New Register   -  Login     
Tamil Mozhi - Literatures
 - தமிழ்மொழி முகப்பு » இலக்கியங்கள் » இலக்கிய நூல்கள் » எட்டுத்தொகை »
சேனல்கள்
இணைப்புகள்

நற்றிணை ( Narrinai )

 
[1] [2] [3] [4] [5] [6] [7] [8] [9] [10] [11] [12] [13] [14] [15] [16]
 
 

குறிப்பு :

இந் நூல் 9 அடிச் சிற்றெல்லையும் 12 அடி பேரெல்லையும் உடையது. 175 புலவர்களால் பாடப்பெற்றது. தற்போது 192 புலவர்கள் பெயர்கள் காணப்படுகின்றன. இதைத் தொகுத்தவர் யார் என தெரியவில்லை தொகுப்பித்தவர் பன்னாடு தந்த பாண்டியன் மாறன் வழுதி ஆவார்.

1. குறிஞ்சி

நின்ற சொல்லர்; நீடுதோன்று இனியர்;
என்றும் என் தோள் பிரிபு அறியலரே'
தாமரைத் தண் தாது ஊதி, மீமிசைச்
சாந்தில் தொடுத்த தீம் தேன் போல,
புரைய மன்ற, புரையோர் கேண்மை;
நீர் இன்று அமையா உலகம் போலத்
தம் இன்று அமையா நம் நயந்தருளி,
நறு நுதல் பசத்தல் அஞ்சிச்
சிறுமை உறுபவோ? செய்பு அறியலரே!

(பிரிவு உணர்த்திய தோழிக்குத் தலைவி சொல்லியது.-கபிலர்)

2. பாலை

அழுந்துபட வீழ்ந்த பெருந் தண் குன்றத்து,
ஒலி வல் ஈந்தின் உலவைஅம் காட்டு,
ஆறு செல் மாக்கள் சென்னி எறிந்த
செம் மறுத் தலைய, நெய்த்தோர் வாய,
வல்லியப் பெருந் தலைக் குருளை, மாலை,
மான் நோக்கு இண்டு இவர் ஈங்கைய சுரனே;
வை எயிற்று ஐயள் மடந்தைமுன் உற்று
எல்லிடை நீங்கும் இளையோன் உள்ளம்,
காலொடு பட்ட மாரி
மால் வரை மிளிர்க்கும் உருமினும் கொடிதே!

(உடன் போகாநின்றாரை இடைச் சுரத்துக் கண்டார் சொல்லியது.-பெரும்பதுமனார்)

3. பாலை

ஈன் பருந்து உயவும் வான் பொரு நெடுஞ் சினைப்
பொரி அரை வேம்பின் புள்ளி நீழல்,
கட்டளை அன்ன வட்டு அரங்கு இழைத்து,
கல்லாச் சிறாஅர் நெல்லி வட்டு ஆடும்
வில் ஏர் உழவர் வெம் முனைச் சீறூர்ச்
சுரன்முதல் வந்த உரன் மாய் மாலை
உள்ளினென் அல்லெனோ, யானே-உள்ளிய
வினை முடித்தன்ன இனியோள்
மனை மாண் சுடரொடு படர் பொழுது எனவே?

(முன் ஒரு காலத்துப் பொருள்வயிற் பிரிந்த தலைமகன் பின்னும் பொருள் கடைக் கூட்டிய நெஞ்சிற்குச் சொல்லியது.-இளங்கீரனார்)

4. நெய்தல்

கானல் அம் சிறுகுடிக் கடல் மேம் பரதவர்
நீல் நிற புன்னைக் கொழு நிழல் அசைஇ,
தண் பெரும் பரப்பின் ஒண் பதம் நோக்கி,
அம் கண் அரில் வலை உணக்கும் துறைவனொடு,
'அலரே அன்னை அறியின், இவண் உறை வாழ்க்கை
அரிய ஆகும் நமக்கு' எனக் கூறின்,
கொண்டும் செல்வர்கொல்-தோழி!-உமணர்
வெண் கல் உப்பின் கொள்ளை சாற்றி,
கண நிரை கிளர்க்கும் நெடு நெறிச் சகடம்
மணல் மடுத்து உரறும் ஓசை கழனிக்
கருங் கால் வெண் குருகு வெரூஉம்
இருங் கழிச் சேர்ப்பின் தம் உறைவின் ஊர்க்கே?

