ஒரு நாட்டின் இயற்கை அமைப்பையும் சூழ்நிலையையும் பழக்க வழக்கங்களையும் பொறுத்து வேறுபட்டு அமையும் விளையாட்டு களிலிருந்து அந்நாட்டுச் சமூக வாழ்வு பற்றியும் அறிந்து கொள்ளலாம். எனவே தமிழர்களுக்குரிய நாட்டுப்புறவிளையாட்டுகள் பற்றி அறிவதன் மூலம் தமிழர் வாழ்வியலை அறியலாம். விளையாட்டுகள் பொழுது போக்காகவும், மரபு தொடர்ச்சியாகவும், நம்பிக்கை சார்ந்ததாகவும், உடல் மற்றும் அறிவுத் திறன் வளர்ச்சிக்காவும், பிறர் கண்டு மகிழ்வதற்காகவும் ஆடப்படுகின்றன.
பல பழந்தமிழர் விளையாட்டுகள் இன்றளவும் விளையாடப் பெறுகின்றன. அவற்றில் இன்று விளையாடப் பெறாத சில விளையாட்டுகள் (புனல் விளையாட்டு, பொழில் விளையாட்டு,
பந்தாட்டம், ஊஞ்சல், மல்லாட்டம், கழைக்கூத்து, வல்லாட்டம்) இங்கே குறிப்பிடப்படுகின்றன.
ஆடவர் விளையாட்டுகள் :
ஆடவர் விளையாட்டுகள் பெரும்பாலும் புறவிளையாட்டுகளாகவே (outdoor games) உள்ளன. ஜல்லிக்கட்டு, பாரிவேட்டை, சிலம்பம், புலிவேடம், சடுகுடு, இளவட்டக்கல், ஓட்டம், இரட்டை மாட்டுப் பந்தயம், மோடி விளையாட்டு, உரிமரம் ஏறுதல், பானை உடைத்தல், உறிப்பானை விளையாட்டு, சூதுதாயம், வாய்ப்புநிலை விளையாட்டுகள், அறிவுத் திறன் விளையாட்டுகள் ஆகியன ஆடவர் விரும்பி ஆடும் முக்கிய விளையாட்டுகள் ஆகும்.
மகளிர் விளையாட்டுகள் :
மகளிர் விளையாட்டுகள் பெரும்பாலும் அக விளையாட்டுகளாகவே (Indoor games) உள்ளன. தாயம், பல்லாங்குழி, தட்டாங்கல், மஞ்சள் நீர் தெளித்தல் முதலியன மகளிர் பங்கேற்கும் முக்கிய விளையாட்டுகளாகும்.
சிறுவர் சிறுமியர் விளையாட்டுகள் :
எலியும் பூனையும், சோளக்கதிர், சிறுவீடு, குலைகுலையாய் முந்திரிக்காய் ஆகியன சிறுவர் சிறுமியர் சேர்ந்து பங்கு கொள்ளும் முக்கிய விளையாட்டுகள் ஆகும்.
சிறுவர் விளையாட்டுகள் :
கிட்டிப்புள், குத்து விளையாட்டு, பச்சைக் குதிரை, குத்துப் பம்பரம், குண்டு விளையாட்டு, எறிபந்து, காற்றாடி, பட்டம், வண்டியுருட்டுதல், பூச்சி விளையாட்டு, மரங்கொத்தி முதலியன சிறுவரின் முக்கிய விளையாட்டுகளாகும்.
சிறுமியர் விளையாட்டுகள் :
சில்லி, சோற்றுப்பானை, கும்மி, திரிதிரி, கண்கட்டி விளையாடுதல், மலையிலே தீப்பிடிக்குது, தாயம், பல்லாங்குழி, தட்டாங்கல் முதலியன சிறுமியரின் முக்கிய விளையாட்டுகளாகும்.
குழந்தை விளையாட்டுகள் :
உச்சரிப்பு விளையாட்டு, வினா விடைச் சங்கிலி, பருப்புக் கடைதல் ஆகியன கிராமபுற குழந்தைகள் பங்கு பெறும் முக்கிய விளையாட்டுகள் ஆகும்.
இனி, இத்தனித்தனிப் பிரிவினரின் முக்கிய நாட்டுப்புற விளையாட்டுகள் பற்றி சற்று விரிவாகக் காண்போம்.
