New Register   -  Login     
Tamil Mozhi - Dataware House
 - தமிழ்மொழி முகப்பு » தமிழ் களஞ்சியம் » தமிழ் அறிஞர்கள் »
சேனல்கள்
இணைப்புகள்
இலக்கிய நூல்கள்
கவிதைகள்
கதைகள்
புதினங்கள்
தமிழக அம்சங்கள்
ஆன்மீக செய்திகள்
மந்திரங்கள்
வேத ஜோதிடம்
நியூமராலஜி
ஆரூடங்கள்
மாயப் படங்கள்
3D படங்கள்
விளையாட்டு
லொல்லு சபா
சமையல் குறிப்புகள்
கோலங்கள்
மகளிர் கட்டுரைகள்
மருதாணி
கடி ஜோக்ஸ்
சர்தார்ஜி ஜோக்ஸ்
முட்டாள் ஜோக்ஸ்
இயற்கை மருத்துவம்
சித்த மருத்துவம்
விளம்பரங்கள்
தமிழ் அறிஞர்கள்
வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் 
 
பிரதி எடுக்க  நண்பருக்கு அனுப்ப
 
 
Vannasarabam Dandauthabani Samigalதோற்றம்

செந்தமிழ் நாட்டின் முகம் போல்வது தென்னாடாகிய பாண்டி நாடு. அதன் திலகம் ஒப்பது திருநெல்வேலி. அதன்கண் விளங்கும் பல்வகை மரபினருள், சைவ வேளாண் குலத்தின ராணவர், செந்தினாயகம் பிள்ளை. அவர் அத்தலத்தின் கடவுளான நெல்லையப்பரது பாகங் கொண்ட காந்திமதியம்மைமீது பேரன்புடையவர்; இல்வாழ்வை மேற்கொண்டவர். மகப்பேறின்மை கருதி ஒன்றன் பின் ஒன்றாக மூன்று மண மெய்தியும், மகவின்றி வருந்தினர். அம்மையின் திருவாக்கின் மூலம் நான்காம் மனைவியின்பால் (1839ல்) தோன்றியவர் சுவாமிகள். தெய்வீகம் காரணமாக, சங்கரலிங்கமென்ற பெயரிடப்பெற்று வளர்ந்தனர். விநாயகர் மந்திரம், இலக்குமி மந்திரம் உபதேசிக்கப் பெற்றுப்பின் முருகப்பெருமானது ஆறெழுத்து மந்திரமும் உபதேசிக்கப் பெற்று, முறையே வேல் வழிபாடு முதலியன செய்து வந்தனர்.

பாடலியற்றல்

இதன் பயனாக எட்டவது வயது முடிந்த பின், சுரண்டையென்ற ஊரில், பூமி காத்தாள் என்ற அம்மன் கோயிலில் நடந்த வழிபாட்டின் சமயம் இவருக்கு முதற்பாடல் உதயமாயிற்று. கண்ட யாவரும் இவரைப் பாராட்டினர். அது முதல் பனை ஓலை ஏட்டில் எழுத்தாணியினால் பாட்டெழுதிக் கொண்டிருப்பர். திருஞானசம்பந்தர் மூன்று வயதில் தேவாரப் பாடல்கள் பாடினர். மெய்கண்ட தேவர் இரண்டு வயதில் சிவஞானபோதம் இயற்றினர். இவர் எட்டரை வயதிற் பாடினர். ஞானிகட்கு வயது உடலின் அளவைப் பொறுத்ததல்ல, முன்னைய தவம் காரணமாகும்.

சமரச ஞானம்

சூரியன், சிவன், சத்தி, கணபதி, திருமால், முருகன் என்ற ஆறு கடவுளரையும், பொதுவான பரம்பொருளையும் குறிப்பிட்டுப் பாடிய பாடல்கள் பல்லாயிரமாகும். தெய்வம் ஒன்றேயாம். அன்பர்கள் மன விருப்புக்கேற்பப் பலவித வடிவு கொண்டு முன்னின்றருளும், "பொன் ஒன்றே பல திறப்பட்ட பணிவகையானாற் போலவும், மண் ஒன்று பலவிதப் பாண்டமாவது போலவும்," என்ற கருத்துக்கொண்டு பலபடப் பாடிய பாடல்கள் பல ஆயிரமாகும். பசுவின் நிறம் பல ஆயினும் பாலின் நிறம் ஒன்றே யெனத் தெளிவது போலாகும். "ஒன்றதே பேரூர், வழி அதற்கு ஆறுள" என்ற திருமந்திரமும்இதை வலியுறுத்துவதாம்.

