New Register   -  Login     
Tamil Mozhi - Literatures
 - தமிழ்மொழி முகப்பு » இலக்கியங்கள் » இலக்கிய நூல்கள் » பதினெண் கீழ்கணக்கு »
சேனல்கள்
இணைப்புகள்

திணைமொழி ஐம்பது (Thinaimozhiiympadhu)

 
 
 

குறிப்பு :-

இந் நூலில் குறிஞ்சி, பாலை, முல்லை, மருதம், நெய்தல் என்னும் ஐந்திணைகளுக்கும் பத்துப் பாடல்கள் உள்ளன. அதனால் இந்நூல் திணைமொழி ஐம்பது என ஐந்திணை ஐம்பதிலிருந்து வேறுபட்டு பெயர் பெற்றுள்ளது. இந் நூலை இயற்றியவர் கண்ணஞ் சேந்தனார்.

நூல்

1. குறிஞ்சி

புகழ்மிகு சாந்தெறிந்து புல்லெரி யூட்டிப்
புகைகொடுக்கப் பெற்ற புலவோர் - துகள்பொழியும்
வானுயர் வெற்ப! இரவின் வரல்வேண்டா
யானை யுடைய கரம். 1

கணமுகை கையெனக் காந்தள் கவின
மணமுகை யென்றெண்ணி மந்திகொண் டாடும்
விறன்மாலை நாட! வரிஅரிதாங் கொல்லோ
புனமும் அடங்கின காப்பு. 2

ஓங்கல் இறுவரைமேல் காந்தள் கடிகவினப்
பாம்பென ஓடி உரும்இடிப்பக் கண்டிரங்கும்
பூங்குன்ற நாடன் புணர்ந்தஅந் நாள்போலா
ஈங்கு நெகிழ்ந்த வளை. 3

ஏனல் இடத்திட்ட ஈர்மணிகொண்(டு) எல்லிடைக்
கானவர் மக்கள் கனலெனக் கைகாய்த்தும்
வானுயர் வெற்பன் வருவான்கொல் என்தோழி
மேனி பசப்புக் கெட. 4

விரைகமழ் சாரல் விளைபுனம் காப்பார்
வரையிடை வாரல்மின் ஐய! உரைகடியர்
வில்லினர் வேலர் விரைந்துசெல் அம்பினர்
கல்லிடை வாழ்நர் எமர். 5

யானை உழலும் மணிகிளர் நீள்வரைக்
கானக வாழ்க்கைக் குறவர் மகளிரேம்
|ஏனலுள் ஐய! வரவுமற்(று) என்னைகொல்
காணினும் காய்வர் எமர். 6

யாழும் குழலும் முழவும் இயைந்தன
வீழும் அருவி விறன்மலை நன்னாட!
மாழைமான் நோக்கியும் ஆற்றாள் இரவரின்
ஊரறி கெளவை தரும். 7

வேங்கை மலர வெறிகமழ் தண்சிலம்பின்
வாங்கமை மென்தோள் குறவர் மகளிரேம்
சோர்ந்து குருதி ஒழுகமற்(று) இப்புறம்
போந்த(து)இல் ஐய! களிறு. 8

பிணிநிறம் தீர்ந்து பெரும்பணைத்தோள் வீங்க
மணிமலை நாடன் வருவான்கொல் தோழ!
கணிநிறை வேங்கை மலர்ந்துவண்டு ஆர்க்கும்
அணிநிற மாலைப் பொழுது. 9

பலவின் பழம்பெற்ற பைங்கட் கடுவன்
எலஎன்(று) இணைபயிரும் ஏகல்சூழ் வெற்பன்
புலவுங் கொல் தோழி! புணர்வறிந்(து) அன்னை
செலவுங் கடிந்தாள் புனத்து. 10

2, பாலை

கழுநீர் மலர்க்கண்ணாய்! கெளவையோ நிற்கப்
பொருள்நீரார் காதலர் பொய்த்தனர் நீத்தார்
அழிநீர் வாகி அரித்தெழுந்து தோன்றி
வழிநீர் அறுத்த சுரம். 11