(தலைவன் சிறைப்புறத்தானாக, தோழி அலர் அச்சம் தோன்றச் சொல்லி வரைவு கடாயது.-அம்மூவனார்)

5. குறிஞ்சி

நிலம் நீர் ஆர, குன்றம் குழைப்ப,
அகல் வாய்ப் பைஞ் சுனைப் பயிர் கால்யாப்ப,
குறவர் கொன்ற குறைக் கொடி நறைப் பவர்
நறுங் காழ் ஆரம் சுற்றுவன அகைப்ப,
பெரும் பெயல் பொழிந்த தொழில எழிலி
தெற்கு ஏர்பு இரங்கும் அற்சிரக் காலையும்,
அரிதே, காதலர்ப் பிரிதல்-இன்று செல்
இளையர்த் தரூஉம் வாடையொடு
மயங்கு இதழ் மழைக் கண் பயந்த, தூதே.

(தலைவன் செலவுக் குறிப்பு அறிந்து வேறுபட்ட தலைவிக்குத் தோழி சொல்லியது.-பெருங்குன்றூர்கிழார்)

6. குறிஞ்சி

நீர் வளர் ஆம்பற் தூம்புடைத்திரள் கால்
நார் உரித்தன்ன மதன் இல் மாமை,
குவளை அன்ன ஏந்து எழில் மழைக் கண்,
திதலை அல்குல், பெருந் தோள், குறுமகட்கு
எய்தச் சென்று செப்புநர்ப் பெறினே,
'இவர் யார்?' என்குவள் அல்லள்; முனாஅது,
அத்தக் குமிழின் கொடு மூக்கு விளை கனி
எறி மட மாற்கு வல்சி ஆகும்
வல் வில் ஓரி கானம் நாறி,
இரும் பல் ஒலிவரும் கூந்தல்
பெரும் பேதுறுவள், யாம் வந்தனம் எனவே.

(இரவுக்குறிப்பாற்பட்டு ஆற்றானாய தலைவன், தோழி கேட்ப, தன்நெஞ்சிற்குச் சொல்லியது.-பரணர்)

7. பாலை

சூருடை நனந் தலைச் சுனை நீர் மல்க,
பெரு வரை அடுக்கத்து அருவி ஆர்ப்ப,
கல் அலைத்து இழிதரும் கடு வரற் கான் யாற்றுக்
கழை மாய் நீத்தம் காடு அலை ஆர்ப்ப,
தழங்கு குரல் ஏறொடு முழங்கி, வானம்
இன்னே பெய்ய மின்னுமால்-தோழி!
வெண்ணெல் அருந்திய வரி நுதல் யானை
தண் நறுஞ் சிலம்பில் துஞ்சும்
சிறியிலைச் சந்தின வாடு பெருங் காட்டே.

(பட்ட பின்றை வரையாது கிழவோன் நெட்டியிடைக் கழிந்து பொருள்வயிற்பிரிய,ஆற்றாளாய தலைவிக்குத்தோழிசொல்லியது.-நல்வெள்ளியார்)

8. குறிஞ்சி

அல்கு படர் உழந்த அரி மதர் மழைக்கண்,
பல் பூம் பகைத் தழை நுடங்கும் அல்குல்,
திரு மணி புரையும் மேனி மடவோள்
யார் மகள்கொல்? இவள் தந்தை வாழியர்!
துயரம் உறீஇயினள் எம்மே: அகல்வயல் 5
அரிவனர் அரிந்தும் தருவனர்ப் பெற்றும்
தண் சேறு தாஅய், மதனுடை நோன் தாள்
கண் போல் நெய்தல் போர்வில் பூக்கும்
திண் தேர்ப் பொறையன் தொண்டி-
தன் திறம் பெறுக, இவள் ஈன்ற தாயே!

(இயற்கைப் புணர்ச்சி இறுதிக்கண் தலைமகளை ஆயத்தொடும் கண்ட தலைமகன்சொல்லியது.)