1. புனல் விளையாட்டு :
பண்டைத் தமிழகத்தில் ஆற்றருகே இருந்த மக்கள் எல்லோரும் ஆண்டுதோறும் ஆற்றில் புதுவெள்ளம் வந்தவுடன் ஒருங்கே சென்று பகற்பொழுது முழுதும் அவ்வெள்ளத்தில் திளைத்தாடி இன்புற்ற விளையாட்டு விழா புனல் விளையாட்டு என்று பெயர் பெற்றது. அது நீர்விழா, நீராட்டு, நீராட்டணி முதலிய பெயர் கொண்டும் வழங்கிற்று.
கரையவர் மருவி திரையகம் பிதிர திடுமென நெடுநீர் குட்டத்தில் குதித்து நீந்தி மண்ணெடுத்து கல்லா இளைஞர் மகிழ்ந்தனர் (புறநானுறு 243/8-11). பெண்டிர் அருவிகளிலும் பாய்சுனைகளிலும் ஆடவர் கடும்புனலிலும் குடைந்து குடைந்து ஆடினர்; குறுநுரை சுமந்து பலமலர் உந்தி வருகின்ற புதுநீரில் நெஞ்சு மகிழ ஆடினர் என்று சங்கப்பாடல்கள் விளக்குகின்றன.
நீராடுவோரெல்லாம் புதுவெள்ளம் வரும் ஆற்றில் இடுவதற்குப் பொன்னாலும் வெள்ளியாலும் செய்த மீன் முதலிய காணிக்கை களையும், தெப்பம் பரிசல் போன்றமிதவைக்கருவிகளையும், காதலர் மீது வாச நெய்யையும் வண்ண நீரையும் தெளிப்பதற்கு துருத்தி கொம்பு சிவிறி முதலிய விளையாட்டுக் கருவிகளையும், நீராடியப் பிறகு தேவைப்படும் உணவு, உடை முதலியவற்றையும் அவரவருக்கு இயன்றவாறு யானை குதிரை தேர் ஆகியவற்றில் ஊர்ந்தும், கால்நடையாக நடந்தும் கொண்டு செல்வர். வழியெங்கும் தங்குவதற்கான குடில்களும் புதுக்கடைகளும் அமைந்து திருவிழா கோலம் பூண்டிருக்கும்.
நீந்த வல்லவர்கள் சற்று ஆழத்திலும், அல்லாதார் கரையருகிலும் நீராடுவதும், உடம்பில் பூசும் சுண்ணம் சாந்து குழம்பு முதலியன வற்றின் ஏற்றத்தாழ்வு பற்றிப் பெண்டிர் கிண்டல் பேசுவதும், தம் கணவன்மார் பிற பெண்டிரோடு கூடிப் நீராடினாரென்று மனைவியர் ஊடல் கொள்வதும் புனல் விளையாட்டு நிகழ்ச்சிகளாகும்.
2. பொழில் விளையாட்டு :
நகரமாந்தரெல்லாம் இளவேனில் காலத்தில் ஊருக்குச் சற்றுத் தொலைவில் உள்ள ஒரு சோலைக்குச் சென்று தனித் தனியாகவும் கூட்டங்கூட்டமாகவும் ஒரு பகல் பொழுது முழுதும் விளையாடி சமைத்துண்டு மகிழ்ந்த விழா பொழில் விளையாட்டு எனப்பட்டது. இது இக்காலத்தில் உறவினரும் நண்பருமாக ஒரு சிலர் கட்டுச் சோறுடன் பிக்னிக் செல்வது போன்றதாகும்.
சோலையை அடைந்த பின் சமையலில் ஈடுபடுவோர் தவிர ஏனையோரெல்லாம் வெவ்வேறு இடம் சென்று விடுவர். ஆடவருள் பெரியவர்கள் வேட்டையாடவும், சிறியவர்கள் மரமேறுதல் காய்கனி பறித்துண்ணல் விளையாடுதல் பொருட்டும் பிரிந்து விடுவர். பெண்டிர் சமையல் செய்ய, சிறார்கள் மலர் கொய்து மாலை தொடுக்கவும், பொம்மை செய்து மகிழவும், ஊஞ்சலமைத்து உந்தியாடவும் ஆங்காங்கு அகன்று விடுவர். நண்பகல் அனைவரும் கூடி அமர்ந்து உணவு உண்ட பின், இளைப்பாறி விட்டு மாலையில் வீடு திரும்புவர்.
