கீழே புல்போடும் கோணிக்குள் ஒரு பாம்பு இருக்கக் கண்டு பாவலரின் ஆற்றலை வியந்தார்கள். அவர், "நான் எல்லாப் புலன்களாலும் அவதானம் செய்தேன். நாசியால் நுகரும் சக்தியையும் இறைவன் தந்திருக்கிறான். அதனால்தான் பாம்பு வாடையைக் கண்டுபிடித்தேன்" என்று கூறி மீண்டும் வண்டியில் ஏறி வீடு போய்ச் சேர்ந்தார்.
பாவலர் தம் வாழ்நாளில் தமிழுக்காக ஆற்றிய பணிகள் கணக்கில் அடங்கா. உமறுப் புலவர் இயற்றிய சீறாப் புராணத்துக்கு உரை எழுதித் தம் ஆன்மிகப் பற்றையும் நபிகளிடம் தமக்குள்ள பேரன்பையும் விளக்கினார். பாவலர் 'இஸ்லாம் மித்திரன்', 'எதார்த்தவாதி' என்ற செய்தித் தாள்களையும் நடத்தி வந்தார்.
அவர் எழுதி வெளியிட்ட சில நுல்கள், நபிகளின்மீது 'நாயகமான்மிய மஞ்சரி', கல்வத்து நாயகத்தின்மீது 'புகழ்மாலை', வள்ளல் ஷசூம்சுதாஷஂன்மீது 'புகழ்மாலை', ஷாஹஂல்ஹமீது நாயகத்தின்மீது 'அந்தாதி', கோட்டாறு ஞானியார் சாகிபு ஒலிமீது 'அந்தாதி' ஆகியவை.
இன்னும் பல உரைநுல்களும், பல வெண்பாக்களும் இயற்றினார். 76 ஆண்டுகள் வாழ்ந்த அவர் தமிழுக்கு ஆற்றிய தொண்டு அளப்பரியது. அவர் 13-2-1950 திங்கட்கிழமையன்று இறையடி ஏகினார். அவர் வாழ்ந்த இல்லத்தில் ஒரு நுல்நிலையம் அவரது நினைவாக அமைந்துள்ளது.