9. பாலை

அழிவிலர் முயலும் ஆர்வ மாக்கள்
வழிபடு தெய்வம் கண் கண்டாஅங்கு,
அலமரல் வருத்தம் தீர, யாழ நின்
நல மென் பணைத் தோள் எய்தினம்; ஆகலின்,
பொரிப் பூம் புன்கின் அழற் தகை ஒண் முறி
சுணங்கு அணி வன முலை அணங்கு கொளத் திமிரி,
நிழல் காண்தோறும் நெடிய வைகி,
மணல் காண்தோறும் வண்டல் தைஇ,
வருந்தாது ஏகுமதி-வால் எயிற்றோயே!
மா நனை கொழுதி மகிழ் குயில் ஆலும்
நறுந் தண் பொழில, கானம்;
குறும் பல் ஊர, யாம் செல்லும் ஆறே.

(உடன்போகாநின்ற தலைமகன் தலைமகட்கு உரைத்தது.-பாலை பாடிய பெருங்கடுங்கோ)

10. பாலை

அண்ணாந்து ஏந்திய வன முலை தளரினும்,
பொன் நேர் மேனி மணியின் தாழ்ந்த
நல் நெடுங் கூந்தல் நரையொடு முடிப்பினும்,
நீத்தல் ஓம்புமதி-பூக் கேழ் ஊர!
இன் கடுங் கள்ளின் இழை அணி நெடுந் தேர்க்
கொற்றச் சோழர் கொங்கர்ப் பணீஇயர்,
வெண் கோட்டு யானைப் போஒர் கிழவோன்
பழையன் வேல் வாய்த்தன்ன நின்
பிழையா நல் மொழி தேறிய இவட்கே.

(உடன்போக்கும் தோழி கையடுத்தது.)

11. நெய்தல்

பெய்யாது வைகிய கோதை போல
மெய் சாயினை, அவர் செய் குறி பிழைப்ப;
உள்ளி நொதுமலர் நேர்பு உரை தௌளிதின்
வாரார் என்னும் புலவி உட்கொளல்
ஒழிகமாள நின் நெஞ்சத்தானே;
புணரி பொருத பூ மணல் அடைகரை,
ஆழி மருங்கின் அலவன் ஓம்பி,
வலவன் வள்பு ஆய்ந்து ஊர,
நிலவு விரிந்தன்றால் கானலானே.

(காப்பு மிகுதிக்கண்இடையீடுபட்டு ஆற்றாளாய தலைமகட்கு, தலைமகன்சிறைப்புறத்தானாகத் தோழி சொல்லியது.- உலோச்சனார்)

12. பாலை

விளம்பழம் கமழும் கமஞ்சூற்குழிசிப்
பாசம் தின்ற தேய் கால் மத்தம்
நெய் தெரி இயக்கம் வெளில்முதல் முழங்கும்
வைகு புலர் விடியல் மெய் கரந்து, தன் கால்
அரி அமை சிலம்பு கழீஇ, பல் மாண்
வரி புனை பந்தொடு வைஇய செல்வோள்,
'இவை காண்தோறும் நோவர்மாதோ;
அளியரோ அளியர் என் ஆயத்தோர்!' என
நும்மொடு வரவு தான் அயரவும்,
தன் வரைத்து அன்றியும் கலுழ்ந்தன கண்ணே.

(தோழி உடன்போக்கு அஞ்சுவித்தது.- கயமனார்)

13. குறிஞ்சி

எழாஅஆகலின், எழில் நலம் தொலைய
அழாஅதீமோ, நொதுமலர் தலையே!-
ஏனல் காவலர் மா வீழ்த்துப் பறித்த
பகழி அன்ன சேயரி மழைக் கண்,
நல்ல பெருந் தோளோயே! கொல்லன்
எறி பொன் பிதிரின் சிறு பல தாஅய்
வேங்கை வீ உகும் ஓங்கு மலைக் கட்சி
மயில் அறிபு அறியாமன்னோ;
பயில் குரல் கவரும் பைம் புறக் கிளியே.