வைராக்கியம்

முருகப் பெருமான் சுவாமிகள் மனவெளியிற் காட்சி வழங்கினர். திருவருள் பெற்று உலகிற் சீவகொலை, மாமிச உணவு என்ற இரண்டையும் அறவே நீக்குதல் வேண்டும், அதற்கான அருட்பேற்றைப் பெற முருகனைக் கண்முன் காணவேண்டும். அப்பேறு பெற்றாலன்றி மீண்டும் வருவதில்லை. மலையிலேறி உருண்டு அவன்முன் உயிர் விடுவேன் என்ற தீரத்துடன், பாண்டி நாட்டுச் செங்கோட்டைப் பக்கமுள்ள முருகன் தலமான திருமலை மீதேறி காட்சி தர முருகனை வேண்டினர். முன் வராமை கண்டு பூமி நோக்கி உருண்டனர். உடலில் ஊறு ஒன்றும் நேரவில்லை. ஆனால், இடது தோளில் மட்டும் ஒரு காயமேற்பட்டது. வள்ளி நாயகியார் மனவெளியில் தோன்றித் திருநீறிட்டு ஆற்றினள். பின், வள்ளியூரில் முருகன் றிருமுன் வைத்துக் கல்லாடை பூண்டனர். இல்லற வாழ்வை வெறுத்தனர். இவர் பாடிய பாடல்கள் யாவும் தான் பாடியதாக முருகன் கூறினர். இவர் ஒரு கருவியாயும், அதை இயக்குபவன் தானும் என்ற கருத்து. இக்கருத்தினை, சுவாமிகள் தம் பாடலிற் பல இடத்து கூறுகின்றனர். திருஞானசம்பந்தர், "எனதுரை தனதுரையாக" என்று இலம்பையங்கோட்டூர் தேவாரப் பாடலிற் கூறுவது போலாகும். இவர் எழுத்தாணியை முருகன் சர்வசாதாரணியென்று கூறினர். எவ்விதப் பாக்களையும் எளிதில் எழுதுவதுபற்றி முருகன் சுவாமிகள் எழுத்தாணிக்குப் பெயர் கூறினர். எழுத்தாணிக்கும் முருகனுக்கும் சுதந்தரமே யன்றி, சுவாமிகள் அவற்றை எழுதுமளவில் இயங்கினர் என்பது அருளிய சிறப்பு.

பாடலின் வகை

அழுக்காறு காரணமாகப் புலவர், மாந்திரீகர் இவரை எதிர்த்து வாதிட்டனர். திருவருளால் எவற்றையும் எளிதில் வென்றனர். திருச்செந்துர் முருகன் திருவாணைப்படி பதினாறுவகைப் பிரபந்தங்களும், திருவரங்கத்துப் பெருமானை ஆயிரம் பாடலிலும், தில்லை நடராசப் பெருமாளை ஆயிரம் பாடலிலும், பழனித் தண்டபாணிக் கடவுளை ஆயிரம் பாடலிலும், பொதுவான பரம்பொருளை ஆயிரம் பாடலிலும் பாடித் துதித்தனர். ஏழாயிரப் பிரபந்தம் என்பது இதுபோன்றதொகைப் பனுவல். மேற்கூறிய ஆறு சமயமும், அதீதமான பரமுமாகிய ஏழையும் குறித்து வரிசைப்பட அடுக்கடுக்காகப் பாடப்பட்டதே ஏழாயிரப் பிரபந்தமாகும்.

இலக்கண நுல்

எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி என்ற ஐந்தையும் கற்றுப் புலமை பெற்றவர்கள். பெற்ற அப்புலமையைப் பயன்படுத்துவதன் இலக்கணத்தைக் கூறுவதே ஆறாவதான புலமையிலக்கணம். இதன் விவரம் அறியாதவர் ஏதேதோ பேசுவர். வண்ணம் என்பது சந்தங்களாலான பெரும்பாட்டு. பட்டினத்தார் பாடிய உடற்கூற்று வண்ணம் இத்ததையது. அத்தகைய வண்ணப் பாடல் பல பாடினர். ஆகவே, வண்ணச் சரபம் என்றனர் உலகர். அதன் இலக்கணமும் சுவாமிகள் தான் பாடியுள்ளனர். வேறு இதுவரை யாரும் பாடியதேயில்லை. இதுபோல, ஓலியலந்தாதி என்பதொன்று பாடினர். அது அறுபத்து நான்கு கலையுள்ள சந்தப் பாடல் 30 உள்ளதாய், அந்தாதித் தொடராய்ப் பாடுவது. அதுவும் இதுவரை யாரும் பாடியதில்லை.