3. பந்தாட்டம் :
இதனை மகளிர் மட்டுமே ஆடினர். இவ்விளையாட்டு வீட்டிற்கு வெளியிலும் முற்றத்திலும் மாடத்திலும் மணல் மேட்டிலும் ஆடப்பட்டது. பந்து நுலினால் செய்யப்பட்டது. அதைச் சுற்றிப் பல வேலைப்பாடுகள் அமைந்திருந்தன. 'வரிபுனை பந்து' (நற்றிணை 305:1, குறிஞ்சிக் கலி 15/1-4) என்று சங்ககால இலக்கியங்கள் கூறுகின்றன. இதனைச் செல்வக்குடி மகளிர் விளையாடினார்கள். சங்கப் பாடல்களில் வரும் ஆடுபந்து, எறிபந்து என்னும் தொடர்கள் விளையாடும் முறைகளைத் தெரிவிக்கின்றன. வானைத் தொடுமளவிற்குப் பந்தை எறிந்து விளையாடியதாக குறிஞ்சிக் கலி (4:22-23, 21/6-7) குறிப்பிடுகிறது. காலால் பந்தைத் தள்ளி விளையாடியதாக நற்றினை (324:7-9) சொல்கிறது. எனவே சங்க காலத்தில் கைப்பந்து (Catch ball) எறிபந்து (Sky ball), கால்பந்து (Foot ball) ஆட்டங்களை மகளிர் ஆடினார்கள் என்பதை அறியலாம்.
4. ஊஞ்சல் :
பழங்காலத்தில் பருவப் பெண்கள் மகிழ்ந்து விளையாடிய ஆட்டங்களில் ஒன்று ஊஞ்சல் ஆட்டம். பனைமடலுக்குக் கருக்கு நீக்கிப் பலகை இணைப்புப் போல் பரப்பிப் பெருங்கயிற்றால் பிணைத்து ஊஞ்சலை அமைத்தார்கள் (நற்றிணை 90/6-10). கருங்கால் வேங்கை மரத்திலும் ஊஞ்சல் கட்டப்பட்டது. (நற்றினை 368/1-4). ஞாழல் மரத்தின் உயர்ந்த கிளையிலும் (அகநானுறு 20/5-8) கட்டப்பட்டது. சுறாமீன் கொம்பினால் பலகை செய்தும் அதனைக்
கட்டி விளையாடினார்கள்.
5. மல்லாட்டம் :
இது இரண்டு ஆடவர்கள் விளையாடும் புற விளையாட்டு. சோழன் போர்வைக்கோ பெருநற்கிள்ளிக்கும் முக்காவனாட்டு ஆமூர் மல்லனுக்கும் நடைபெற்ற மல்லாட்டத்தைப் பற்றி புறநானுற்றுப் பாடல்கள் (80,81,82,83,84,85) சித்தரிக்கின்றன. மேலும் பட்டினப்பாலை, மறவர்கள் கையிலும் கலத்திலும் சண்டை செய்தனர் என்று குறிப்பிடுகிறது. ஆகவே சங்க காலத்தில் மல்லாட்டம் (wrestling), கைக்குத்துச் சண்டை (boxing) ஆகிய இரண்டும் இருந்திருக்கின்றன என தெரியவருகிறது. சிலப்பதிகாரம் பதினொருவகைக் கூத்துகளுள் ஒன்றாக மல்லாட்டத்தைக் குறிப்பிடுகின்றது. பின்னர் அறுபத்து நான்கு கலைகளுள் ஒன்றாகவும் ஏற்றுக் கொள்ளப்பட்டது.
6. கழைக்கூத்து :
இந்த ஆட்டம் ஆரியக் கூத்து என்றும் கயிற்று நடனம் என்றும் சுட்டப்படுகின்றது. விழா நாட்களில் ஆடல்மகளிர் உடற்பயிற்சி வித்தைகள் (நிஹ்னீஸீணீவீநீ)பலவற்றைச் செய்வார்கள். கழைக்கூத்து நடக்கும் போது வாத்தியங்கள் பல ஒலிக்கப்படுகின்றன. மகளிர் கயிற்றில் நடந்தும் ஆடியும் பொதுமக்களை மகிழ்விக்கின்றனர். இதனை ஆரியர் ஆடினர் என்று குறுந்தொகை (7/3-5) கூறுகிறது. இது விழாகாலத்தில் நடைபெற்றதென குறிஞ்சிப்பாட்டு (192-194) குறிப்பிடுகிறது. இது இன்று தெருக்கள் கூடுமிடத்திலும் சர்க்கஸிலும் ஆடப்படுவதைக் காணலாம்.