(இயற்கைப்புணர்ச்சியின் பிற்றை ஞான்று, தலைவியின் வேறுபாடு கண்ட தோழி, தலைவி மறைத்தற்குச் சொல்லியது.- கபிலர்)

14. பாலை

தொல் கவின் தொலைய, தோள் நலம்சாஅய,
நல்கார் நீத்தனர்ஆயினும், நல்குவர்;
நட்டனர், வாழி!-தோழி!-குட்டுவன்
அகப்பா அழிய நூறி, செம்பியன்
பகல் தீ வேட்ட ஞாட்பினும் மிகப் பெரிது
அலர் எழச் சென்றனர் ஆயினும்-மலர் கவிழ்ந்து
மா மடல் அவிழ்ந்த காந்தள்அம் சாரல்,
இனம் சால் வயக் களிறு பாந்தட் பட்டென,
துஞ்சாத் துயரத்து அஞ்சு பிடிப் பூசல்
நெடு வரை விடரகத்து இயம்பும்
கடு மான் புல்லிய காடு இறந்தோரே.

(இயற்பழித்த தோழிக்குத் தலைவி இயற்பட மொழிந்தது.- மாமூலனார்)

15. நெய்தல்

முழங்கு திரை கொழீஇய மூரி எக்கர்,
நுணங்கு துகில் நுடக்கம் போல, கணம் கொள
ஊதை தூற்றும் உரவுநீர்ச் சேர்ப்ப!
பூவின் அன்ன நலம் புதிது உண்டு,
நீ புணர்ந்தனையேம் அன்மையின், யாமே
நேர்புடை நெஞ்சம் தாங்கத் தாங்கி,
மாசு இல் கற்பின் மடவோள் குழவி
பேஎய் வாங்கக் கைவிட்டாங்கு,
சேணும் எம்மொடு வந்த
நாணும் விட்டேம்; அலர்க, இவ் ஊரே!

(வரைவு நீட்டித்தவழி, தோழி தலைமகற்குச் சொல்லி வரைவு கடாயது.-அறிவுடைநம்பி)

16. பாலை

புணரின் புணராது பொருளே; பொருள்வயிற்
பிரியின் புணராது புணர்வே; ஆயிடைச்
செல்லினும், செல்லாய்ஆயினும், நல்லதற்கு
உரியை-வாழி, என் நெஞ்சே!-பொருளே,
வாடாப் பூவின் பொய்கை நாப்பண்
ஓடு மீன் வழியின் கெடுவ; யானே,
விழுநீர் வியலகம் தூணிஆக
எழு மாண் அளக்கும் விழு நெதி பெறினும்,
கனங்குழைக்கு அமர்த்த சேயரி மழைக் கண்
அமர்ந்து இனிது நோக்கமொடு செகுத்தனென்;
எனைய ஆகுக! வாழிய பொருளே!

(பொருள் கடைக்கூட்டிய நெஞ்சினை நெருங்கித் தலைவன் செலவு அழுங்கியது.-சிறைக்குடி ஆந்தையார்)

17. குறிஞ்சி

நாள் மழை தலைஇய நல் நெடுங்குன்றத்து,
மால் கடல் திரையின் இழிதரும் அருவி
அகல் இருங் கானத்து அல்கு அணி நோக்கி,
தாங்கவும் தகைவரை நில்லா நீர் சுழல்பு
ஏந்து எழில் மழைக் கண் கலுழ்தலின், அன்னை,
'எவன் செய்தனையோ? நின் இலங்கு எயிறு உண்கு' என,
மெல்லிய இனிய கூறலின், வல் விரைந்து,
உயிரினும் சிறந்த நாணும் நனி மறந்து,
உரைத்தல் உய்ந்தனனே-தோழி!-சாரல்,
காந்தள் ஊதிய மணி நிறத் தும்பி
தீம் தொடை நரம்பின் இமிரும்
வான் தோய் வெற்பன் மார்பு அணங்கு எனவே.