நிரோட்டம் என்பது உதடுகள் ஓட்டுதல் குவிதலின்றிப் பாடப் படுவது. மேற்படி பெயரில் அக்குற்றமிருப்பதால், இவர், இதழ் அகல் அந்தாதி எனப் பெயரிட்டு, தில்லை, நெல்லை, அரங்கம், சென்னை முதலிய தலக்குறிப்புடனும், பொதுவாயும் பாடியுள்ளார். எவ்விதப் பாடலாயினும் அதற்கென வருந்திச் சிந்திப்பதில்லை. முருகன் திருவருளைச் சிந்தித்து ஏடும் எழுத்தாணியும் எடுத்தெழுதுவர். இவர் எண்ணியதைவிட, அரிய கருத்தும் நயமுமாகப் பாடல்களமையும். இதையும் சுவாமிகள் பல இடங்களிற் கூறியிருக்கின்றனர். இரண்டொன்று இங்குக் குறிப்பிட்டுள்ளது கொண்டு காண்க.

"வந்தபடி பாடுகின்ற-என்றனது பாடலின் கண்
வன்பிழையே தேனும் ஒன்றில் உனதேயாம்"
என்றும்,
"என்மனதில் ஒன்றெண்ண என்கை மற்றொரு வண்ணம்
எழுதிடும் இயற்கை கண்டும்"
என்றும்,
"என் பாடலேயென யான்பாடும் பாடல்கள் யாவையும் சேய்
தன்பாடலே யெனச் சாற்றுகின்றான்"
என்றும் வருபவற்றால் அறியலாம்.

தமிழின் உயர்வு கூறல்

தமிழ் மொழியே உயர்வென்று ஒரு நுறு பாடல்கள் கூறினர். ஒரு சமயம், வாதம் செய்த இருவரிடம் வெற்றி பெற்றுப் பாடியதாகும். "தமிழ் மொழிக்கு உயர் மொழிதரணியில் உளதெனில், வெகுளியற்றிருப்போன் வெறும் புலவோனே" என்பர் வேறு ஒரு நுலில். இவரது தியான செப வழிபாட்டுக்கு இடையூறாகப் புதுப்புதுப் பாட்டுகள் வந்து கொண்டிருக்கும். "உபாசனைக்கு இடையூறாகப் பாடல் வருகிறது. சுவாமிகள் இதனால் மனம் வருந்தினா. தமிழ்க் கவிகள் உதிக்கும் வம்பு சகிக்கிலேனே" என்று பதிகமே பாடி விட்டார். புலவர் பலர் பாட வாக்கு வரவில்லையென்று துன்புறுவர். இவர் நிலையிப்படி.

வடலுரடிகள் சந்திப்பு

சுவாமிகள் காலத்தில் திருநெல்வேலியிலும், பிற இடங்களிலும், பல புலவர்கள், தவசிகள், வள்ளல்கள் இருந்தனர். இவருடன் தொடர்பு கொண்டிருந்தனர். இவரது பாடலுக்கு இணங்கி உதவி செய்தனர். இவராற் சிறப்பித்துப் பாடப் பெற்றவர்கள் பலர். இவரைப் புகழ்ந்து பாடியவர்களும் பலராவர். அவருள் வடலுர் இராமலிங்க அடிகள், இவரது கருத்துக்கு ஒத்த மனப்பண்புள்ளவர். அவருடன் மூன்றி தடவை கண்டு பேசி, கவிகளின் நாமங்களை இருவரும் பாடிக் கலந்து நட்புறவு கொண்டிருந்தனர். அக்கால் அவர் திருவுரு மறைந்த செய்தி கேட்டு வருந்தினர். மனவெறியில் சிவபிரான் தோன்றி அவர் எழுந்து வரும்படி பாடுக என்றனர். இரு பதிகம் பாடினர். ஒன்று அநுபவம் பதிகம். மற்றொன்று, வினாப்பதிகம். அவரது உள்ள நிலையை ஒவ்வொரு பாடலிலும் பாடியிரங்கினர். அவர் பாட்டுக்களை இரவிலும் எழுதுவர். வண்டுகள் விளக்கொளிக்காக வந்து எண்ணெய், நெருப்புச் சுடரில் விழும் இறக்கும். அதுசமயம் இதன் இறப்பை என்முன் விளைத்தனையே இறைவா! என்று அழுவாராம். "மிளகை நேர் ஒரு சிறிய வண்டெழுந்து விளக்கில் வீழினும் விழிப்புனல் சிந்தி-இளகும் நெஞ்சகம் பெறும் வடலுரான்" "இரக்கமே வடிவாம் வடலுரான்" என்றெல்லாம் கூறி-இன்னும் ஏன் எழுந்திடப் புரிந்திலையே" என்று வினாவினர்.