7. வல்லாட்டம் :
தொல்காப்பியர் எழுத்ததிகாரத்தில் புணர்ச்சி இலக்கணம் கூறுமிடத்து வல்லாட்டம் (373, 374) பற்றி குறிப்பிடுகிறார். இந்த ஆட்டத்தை முதியோர் ஆடினர் என்றும், ஊர்ப் பொது மன்றத்தில் இதற்கான வல்லப் பலகை இருந்தது என்றும், முதியோர் மிகுந்த சிந்தனையோடு ஆடினர் என்றும் புறநானுறும் (32), அகநானுறும் (377) தெரிவிக்கின்றன. வல்லுப்பலகை பற்றி மருத கலியும் (29/13-14) குறிப்பிடுகின்றது. வல்லாட்டம் போட்டி விளையாட்டாக ஆடப்பட்டது என்று பரிபாடலின் (29/13-14) வாயிலாக அறியலாம். திருவள்ளுவர் காலத்தில் வல்லாட்டம் சூது விளையாட்டாக இருந்திருக்கிறது.
ஜல்லிக்கட்டு :
ஜல்லி என்பது விழாவின் போது மாட்டின் கழுத்தில் கட்டப்படுகிற வளையத்தினைக் குறிக்கும். புளியங் கம்பினால் வளையம் செய்து காளையின் கழுத்தில் அணியும் வழக்கம் தற்போதும் வழக்கத்தில் உள்ளது.
ஏறு தழுவுதல் (மஞ்சு விரட்டுதல்) என்ற சொல் பழந்தமிழ் இலக்கியங்களில் காளையை அடக்கும் வீர விளையாட்டின் பெயராகப் பயின்று வருகிறது. கொல்லக் கூடிய காளையைத் தழுவிப் போரிட்டு அடக்குவதால் 'கொல்லேறு தழுவுதல்' என்றும் சிறப்பித்துக் கூறப்படுகிறது. பண்டைக்காலத்தில் ஐந்திணை நிலங்களுள் ஒன்றாகிய முல்லை நிலத்தின் ஆயர் மக்களிடம் இவ்வேறு தழுவுதல் (மலைபடுகடாம் 330-335, முதல் ஏழு முல்லைக்கலிப் பாடல்களில் ஆறாம் பாடலைத் தவிர மற்ற பாடல்கள்) இடம் பெற்றது. ஏறு தழுவலுக்கும், குரவைக் கூத்திற்கும்
தொடர்பிருந்தது (சிலப்பதிகாரம், ஆய்ச்சியர் குரவை: 17-18). குரவைக் கூத்து ஏறு தழுவலுக்குரிய நாளுக்கு முதல் நாள் மாலையிலாவது, ஏறு தழுவும் நாளின் மாலையிலாவது ஊர் பொதுமன்றே நிகழும். முதல் நாளாயின் தம் காதலரை ஏறு தழுவுவதற்குத் துண்டும் பாட்டுகளையும், ஏறுதழுவிய நாளாயின் தம் காதலர் வெற்றியைக் கொண்டாடும் பாட்டுகளையும் மகளிர் பாடுவர். ஏறுதழுவுதல் மண வினையுடன் தொடர்புடையதாய் அமைந்திருந்தது. காளையை அடக்கிய மணமாகா இளைஞர் பெண்ணினைப் பரிசாகப் பெறுவதுண்டு. இன்று ஏறு தழுவுதல் என்ற பெயர் வழக்கில் இல்லை. இருப்பினும் ஏறுதழுவலின் எச்சமாக இன்றைய ஜல்லிக்கட்டு விளங்குகிறது.