(முன்னிலைப்புறமொழியாகத் தலைமகள் தோழிக்குச்சொல்லியது.-நொச்சிநியமங்கிழார்)

18. பாலை

பருவரல் நெஞ்சமொடு பல் படர் அகல
வருவர் வாழி-தோழி!-மூவன்
முழு வலி முள் எயிறு அழுத்திய கதவின்,
கானல்அம் தொண்டிப் பொருநன், வென் வேல்
தெறல் அருந் தானைப் பொறையன், பாசறை,
நெஞ்சம் நடுக்குறூஉம் துஞ்சா மறவர்
திரை தபு கடலின் இனிது கண் படுப்ப,
கடாஅம் கழீஇய கதன் அடங்கு யானைத்
தடாஅ நிலை ஒரு கோட்டன்ன,
ஒன்று இலங்கு அருவிய குன்று இறந்தோரே.

(பிரிவிடை ஆற்றாளாகிய தலைவியைத் தோழி வற்புறுத்தியது.-பொய்கையார்)

19. நெய்தல்

இறவுப் புறத்து அன்ன பிணர் படு தடவு முதல்
சுறவுக் கோட்டன்ன முள் இலைத் தாழை,
பெருங் களிற்று மருப்பின் அன்ன அரும்பு முதிர்பு,
நல் மான் உழையின் வேறுபடத் தோன்றி,
விழவுக் களம் கமழும் உரவு நீர்ச் சேர்ப்ப!
இன மணி நெடுந் தேர் பாகன் இயக்க,
செலீஇய சேறிஆயின், இவளே
வருவை ஆகிய சில் நாள்
வாழாளாதல் நற்கு அறிந்தனை சென்மே!

(புணர்ந்து நீங்கிய தலைவனைத் தோழி வரைவு கடாயது.-நக்கண்ணையார்)

20. மருதம்

ஐய! குறுமகட் கண்டிகும்: வைகி,
மகிழ்நன் மார்பில் துஞ்சி, அவிழ் இணர்த்
தேம் பாய் மராஅம் கமழும் கூந்தல்
துளங்குஇயல் அசைவர, கலிங்கம் துயல்வர,
செறிதொடி தௌர்ப்ப வீசி, மறுகில்,
பூப் போல் உண்கண் பெயர்ப்ப நோக்கி,
சென்றனள்-வாழிய, மடந்தை!-நுண் பல்
சுணங்கு அணிவுற்ற விளங்கு பூணள்;
மார்புறு முயக்கிடை ஞெமிர்ந்த சோர் குழை,
பழம் பிணி வைகிய தோள் இணைக்
குழைந்த கோதை, கொடி முயங்கலளே.

(பரத்தையிற்பிரிந்து வந்த தலைமகன், 'யாரையும் அறியேன்' என்றாற்குத் தலைவி சொல்லியது; வாயிலாகப் புக்க தோழிதலைவிக்குச் சொல்லியதூஉம் ஆம்.-ஓரம்போகியார்)

21. முல்லை

விரைப் பரி வருந்திய வீங்கு செலல்இளையர்
அரைச் செறி கச்சை யாப்பு அழித்து அசைஇ,
வேண்டு அமர் நடையர், மென்மெல வருக!
தீண்டா வை முள் தீண்டி நாம் செலற்கு
ஏமதி, வலவ, தேரே! உதுக் காண்-
உருக்குறு நறு நெய் பால் விதிர்த்தன்ன
அரிக் குரல் மிடற்ற அம் நுண் பல் பொறிக்
காமரு தகைய கானவாரணம்
பெயல் நீர் போகிய வியல் நெடும் புறவில்
புலரா ஈர் மணல் மலிரக் கெண்டி,
நாள் இரை கவர மாட்டி, தன்
பேடை நோக்கிய பெருந்தகு நிலையே!

(வினை முற்றி மீள்வான்தேர்ப்பாகற்குச் சொல்லியது.-மருதன் இளநாகனார்)

22. குறிஞ்சி

கொடிச்சி காக்கும் அடுக்கற் பைந்தினை
முந்து விளை பெருங் குரல் கொண்ட மந்தி
கல்லாக் கடுவனொடு நல் வரை ஏறி,
அங்கை நிறைய ஞெமிடிக் கொண்டு, தன்
திரை அணற் கொடுங் கவுள் நிறைய முக்கி,
வான் பெயல் நனைந்த புறத்த, நோன்பியர்
கை ஊண் இருக்கையின் தோன்றும் நாடன்
வந்தனன்; வாழி-தோழி!-உலகம்
கயம் கண் அற்ற பைது அறு காலை,
பீளொடு திரங்கிய நெல்லிற்கு
நள்ளென் யாமத்து மழை பொழிந்தாங்கே.