"வாழை நறுங்கனியினைப் பாகினிற் குழைத்தாங்கு இனித்த செஞ்சொல் வனைந்து போற்றும் ஏழையன்பன்" என்று ஒரு சமயம் இவர் பாடலின் நயத்தைப் பாராட்டினர். தனக்கென எப்பயனையும் கருதாமல் உலக நன்மையே வேண்டியது பற்றி ஏழையன்பன் என்று கூறியதறிக. இப்படிப் பல பாடல்களில் வடலுரடிகளைக் கூறி அநுதாபப்படுவார் சுவாமிகள்.

சங்கரதாஸ் அடிகள் தொடர்பு

அம்முறையில் தொடர்பு கொண்ட பல பேரன்பர்களில் ஒருவராக-தவத்திரு சங்கரதாஸ் சுவாமிகள் நம்புறவு கொண்டனர். இவர் முருகதாசர். அவர் சங்கரதாசர். அவரது நாடகத் தமிழின் இனிமை கண்டு ஒரு வெண்பாவிற் புகழ்ந்து கூறியுள்ளனர் சுவாமிகள். தண்டபாணி சுவாமிகள், முத்தமிழும் பாடுதல் வேண்டும் என்ற கருத்துக் கொண்டு முசுகுந்த நாடகம் என்ற பெயரில், முருகனது வரலாற்றுடன் இணைந்த-முசுகுந்தன் வரலாற்றினை நாடக பாணியில் இயற்றினர். அதையும் முருகப் பெருமான் பாடும்படி சொன்ன மொழி கொண்டு பாடினர். இவ்விவரம் அதன் முகப்பிற் கூறுகின்றார்.

'கந்தன் வந்து முசு குந்தன் கதையை ஒரு நாடகமாய்ச் செந்தமிழாற் பாடென்று
செப்பியதாற் சொல்கின்றேன் சந்தம் இசை தாளம் நயம் தவறாமற் காத்தருளும்
தந்தம் ஒன்று காட்டும் எழில் தந்தி முன் தாளிணையே
-என்றும்,
காரணப்பட்டூரில் வளர் கந்தசாமித் தொழும்பன்கழ லென்றேற்பச்,
சீரணவுங் குமாரபுரிச் சண்முகமா முனியும் அன்பிற் செப்பென்றோதத்,
தாரணவுந் தடம்புயத்து முசுகுந்தன் சரித்திரத்தைச் சலதி சூழும்
பாரணங்கின் முகம்போலும் புலவர் வியந்திட விரித்துப் பகர்கின்றேனே.
என்றும் பாடியறிவிக்கின்றார் சுவாமிகள்.

திருவருட் பேறு

இப்படிப் பல அருளாடலும், தமிழ்ப் பாடலும் இயற்றிய வண்ணச்சரபம் அருள்மிகு தண்டபாணி சுவாமிகள் இறுதியில் விழுப்புரத்தையடுத்த திருவாமாத்துர்ச் சிவதலத்தில எல்லை தாண்டா நியதியுடன் புத்தாண்டுகள் தங்கித் தவமியற்றினர். தமது ஐம்பத் தொன்பதாவது வயதில் (1898ல்) திருவருட் பேறு பெற்றனர். அவ்விடத்தில் தண்டபாணி ஆலயமும், பல மண்டபமும், வேறு உற்சவ மூர்த்தங்களும் நிறுபர் பெற்றிருக்கின்றன. நாள் வழிபாடு, சிறப்பு வழிநாடுகளும் நடைபெறுகின்றன. சுவாமிகள் பாடி எழுதப் பெற்ற ஏட்டுச்சுவடிகளும் அம்மடத்திற் பரி பாலிக்கப்பட்டுள்ளன. சுவாமிகளின் சந்ததியார் பூசை வழிபாடு முதலியன புரிந்து வருகின்றனர். சுவாமிகள் திருவுரு மறைந்து, அறுபத்தேழு ஆண்டுகள் நிறைவாயின. ஆனிமாதம் திருவோணத்தில் இயற்கையை கவர்ந்தார்.