ஏறு தழுவதற்கும் ஜல்லிக்கட்டுக்கும் சில வேறுபாடுகளே உள்ளன. முல்லை நிலத்து மக்களாகிய ஆயரிடம் மட்டுமே ஏறுதழுவுதல் இடம் பெற்றது. தற்போது ஜல்லிக்கட்டில் ஆயர் மட்டுமின்றி பல திறத்தவரும் பங்கேற்கிறார்கள். ஏறு தழுவுதலில் உள்ளது போன்றே ஜல்லிக்கட்டு கள்ளர், மறவரிடையே பெண் கொடுப்பதற்கான தேர்வு களனாக உள்ளது. இருப்பினும் ஜல்லிக்கட்டில் வென்றவர் பண முடிப்பினைப் பரிசாகப் பெறுதல் பெரும்பான்மையாக உள்ளது. ஜல்லிக்கட்டு தைப்பொங்கலுக்கு மறுநாள் மாட்டுப்பொங்கல் நாளன்று விழாப் போல் கொண்டாடப்படுகிறது. ஏறு தழுவுதல் விழா தெய்வ நம்பிக்கையுடன் தொடர்புடையதாக இருக்கவில்லை. ஆனால் ஜல்லிக்கட்டு கிராமிய தேவதைகளின் வழிப்பாட்டு நம்பிக்கையுடன் தொடர்புடையதாகத் திகழ்கிறது. அம்மை, வைசூரி போன்ற கொடிய நோய்கள் பரவிய காலத்திலும், மழையில்லா வறட்சி காலங்களிலும், பிள்ளை வரம் கேட்கும் நிலையிலும் வேண்டுதல் நடைபெறும். இக்குறைகள் நீக்கப்பட்டால் பொங்கல் நாளன்று ஜல்லிக்கட்டுகிறோம் என்பதே வேண்டுகோளாய் அமைகிறது.
ஸ்பெயின், போர்ச்சுக்கல், மெக்ஸிகோ நாடுகளில் காளைப் போர் முக்கியமான தேசியப் பொழுதுப் போக்கு விளையாட்டாக இன்றும் நடைபெறுகிறது. காளைகளை அரங்கத்திற்குள் விரட்டி, ஆத்திரமூட்டி சண்டையிட்டுக் கொல்வதே இக்காளைப் போரின் நோக்கம். இம்மேனாட்டுக் காளைப் போரும் ஜல்லிக்கட்டும் ஒன்று போலத் தோன்றினாலும், இரண்டும் முற்றிலும் வேறுபட்டவை ஆகும்.
பாரிவேட்டை :
பாரி என்றால் கொட்டு முழக்கத்துடன் செய்யும் இராக்காவலைக் குறிப்பதாக உள்ளது. பாரி வேட்டையிலும் கொட்டு முழக்கத்துடன் இரவில் வேட்டைக்குச் செல்லும் பழக்கமிருக்கிறது.வனவிலங்குகளின் தொல்லைகளிலிருந்து பயிர்களைப் பாதுகாப்பதற்காக இரவில் காவலிருக்கும் பண்டைய பழக்கமே பாரி வேட்டையாக நிலவுகிறது. பாரி வேட்டை தற்போது தமிழகத்தில் சிவகங்கை மாவட்டம் பிரான் மலையில் ஒவ்வொரு ஆண்டும் ஒரு விழாவாக நடைபெறுகிறது. மாசி மாதத்தில் சிவராத்திரிக்கு மறுநாள் பாரி வேட்டைக்குச் செல்வது வழக்கம். இவ்வேட்டை வினை கருப்பணசாமி, அய்யனார்சாமி போன்ற வேட்டைக்காரச் சாமிகளின் வழிபாட்டுடன் தொடர்பு டையதாகவும் இருக்கிறது.
விழா நாளன்று வேட்டைக் கொம்பினால் ஒலி எழுப்பப்படும். அப்போது வேட்டைக்குச் செல்வோரெல்லாம் ஒருங்கே கூடிவிடுவர். கலந்து கொள்பவர்கள் பூசைப் பொருட்களையும் சமையல் பொருட்களையும் உடன் கொண்டு வருவர். வேட்டைக்காரசாமியினை வழிபட்ட பின் மலைப் பகுதிக்குச் செல்வர். உடன் கம்பு, ஈட்டி, அரிவாள் போன்ற ஆயுதங்களையும் எடுத்து வருவர். வேட்டைநாயும் உடன் வருவதுண்டு. முதல் வேட்டையில் முயல் சாய்ந்ததாகக்
கொள்ளலாம். அதன் தலையினைத் திருப்பி ஒரு புல்லினை எடுத்து அதன் வாயில் வைப்பர். இப்புல்தான் முயலின் வாழ்வில் கடைசிப் புல் என்பதைச் சுட்டுவதற்காகவே இச்செய்கை மேற்கொள்ளப் படுகிறது.