முரிபரல வாகி முரணழிந்து தோன்றி
எரிபரந்த கானம் இயைபொருட்குப் போவீர் !
அரிபரந்த வுண்கண்ணாள் ஆற்றாமை நும்மின்
தெரிவார்யார் தேரும் இடத்து. 12

ஓங்கு குருந்தோ(டு) அரும்பீன்று பாங்கர்
மராஅ மலர்ந்தன தோன்றி விராஅய்க்
கலந்தனர் சென்றார் வலந்தசொல் எல்லாம்
பொலந்தொடீஇ பொய்த்த குயில். 13

புன்னை பொரிமலரும் பூந்தண் பொழிலெல்லாம்
செங்கண் குயில்அக வும்போழ்து கண்டும்
பொருள்நசை உள்ளம் துரப்பத் துறந்தார்
வருநசை பார்க்கும்என் நெஞ்சு. 14

சிறுபுன் புறவொடு சிற்றெழால் சீறும்
நெறியரு நீள்சுரத்(து) அல்குவர்கொல் தோழி !
முறிஎழில் மேனி பசப்ப அருள்ஒழிந்(து)
ஆர்பொருள் வேட்கை அவர். 15

கருங்கால் மராஅம் நுணாவோ(டு) அலர
இருஞ்சிறை வண்டினம் பாலை முரல
அரும்பிய முள்ளெயிற்(று) அஞ்சொல் மடவாய்
விரும்புநாம் செல்லும் இடம். 16

கல்லதர் வாயில் கருந்துடி கள்பம்பும்
வில்லுழுது வாழ்நர் குறும்புள்ளும் போவர்கொல்
எல்வனை மென்தோள் நெகிழப் பொருள்நசைஇ
நல்கா துறந்த நமர். 17

கதிர்சுடக் கண்ணுடைந்து முத்தம் சொரியும்
வெதிர்பிணங்கும் சோலை வியன்கானம் செல்வார்க்(கு)
எதிர்வன போல்இலவே எவ்வளையோ கொன்னே
உதிர்வன போல உள. 18

கலையொடு மான்இரங்கும் கல்லதர் அத்தம்
நிலைஅஞ்சி நீள்சுரத்(து) அல்குவர்கொல் தோழி!
முலையொடு சோர்கின்ற பொன்வண்ணம் அன்னோ
வளையொடு சோரும்என் தோள். 19

ஏற்றிய வில்லின் எயினர் கடுஞ்சுரம்
பாற்றினம் சேரப் படுநிழல் கண்டஞ்சிக்
கூற்றின வல்வில் விடலையோ(டு) என்மகள்
ஆற்றுங்கொல் ஐய நடந்து. 20

3. முல்லை

அஞ்சனக் காயா மலரக் குருகிலை
ஒண்டொடி நல்லார் முறுவல் கவின்கொளத்
தண்கழற் கோடல் துடுப்(பு)ஈனக் காதலர்
வந்தார் திகழ்நின் தோள். 21

மென்முலைமேல் ஊர்ந்த பசலைமற்(று) என்னாங்கொல்
நன்னுதல் மாதராய்! ஈதோ நமர்வருவர்
பல்நிற முல்லை அரும்பப் பருவஞ்செய்(து)
இன்னிறம் கொண்ட(து)இக் கார். 22

சென்றார் வருவர் செறிதொடீஇ! காரிதோ
வெஞ்சின வேந்தர் முரசின் இடித்துரறித்
தண்கடல் நீத்தம் பருகித் தலைசிறந்து
இன்றையில் நாளை மிகும். 23

செஞ்சுணங்கின் மென்முலையாய்! சேர்பசலை தீர்இதோ
வஞ்சினம் சொல்லி வலித்தார் வருகுறியால்
வெஞ்சினம் பொங்கி இடித்(து)உரறிக் கார்வானம்
தண்பெயல் கான்ற புறவு. 24

கருவியல் கார்மழை கால்கலந்(து) ஏத்த
உருகு மடமான் பிணையோ(டு) உகளும்
உருவ முலையாய்! நம் காதலர் இன்னே
வருவர் வலிக்கும் போது. 25