முடிவுரை

சுவாமிகள் வரலாறு மிகுதியுண்டு. தவத்திரு. சங்கரதாஸ் சுவாமிகள் மலர் வெளியீட்டில் சங்கரதாஸ் சுவாமிகள் மீது அன்பும் பாராட்டும் கொண்டு தண்டபானி சுவாமிகள் பாடியுள்ள பாடலை விளக்கு முறையில் சிறிது வரலாறு குறிக்கப் பெற்றது. சங்கரதாஸ் சுவாமிகளது குரு பூஜை, மலர் வெளியீடு முதலியவற்றைப் பெரிதும் அன்புடன் செய்து வருகின்ற உயர்திரு டி.கே. சண்முகம், துணைவர், பகவதி முதலிய பேரன்பர்கள் சமயத்துக்கும் தமிழுக்கும் செய்து வரும் தொண்டு நாமங்களை உருவாக்கி நடத்தி வரும் சிறப்பு. தமிழ் நாடே யன்றிப் வெளி நாட்டவரும் பாராட்டுவது உலகிற் பலரும் அறிந்த ஒன்று தமிழ்ப் புலமையும் தவ ஒழுக்கமும், தெய்வ அருளும் பெற்ற வண்ணச்சரபம் அருள்மிரு தண்டபாணி சுவாமிகளையும் தவத்திரு சங்கரதாஸ் சுவாமிகளையும் இணைத்துப் போற்றும் பண்பு டி. கே. எஸ். சகோதரர்கட்குத் தனிச்சிறப்பான பெருமை தருவதாகும். டி. கெ. எஸ். அவர்களும் பகவதி அவர்களும் தண்டபாணி சுவாமிகள் விழா சென்னையில் நடக்கின்ற சமயங்களில் சிறந்த பணியாற்றிச் சிறப்பித்து வருகின்றனர். இவர்கட்கு எல்லா நலமும் இனிதெய்தும்படி திருவருளை வேண்டுகிறேன்.

தவத்திரு. சங்கரதாஸ் சுவாமிகளைப் பற்றி தண்டபாணி சுவாமிகள் பாடிய ஒரு கவி மட்டும் மேற்படி தனிப்பாடல்களில் குறிக்கப்பட்டிருந்தன. அதைக் கீழே காட்டியிருக்கிறேன்.

தனிப்பாடல் வெண்பா
என்னன்புக் கேற்றோன் இசைநாட கப்புலமை
தன்னிலுயர் சங்கரதா சுப்புலவன்-வன்னமலி
கண்பாவு தோகைமயிற் கந்தனரு ளிற்சிறந்தோன்
வண்பா வலர்கண் மணி.

இவர்போல் பலர் இருந்திருக்கின்றனர். அவர்கள், ஞானசித்த சாமி, சண்முக சாமி, சோழவந்தான் கந்தசாமி ஆகியோராவர்.

 
Tag : Tamil Aringargal, Tamil Writers, Tamil Poets
 
தங்களுடைய படைப்புக்கள் தமிழ்மொழி.காம் இல் வெளியிட, படைப்புக்களை யுனிகோடில் டைப் செய்து admin@tamilmozhi.com என்ற முகவரிக்கு அணுப்பிவைக்கவும். படைப்புகள் 7 நாட்களுக்குள் வெளியிடப்படும்.
DownloadWings.com
முகப்பு | எங்களைப் பற்றி | உங்கள் கருத்து | விளம்பரத்திற்கு | தள வரைபடம்
Homepage | About Us | Write to Us | Advertise with us | Site Map
Copyright © 2006-2009 TamilMozhi.com. All rights reserved
Best viewed with Internet Explorer 3.x or Later