முயலினை வேட்டையாடியவர் முயலின் காதளவுவைத்துக் தலையினை வெட்டிக் கொடுப்பார். இதற்கு 'தரம்' என்று பெயர். இவ்வாறே வேட்டையாடிய மற்றவற்றிலிருந்தும் தலையை மட்டும் வெட்டி எடுப்பர். முயலின் வயிற்றினைக் கிழித்து, ஈரலை மட்டும் வெளியே எடுத்துக் கம்பியில் கோர்த்துத் தீயில் வாட்டுவர். பின் அதனைப் பூசைப் பொருளாக வைத்து வேட்டைக்காரச் சாமியை வழிபடுவர். வேட்டை கிடைத்தமைக்கு நன்றி சொல்வர். இன்னும் அதிக வேட்டை கிடைக்க வேண்டும் என்று விரும்பி ஈரலைப் பிய்த்து நான்கு திசைகளிலும் நான்கு துண்டுகளை எறிந்து விடுவர்.
வேட்டையாடிய விலங்குகளின் தலைக்கறியினையெல்லாம் ஒன்று சேர்த்து, எடுத்துச் சென்ற சமையல் பொருட்களை வைத்து உணவு தயாரிப்பர். வேட்டையாடிய விலங்குகளின் உடல் கறியைக் கொண்டு வந்து கிராமத்து மக்களுக்கும் பகிர்ந்தளிப்பர். வேட்டையின் போது புலி, சிறுத்தை, கரடி போன்ற கொடிய விலங்கினைக் கொன்றிருந்தால், கிராமத்திற்கு வந்து வண்டியில் அவ்விலங்கினைத் துக்கி நிறுத்தி தாரை, தம்பட்டை முழங்க ஊரெல்லாம் சுற்றி வருவர். தங்கள் வீரத்தினைக் காட்டுவதற்காக இப்படிச் செய்கின்றனர். பழங்காலத்தில் அரசர்கள், குறுநில மன்னர்கள், ஆங்கிலேய ஆட்சிகாலத்தில் ஜமீன்தார்கள் பாரி வேட்டையினைத் தலைமையேற்று நடத்தினார்கள்.
சிலம்பம் :
சிலம்ப விளையாட்டு கம்பு விளையாட்டென்றும், நெற்றிப்பொட்டுக் கம்பு விளையாட்டென்றும், உயில் சிலம்பு என்றும் அழைக்கப் படுகிறது. தமிழ்நாட்டில் சிலம்பம் என அழைக்கப்படும் இவ்வீர விளையாட்டு, மராட்டிய நாட்டில் லாட்டி என்றும், குஜராத்தில் டால்லக்கடி என்றும், வங்காள நாட்டில் லாடிகீலா என்றும், கர்நாடகாவில் தண்டா வரிசை என்றும், ஆந்திராவில் கரடி ஆட்டம் என்றும், கேரளாவில் நெடுவடி என்றும் அழைக்கப் படுகிறது. சிலம்புதல் என்றால் ஒலித்தல் என்று பொருளாகும். கையிலுள்ள கம்பினை அடித்து ஒலியெழுப்பி விளையாடப்
பெறுவதால் இவ்விளையாட்டு சிலம்பு என்று பெயர் பெற்றது.
சிலம்ப விளையாட்டு பயிற்சி நிறைந்த வீரவிளையாட்டு ஆகும். இதற்கான பயிற்சியைத் தருபவர் சிலம்ப வாத்தியார் என்றழைக்கப்படுகிறார். சிலம்ப வாத்தியார் நம்பிக்கையானவர்க்கு மட்டும் சிலம்ப விளையாட்டைக் கற்றுத் தருவார். இவ்வாறு ரகசியக்கலையாக சிலம்ப விளையாட்டு போற்றப்படுவதால், இவ்விளையாட்டு வளர்ச்சியடையவில்லை எனலாம். விளையாட்டில் ஈடுபடுவதற்கு நீளமான கம்பு வேண்டும். விளையாடுபவரின் உயரத்திற்களவாய்க் கம்பின் நீளம் இருக்கும். பெரும்பாலும் மூங்கில் கம்புகளையே பயன்படுத்துவர்.