இருங்கடல் மாந்திய ஏர்கொள் எழிலி
சுருங்கொடி முல்லை கவின முழங்கிப்
பெரும்பெயல் தாழப் பெயர்குறி செய்தார்
பொருந்த நமக்குரைத்த போழ்து. 26

ஆயர் இனம்பெயர்த்(து) ஆம்பல் அடைதாய்
பாய முழங்கிப் படுகடலுள் நீர்முகந்து
மாயிரு ஞாலம் இருள்கூர் மருண்மாலை
செயவர் செய்த குறி. 27

அதிர்குரல் ஏறோ(டு) அலைகடல் மாந்தி
முதிர்மணி நாகம் அனுங்க முழங்கிக்
கதிர்மறை மாலை கனைபெயல் தாழப்
பிதிரும் முலைமேல் கணங்கு. 28

கோடல்அம் கூர்முகை கோளரா நேர்கருதக்
காடெலாம் கார்செய்து முல்லை அரும்(பு)ஈன
ஆறெலாம் நுண்ணறல் வார் அணியிழாய்!
போதராய் காண்பாம் புறவு. 29

அருளி அதிரக் குருகிலை பூப்பத்
தெரிஆ இனம்நிறை தீம்பால் பிலிற்ற
வரிவனைத் தோளி! வருவார் நமர்கொல்
பெரிய மலர்ந்த(து)இக் கார். 30

4. மருதம்

பழனம் படிந்த படுகோட்(டு) எருமை
கழனி வினைஞர்க்(கு) எதிர்ந்த பறைகேட்(டு)
உரனிழிந்(து) ஓடும் ஒலிபுனல் ஊரன்
கிழமை யுடையன்என் தோட்டு. 31

கணைக்கால் நெடுமருது கான்ற நறுந்தா(து)
இணைக்கால் நீலத்(து) இதழ்மேல் சொரியும்
பணைத்தாள் கதிர்ச்செந்நெல் பாய்வயல் ஊரன்
இணைத்தான் எமக்குமோர் நோய். 32

கடையாயார் நட்பேபோல் காஞ்சிநல் ஊர!
உடைய இளநலம் உண்டாய் - கடைய
கதிர்முலை ஆகத்துக் கண்ணன்னார் சேரி
எதிர்நலம் ஏற்றுநின் றாய். 33

செந்நெல் விளைவய லூரன் சிலபகல்
தன்னலம் என்அலார்க்(கு) ஈயான் எழுபாண!
பாரித்த அல்குல் பணைத்தோளார் சேரியுள்
வாரிக்குப் புக்குநின் றாய். 34

வேனிற் பருவத்(து) எதிர்மலரேல் தூதும்
கூனிவண்(டு) அன்ன குளிர்வயல் நல்லூரன்
மாணிழை நல்லார் இளநலம் உண்டவர்
மேனி ஒழிய விடும். 35

செந்தா மரைலருஞ் செய்வயல் நல்லூர!
நொந்தான்மற்(று) உன்னைச் செயப்படுவ(து) என்னுண்டாம்
தந்தாயும் நீயே தரவந்த நன்னலம்
கொண்டாயும் நீஆயக் கால். 36

பல்காலும் வந்து பயின்றுரையல் பாண! கேள்
நெல்சேர் வயவல லூரன் புணர்ந்தநாள்
எல்வளைய மென்தோளேம் எங்கையர் தம்போல
நல்லஅருள் நாட்டம்இ லேம். 37

நல்வயல் ஊரன் நலமுரைத்தும் நீபாண!
சொல்லிற் பயின்றுரைக்க வேண்டா - ஒழிதிநீ
எல்லுநன் முல்லைத்தார் சேர்ந்த இருங்கூந்தல்
சொல்லுமவர் வண்ணம் சோர்வு. 38

கருங்கயத்(து) ஆங்கண கழுமிய நீலம்
பெரும்புற வாளைப் பெடைகதூஉம் ஊரன்
விரும்புநாள் போலான் வயின்நலம் உண்டான்
கரும்பின்கோ(து) ஆயினேம் யாம். 39