(வரைவு மலிந்த தோழி, தலைமகட்குச் சொல்லியது.)

23. குறிஞ்சி

தொடி பழி மறைத்தலின், தோள்உய்ந்தனவே;
வடிக் கொள் கூழை, ஆயமோடு ஆடலின்,
இடிப்பு மெய்யது ஒன்று உடைத்தே; கடிக் கொள
அன்னை காக்கும் தொல் நலம் சிதைய,
காண்தொறும் கலுழ்தல் அன்றியும் ஈண்டு நீர்
முத்துப் படு பரப்பின் கொற்கை முன்துறைச்
சிறு பாசடைய செப்பு ஊர் நெய்தல்
தெண் நீர் மலரின் தொலைந்த
கண்ணே காமம் கரப்பு அரியவ்வே!

(தலைவி துயர் ஆற்றாமை உணர்ந்த தோழி வரைவு கடாயது.-கணக்காயனார்)

24. பாலை

'பார் பக வீழ்ந்த வேருடை விழுக்கோட்டு
உடும்பு அடைந்தன்ன நெடும் பொரி விளவின்,
ஆட்டு ஒழி பந்தின், கோட்டு மூக்கு இறுபு,
கம்பலத்தன்ன பைம் பயிர்த் தாஅம்
வெள்ளில் வல்சி வேற்று நாட்டு ஆர் இடைச்
சேறும், நாம்' எனச் சொல்ல-சேயிழை!-
'நன்று' எனப் புரிந்தோய்; நன்று செய்தனையே;
செயல்படு மனத்தர் செய்பொருட்கு
அகல்வர், ஆடவர்; அது அதன் பண்பே.

(பொருட்பிரிவுக்கு உடன்பட்ட தோழியைத் தலைவி உவந்து கூறியது. -கணக்காயனார்)

25. குறிஞ்சி

அவ் வளை வெரிநின் அரக்கு ஈர்த்தன்ன
செவ் வரி இதழ சேண் நாறு பிடவின்
நறுந் தாது ஆடிய தும்பி, பசுங் கேழ்ப்
பொன் உரை கல்லின், நல் நிறம் பெறூஉம்
வள மலை நாடன் நெருநல் நம்மொடு
கிளை மலி சிறு தினைக் கிளி கடிந்து அசைஇ,
சொல்லிடம் பெறாஅன் பெயர்ந்தனன்; பெயர்ந்தது
அல்லல் அன்று அது-காதல் அம் தோழி!-
தாது உண் வேட்கையின் போது தெரிந்து ஊதா
வண்டு ஓரன்ன அவன் தண்டாக் காட்சி
கண்டும், கழல் தொடி வலித்த என்
பண்பு இல் செய்தி நினைப்பு ஆகின்றே!

(தலைமகளைத் தோழி குறை நயப்புக் கூறியது.- பேரி சாத்தனார்)

 
Tag : Narrinai, Ettuthokai, Tamil Literature, Sanga Ilakkiyangal, Sangam, Tamil Noolgal, Tamil Noolkal
 
[ மேற்புறம் ]
தங்களுடைய படைப்புக்கள் தமிழ்மொழி.காம் இல் வெளியிட, படைப்புக்களை யுனிகோடில் டைப் செய்து admin@tamilmozhi.com என்ற முகவரிக்கு அணுப்பிவைக்கவும். படைப்புகள் 7 நாட்களுக்குள் வெளியிடப்படும்.
DownloadWings.com
முகப்பு | எங்களைப் பற்றி | உங்கள் கருத்து | விளம்பரத்திற்கு | தள வரைபடம்
Homepage | About Us | Write to Us | Advertise with us | Site Map
Copyright © 2006-2009 TamilMozhi.com. All rights reserved
Best viewed with Internet Explorer 3.x or Later