கம்பு வீசுந்திறன், காலடி எடுத்து வைக்கும் முறை, வேகமாகச் செயல்படும் திறமை இம்மூன்றும் சிலம்ப விளையாட்டின் அடிப்படைக் கூறுகளாக உள்ளன. இக்கூறுகள் அனைத்தையும் கைவரப் பெற்றவர் 'வீடுகட்டுதல்' என்ற முறையில் தேர்ச்சி அடைந்தவராகிறார். பகைவர் கம்பு தன் உடல் மேல் படாத வண்ணம் தன் கம்புவீச்சுத் திறமையால் தடுத்தலை வீடுகட்டுதல் என்றும், கோட்டை கட்டுதல் என்றும் சொல்வர். விளையாட்டின் துவக்கத்தில் வணக்கம் செலுத்துதல் என்ற முறை உண்டு. முதலில் இறைவணக்கமும், அடுத்து குருவணக்கமும் இடம் பெறும். போட்டி விளையாட்டாக இருந்தால், எதிர்த்து விளையாடக் கூடியவர்க்கும் வணக்கம் செலுத்துவர். இது தமிழர் விளையாட்டின் சிறப்பு முறையாக வழங்கி வருகிறது.
எதிரியின் கம்பு தன் உடல் மேல் படாமல் தடுத்தல், தன்னுடைய கம்பினால் எதிரியின் உடலைத்தொடுதல் ஆகிய செயல்களைக் கொண்டு வெற்றி, தோல்வி நிர்ணயிக்கப்படுகிறது. கம்பின் நுனியில் வண்ணப் பொடியினைத் தடவியிருப்பர். சிலம்பம் போட்டியில் விளையாடுபவர்களின் உடலில் எத்தனைத் தடவைகள் கம்பின் நுனி பட்டிருக்கிறது என்பதனை வண்ணப் பொடியின் துணைக் கொண்டு கணக்கிட்டும் வெற்றி தோல்வியை நிர்ணயிப்பர். தமிழகத்தில் சிலம்ப விளையாட்டு தற்காப்பு கலையாகவும், வீரவிளையாட்டாகவும், விழாக் காலங்களில் கேளிக்கையாட்டமாகவும், பாடல்பாடியும் விளையாடப் பெறுகிறது.
புலிவேடம் :
இது வீரவிளையாட்டான சிலம்பத்தின் இன்னொரு வடிவமாகும். விளையாடுபவர்கள் உண்மை யிலேயே புலி வேடந்தரித்து ஆடுவதால் இவ்விளையாட்டுக்குப் புலிவேடம் என்று பெயர் வந்தது.சிலம்ப விளையாட்டில் தனக்கு நிகர் எவருமில்லை என்றகுறிப்பினை வெளிப்படுத்துவது இவ்வீர விளையாட்டின் நோக்கமாக அமைகிறது.
புலிவேடமிடுபவர் கையில் புலிநகம் மாட்டியிருப்பர். உடல் முழுவதும் புலியினைப் போல வரிக்கோடுகள் போடப்பட்டிருக்கும். இரும்பு வளையத்துடன் கூடிய நீண்ட வாலினை இடுப்பில் கட்டியிருப்பர். இவ்வாலைப் பிடிப்பதற்கென ஒருவர் பின்னால் நிற்பார். வேடமிடுபவர் ஆடும் ஆட்டத்திற்கேற்ப முன்னும் பின்னும் அவர் நடந்து கொடுக்க வேண்டும். எனவே, வால்பிடிப்ப வரும் சிலம்பப் பயிற்சியில் தேர்ச்சி அடைந்தவராக இருப்பர். இன்னொருவரும் புலிவேடமிட்டிருப்பார். ஆனால் இவருக்கு வால் பிடிப்பதற்கென யாரும் இருப்பதில்லை. எனவே, இவர் ஒண்டிப்புலி என்று அழைக்கப்படுகிறார். இரண்டு புலிகளுக்குமிடையே மோதல் வந்து விடக்கூடாது என்பதற்காக மூங்கில் கம்பினைக் குறுக்கே வைத்துப் பிடித்தபடி இருவர் நிற்பர்.
