உலகப் பழம் பெரும்மொழிகளில் ஒன்றான தமிழை, பழங்காலத்தில் மன்னர்களும் அறிஞர்களும் மக்களும் காத்து வளர்த்தனர். குறிப்பாக பாண்டியர்கள் சங்கம் வைத்துத் தமிழ் வளர்த்தனர். இந்த காலமே சங்ககாலம் எனப்படும். இந்த சமயத்தில் இயற்றப்பட்ட நூல்களுக்கு சங்கஇலக்கியம் என்று பெயர். இச் சங்கம் முதற் சங்கம், இடைச் சங்கம், கடைச் சங்கம் என மூன்று வகைப்பட்டது.
முதற் சங்கம் : இன்றய குமரிக்கும் தெற்கே அப்போது இருந்த தென்மதுரையில் பாண்டியர்களால் நிறுவப்பட்டது முதற் சங்கம். சுமார் 4440 ஆண்டுகள் இச்சங்கம் நிலவியது. சிவபெருமான், முருகப்பெருமான்,அகத்தியர் முதலான 4449 புலவர்கள் இதில் இருந்தனர். பரிபாடல், முதுநாரை, முதுகுருகு முதலிய நூல்கள் இச்சங்க காலத்தில் இயற்றப் பட்டது. அகத்தியம் இச்சங்கத்தின் இலக்கண நூல். காய்சின வழுதி முதல் கடுங்கோன் வரை 89 பாண்டியர்கள் இதற்கு புரவலராக இருந்தனர்.
இடைச் சங்கம்: குமரியாறு, பஃருளியாறு இவறிற்கு இடைப் பட்ட பகுதியில் கபாடபுரத்தில் இச் சங்கம் அமைக்கப் பட்டது. சுமார் 3700 ஆண்டுகள் இச்சங்கம் நிலவியது. அகத்தியர், தொல்காப்பியர் முதலான 3700 புலவர்கள் இதில் இருந்தனர்.கலி, குருகு, வெண்டாளி முதலிய நூல்கள் இச்சங்க காலத்தில் இயற்றப் பட்டது. அகத்தியம், தொல்காப்பியம் இச்சங்கத்தின் இலக்கண நூல்களாக அமைந்தது. வெண்தேர்ச் செழியன் முதல் முடத்திருமாறன் வரை 59 பாண்டியர்கள் இதற்கு புரவலராக இருந்தனர்.
கடைச் சங்கம்: தற்போதைய மதுரையில் இச்சங்கம் அமைக்கப்பட்டது. சுமார் 1850 ஆண்டுகள் இச்சங்கம் நிலவியது.சிறுமேதாவியார், சேந்தம் பூதனார் முதலான 449 புலவர்கள் இதில் இருந்தனர். நெடுந்தொகை, குருந்தொகை, நற்றினை, பரிபாடல், பத்துப்பாட்டு முதலிய நூல்கள் இச்சங்க காலத்தில் இயற்றப் பட்டது. அகத்தியம், தொல்காப்பியம் இச்சங்கத்தின் இலக்கண நூல்களாக அமைந்தது. முடத்திருமாறன் முதல் உக்கிரப் பெருவழுதி வரை 49 பாண்டியர்கள் இதற்கு புரவலராக இருந்தனர்.
சிலர் சங்கமே இல்லை என்றும்,சிலர் ஒரு சங்கம் மட்டுமே இருந்ததாகவும் கூறுகின்றனர்.ஆனால் மூன்று சங்கங்கள் இருந்ததற்க்கு பல சான்றுகள் இருக்கின்றன.
சான்றுகள்:
தென்மதுரையும்,கபாடபுரமும் கடல் கோள்களால் அழிந்திருக்க வேன்டும் என்பது ஹெக்கல்,ஸ்காட்,எலியட் போன்ற மேலை நாட்டு ஆரய்ச்சியாளர்களின் ஆய்வு தெரிவிக்கிறது.
இடைச்சங்கம் இருந்த கபாடபுரத்தினைப் பற்றி வால்மீகி,வியாசர்,சாணக்கியர் போன்றவர் அவரவர் எழுதிய நூல்களில் குறிப்பிடுகின்றனர்.
இவை கடல் கோளால் அழிந்த செய்தி
"மலிதிரை ஊர்ந்துதன் மண்கடல் வெளவலின்" என்ற கலித்தொகைப் பாடலிலும்,
"பஃறுளி ஆற்றுடன் பன்மலை அடுக்கடுத்துக்
குமரிக்கோடும் கொடுங்கடல் கொள்ள" என்ற சிலப்பதிகாரப் பாடலிலும் கிடைத்து இருக்கிறது.
சின்னமனூர்ச் செப்பேடுகளில் காணப்பட்ட "மகாபாரதம் தமிழ்ப்படுத்தும் மதுராபுரிச் சங்கம் வைத்தும்" என்ற குறிப்பு உறுதி செய்கின்றது.
மேலும் பெரிப்ளூஸ்,மகாவம்சம்,இராசாவளி முதலிய வரலாற்று நூல்கள் தமிழ்ச் சங்கம் இருந்ததை உறுதி செய்கின்றன.