ஆம்பல் அணித்தழை ஆரம் துயல்வரும்
தீம்புனல் ஊரன் மகளிவள் ஆய்ந்தநறும்
தேமலர் நீலம் பிணையல் செறிமலர்த்
தாமரை தன்ஐயர் பூ. 40

5. நெய்தல்

நெய்தல் படப்பை நிறைகழித் தண்சேர்ப்பன்
கைதைசூழ் கானலுள் கண்டநாள் போலானான்
செய்த குறியும்பொய் யாயின ஆயிழையாய்!
ஐயகொல் ஆன்றார் தொடர்பு. 41

முத்தம் அரும்பும் முடத்தாள் முதுபுன்னை
தத்தும் திரைதயங்கும் தண்ணங் கடற்சேர்ப்ப!
சித்திரப் பூங்கொடி அன்னாட்(கு) அருள்ஈயாய்
வித்தகப் பைம்பூணின் மார்பு. 42

எறிசுறா நீள்கடல் ஓதம் உலாவ
நெறியிறாக் கொட்கும் நிமிர்கழிச் சேர்ப்பன்
அறிவுஅறா இன்சொல் அணியிழையாய்! நின்னில்
செறிவுஅறா செய்த குறி. 43

இளமீன் இருங்கழி ஓதம் உலாவ
மணிநீர் பரக்கும் துறைவ! தகுமோ
குணநீர்மை குன்றாக் கொடியன்னாள் பக்கம்
நினைநீர்மை இல்லா ஒழிவு. 44

கடல்கொழித்(து) ஈட்ட கதிர்மணி முத்தம்
படமணி அல்குல் பரதர் மகளிர்
தொடலைசேர்த்(து) ஆடும் துறைவ! என்தோழி!
உடலுள் உறுநோய் உரைத்து. 45

முருகியல் கானல் அகன்கரை யாங்கண்
குருதினம் ஆர்க்கும் கொடுங்கழிச் சேர்ப்ப
மருவி வரலுற வேண்டும்என் தோழி
உருவழி உன்நோய் கெட. 46

அணிபூங் கழிக்கானல் அற்றைநாள் போலான
மணியெழில் மேனி மலர்பசப்(பு) ஊரத்
துணிகடல் சேர்ப்பன் துறந்தான்கொல் தோழி!
தணியும்எள் மென்தோள் வளை. 47

கறங்கு மணிநெடுந்தேர் கண்வாள் அறுப்பப்
பிறங்கு மணல்மேல் அலவன் பரப்ப
வறங்கூர் கடுங்கதிர் வல்விரைந்து நீங்க
நிறங்கூரும் மாலை வரும். 48

மயில்கொல் மடவாள்கொல் மாநீர்த் திரையுள்
பயில்வதோர் தெய்வம்கொல் கேளீர்! குயில்பயிரும்
கன்னி இளஞாழல் பூம்பொழில் நோக்கிய
கண்ணின் வருந்தும்என் நெஞ்சு. 49

பவளமும் முத்தும் பளிங்கும் விரைஇப்
புகழக் கொணர்ந்து புற(வு) அடுக்கும் முன்றில்
தவழ்திரைச் சேர்ப்பன் வருவான்கொல் தோழி
திகழும் திருஅமர் மார்பு. 50

திணை மொழி ஐம்பது முற்றிற்று.

 
Tag : Thinaimozhiiympadhu, Pathinen Kezhkanakku, Tamil Literature, Sanga Ilakkiyangal, Sangam, Tamil Noolgal, Tamil Noolkal
 
[ மேற்புறம் ]
தங்களுடைய படைப்புக்கள் தமிழ்மொழி.காம் இல் வெளியிட, படைப்புக்களை யுனிகோடில் டைப் செய்து admin@tamilmozhi.com என்ற முகவரிக்கு அணுப்பிவைக்கவும். படைப்புகள் 7 நாட்களுக்குள் வெளியிடப்படும்.
ScriptWings.com
முகப்பு | எங்களைப் பற்றி | உங்கள் கருத்து | விளம்பரத்திற்கு | தள வரைபடம்
Homepage | About Us | Write to Us | Advertise with us | Site Map
Copyright © 2006-2009 TamilMozhi.com. All rights reserved
Best viewed with Internet Explorer 3.x or Later