சிலம்புப் பயிற்சி அளித்த ஆசிரியர் வீட்டிலிருந்து ஆட்டம் துவங்கும். நகர் மொட்டு என்றவாத்தியத்தின் ஒலிக்கேற்ப புலியாக இருப்பவரும், ஒண்டிப் புலியாக இருப்பவரும் பாவனை விளையாட்டுகளில் ஈடுபடுவர். பாவனை விளையாட்டுகள் சிலம்பப் பயிற்சியுடன் தொடர்புடைய தாக இருக்கும். சில சமயங்களில் கெளரவப் பிரச்சினைகள் ஏற்பட்டு இருபுலிகளாக இருப்பவர் களுக்கும் மோதல் வந்துவிடவும் கூடும். அச்சமயம் ஒண்டிப் புலிக்காரர் பக்கத்தில் ஓர்ஆடு நிறுத்தப்பட்டிருக்கும். புலி வேடமிட்டவர் நடுவிலுள்ள கம்பினைத் தாண்டி வந்து, அவ்வாட்டினைப் பல்லினால் கடித்துத் தன்பக்கம் துக்கியெறிய வேண்டும். ஆட்டினைத்துக்க விடாமல் ஒண்டிப்புலிக்காரர் கம்பு வீச்சினால் தடை செய்வார். புலியாக இருப்பவர் தன் கம்பு வீச்சுத் திறமையால் தடைகளையெல்லாம் தகர்த்தெறிந்து செயல்பட வேண்டும்.
சிலம்ப விளையாட்டில் தன்னை யாராலும் எதிர்க்க முடியாது அல்லது எதிர்த்தாலும் வெல்ல முடியாது என்று நினைப்பவர் புலிவேடத்தின் போது இரட்டை வாலினைக் கட்டுவதுண்டு. அச்சமயம் உள்ளூர் காரரோ, விழாவினைப் பார்க்க வந்தவரோ போட்டிக்கு இழுத்தால் போட்டி விளையாட்டு துவங்கி விடும். விழாக் காலத்தில் நடைபெறும் இவ்வாட்டம் சிலம்ப வாத்தியாரின் வீட்டிலிருந்து துவங்கி கோயிலுடன் முடிவு பெற்று விடும். போட்டியாட்டத்தில் ஈடுபட்ட வராயிருந்தால் மனவேற்றுமை நீங்கி ஒன்றாகத் தெய்வத்தினை வணங்குவர்.
சடுகுடு :
இவ்விளையாட்டு பலிஞ்சடுகுடு எனவும், பலீன் சடுகுடு எனவும் வழக்கில் வழங்கப் பெறும். பலிஞ்சப்பளம் என ஆந்திராவிலும், வங்காளத்திலும், குடுடுடூ என மகாராட்டிரத்திலும் அழைக்கப்பட்டு வருகிறது.
பழந்தமிழ்நாட்டில் அரசர்களிடையே நிரைகளைக் கவருபவர் (வெட்சித்திணை) கவரப்பட்ட நிரைகளை மீட்பவர் (கரந்தைத் திணை) என இரு கட்சியினர் இருந்தனர். இது தரப்பினருக்குமிடையே அவரவர் நாட்டின் எல்லைக் கோடு அமைந்திருக்கும். நிரை கவர வருபவர்களை வரவிடாமல் வீரர்கள் காவல் காத்து நிற்பர். காவலைக் கடந்து நிரையினைக் கவர்ந்து வருதல் வேண்டும். நிரைகளை (மாட்டு மந்தையை) கவர வருபவர் தம்மை வளைத்துப் பிடிக்கும் எதிர்கட்சி வீரரிடம் போரிட்டுத் திரும்ப மீள்வர். மீறிவந்து தம் நாட்டு எல்லையினை அடைந்து விட்டால் எதிர்படையினர் ஒன்றும் செய்ய இயலாது. மாறாக, எல்லைக் கோட்டை அடையும் முன் பிடிபட்டு விட்டால் சிறையிலிடப்படுவார். போர் முடிந்தவுடன் சிறைபட்ட வீரர் மறுபடியும் தம் நாட்டை அடைவர். நிரைகவர அல்லது நிரை மீட்கச் சென்றதால் ஏற்பட்ட போரின் முடிவு வெற்றி அல்லது தோல்வியில் முடிவுறும். போருக்கு செல்வதற்கு முன் தங்கள் பக்கமே வெற்றி கிட்ட வேண்டுமென்று இருதரப்பினருமே காளியை வணங்கினர். இச்சமயம் சடுகுடுப்பை அல்லது குடுகுடுப்பை என்ற பறையால் ஒலியெழுப்பி, பலி கொடுத்து வழிபட்டனர். இப்போர்ச் செயல் பாட்டின் தொடர்ச்சியால் பலிஞ்சடுகுடு என்ற பெயர் கொண்ட விளையாட்டு பழந்தமிழரிடையே உருவானது. இன்றும் தமிழ்நாட்டு கிராமங்களில் விளையாடப்படுகிறது. வரையறுக்